நெசந்தானுங்க..

ஜனவரி 16-31

எது ஓடியதோ…

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது ஓடியதோ அதுவும் நன்றாகவே ஓடியது… எது படுத்ததோ அதுவும் நன்றாகவே படுக்கும்ங்கிற மாதிரி ஒரு ரெண்டு டயலாக்கை வச்சுக்கிட்டு காலங்காலமா ஒரு புத்தகத்தை ஓட்ட முடியுமா அப்படின்னு ஆச்சரியப்பட்டா, முடியும்கிறதுக்கு விடைதான் கீதை.

கடமையைச் செய்; பலனை எதிர்பாராதேன்னு கல்லாப்பெட்டியில உட்கார்ந்திருக்கிற முதலாளி, தன்னோட தொழிலாளிகளுக்குச் சொல்ற மாதிரி ஒரு ஸ்டிக்கரை ஒட்டி வச்சிருப்பாரு தலைக்குமேல! அடடடா! அந்த வாசகத்தை வச்சிக்கிட்டு இவனுங்க போடுற ஆட்டம் இருக்கே! இதைப் பெருமையாப் பேசுற எந்தப் பயலும் பலனை எதிர்பார்க்காம கடமையைச் செய்யமாட்டான். ஏன்னா அது காட்டுமிராண்டிக் காலத்துச் சிந்தனைன்னு தெரியும் அவனுக்கு!

இந்துக்களோட புனிதநூல் கீதைன்னு ஏதோ அபீசியல் அனௌன்ஸ்மெண்ட் மாதிரி சொல்றதை சைவர்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஆனாலும் அப்படித்தான் சொல்லி உலகம் முழுக்க ரீலா வுட்டுக்குவாங்க… இது இதே ரேஞ்சில இருந்தவரைக்கும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனா அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி ஆசிரியர் வீரமணி எழுதின கீதையின் மறுபக்கம் வந்ததும், கீதையைத் தூக்கிக்கிட்டு எந்தப் பக்கம் ஓடுறதுன்னு தெரியாம கோபாலபுரம் பக்கம் ஓடினாரு ராமகோபாலன். கலைஞரு ஒரு கையில கீதைய வாங்கிக்கிட்டு இன்னொரு கையில கீதையின் மறுபக்கத்தைக் கொடுத்து அனுப்பிட்டாரு.

இப்போ ரஷ்யாவில கேஸ் போட்டு, இது நம்பிக்கையற்றவர்களை இழிவுபடுத்துதுன்னு பிரச்சினை வந்ததும், சிண்டைத் தட்டிக்கிட்டு கிளம்பிட்டான் சில பேரு! இதெல்லாம் வேலைக்காகாதுன்னு ரஷ்யா, கைல கால்ல விழுந்து தடை வந்துவிடாமப் பார்த்துக்கிட்டாங்க இந்திய வெளியுறவுத்துறைக்காரங்க!

இந்தச் சமயத்தில இதுபத்தி பேஸ்புக் இணையதளத்தில் எழுதின பஞ்சாப் பத்திரிகையாளர் சம்பர் மேல வழக்குப் போட்டாங்க ஆர்.எஸ்.எஸ்.சைச் சேர்ந்த ஒரு அம்மா! அப்படி என்ன எழுதிட்டாரு கீதையைப் பத்தி? அப்படின்னு பார்த்தா பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள்னு கீதைல வந்திருக்கிறதைத்தான் அவரு எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்துக்கள் மனசைப் புண்படுத்திட்டாருன்னு கேஸ் போடுறதுக்கு முன்னாடி, கீதைல அப்படிச் சொல்லியிருந்தா கொளுத்துவோம்னுல்ல வேகம் கிளம்பியிருக்கணும். இருக்கிறத எடுத்துச் சொல்றது குத்தமா? இல்ல குத்தமான விசயம் புத்தகத்தில இருக்கிறது குத்தமா?

“அன்னா… உண்ணா சீசன்-3”

ஏர்டெல் சூப்பர் சிங்கர்னு ஒரு நிகழ்ச்சி டிவியில வந்தது; அப்புறம் ஜோடி நம்பர் ஒன்_னுன்னு ஒன்னு வந்தது. இதே மாதிரி எல்லா டிவியிலயும் வெவ்வேறு பேருல நிகழ்ச்சியெல்லாம் வந்துச்சு. அதில சில நிகழ்ச்சி நல்லாப் போச்சு… சிலது புட்டுக்கிச்சு. இருந்தாலும் மொதல்ல வந்த சூப்பர் சிங்கருக்கும், ஜோடி நம்பர் ஒன்னுக்கும் இருந்த மவுசு காரணமாக ஜோடி நம்பர் ஒன் சீசன்2, சீசன் 3-ன்னு 5,6 வரைக்கும் போயிடுச்சு. நாங்க பள்ளிக்கூடத்தில படிச்சதெல்லாம் சம்மர், வின்டர், ஆட்டம், ஸ்பிரிங்குனு நாலு சீசன்தான். இப்போ அதையெல்லாம் தாண்டுது இந்த புரோக்கிராம்லாம். ஆனா இந்தப் பாட்டு, நடனப் போட்டியெல்லாம் சரிகமப, சப்தஸ்வரங்கள், பாட்டுக்குப்பாட்டு, தில்லானா தில்லானா, மஸ்தானா மஸ்தானான்னு பத்து வருசத்துக்கு முன்னாடியே டிவியில ஒரு ரவுண்ட் வந்ததுதான். புது பாட்டில்ல அடைச்சுக்

குடுத்ததும் குப்புனு ஏறிடுச்சு…

இதே மாதிரிதான் நம்ம சந்தியாகிரகமும்… சாரி… சத்யாகிரகமும். உண்ணாவிரதம்னு சொல்லிட்டு ஆட்டுப்பாலை உள்ள எறக்குன பழைய காந்தி ஸ்டைல்ல, எலக்ரோ லைட் டையும் குளுக் கோசையும் உள்ள தள்ளிக்கிட்டு உண்ணாவிரதம்னு உட்கார்ந்தாரு அன்னா ஹசாரே. அப்புறம் போட்டிக்கடையை பாபா ராம்தேவ் ஆரம்பிச்சாரு. அகிம்சாமூர்த்தி மோடி செஞ்சாரு. அப்புறம் அந்தது நொந்தது, பீசாப் போனது, பல்லுப் புடுங்குனது எல்லாம் அங்கங்க இதே வேலையா திரிஞ்சாலும் அன்னா கோர் நிகோவாவுக்கு… அட… அன்னா ஹசாரேவுக்கு மவுசு இருந்துச்சு. அத்தோட போயிருந்தாலாவது கொஞ்சம் மிஞ்சியிருக்கும். ஏதோ… சரக்கடிச்சிட்டு வீக்கெண்டை (Weekend) சந்தோசமாகக் கொண்டாடலாம்னு நெனச்சவன் கையில கொடியைக் குடுத்து, கிரிக்கெட் பார்க்க அனுப்புன மாதிரி அன்னாவோட உண்ணாவிரதத் துக்கு அனுப்புச்சுங்க பன்னாட்டுக் கம்பெனி யெல்லாம்!

அது புரியாம, உணர்ச்சிவசப்பட்டு சிறைநிரப்பும் போராட்டம்னு உதார்விட ஆரம்பிச்சா பீரை நிரப்பும் போராட்டம் பண்றவன் வருவானா? அதனால வெற்றிகரமா புஸ்வானமாகிப் போச்சு. உலக வரலாற்றில் முதல்முறையாக ரிலையன்ஸ்= டாடா இணைந்து வழங்கிய அன்னா-உண்ணா சீசன் 3.

மும்பையில இருந்து மூட்டை கட்டிட்டு சவுக்கைத் தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு ஊரைப் பார்க்க கிளம்பிருச்சாம் காவிக் குல்லா! அத்வானி… மோடி… அன்னா… அடுத்த தேசபக்த திலகத்தைத் தேடிக்கிட்டிருக்காங்களாம் தேசியக் கொடியோடு! மீண்டும் உங்களை அடுத்த நிகழ்ச்சியில் புதுவகை வித்தைக்காரர்களுடன் சந்திக்கும்வரை பாரத் மாதா கீ ஜெ! சொல்லி விடைபெறுவது ஆர்…….எஸ்…….எ-ஸ்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *