வலிக்கிறது அவனுக்கும்…

ஜனவரி 16-31

– வீர.தமிழன்

செருப்பால் அடிப்பேன்
என்று யாரோ யாரையோ
திட்டுகிறபோது ஏனோ
செருப்பால் அடித்ததுபோல்
வலிக்கிறது
செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கும்!

எல்லா
பேருந்து நிறுத்தங்களுக்கு
அருகிலேயும்
பழைய கீற்றுகளாலோ
கோணிப் பைகளை ஒன்று சேர்த்தோ
வேயப்பட்டிருக்கிறது
ஒரு தாழ்வாரம்!

திரைப்பாடல்களுக்கு
முந்தைய
வானிலை அறிக்கையை
வாசித்துக்கொண்டிருக்கிறது
ஒரு வானொலி!

இருக்கை போட்டு
உட்காரச் செய்யவோ
எழுந்து நின்று
உங்களை வரவேற்கவோ
ஒருபோதும்
முடியாது அவனால்!

அவன் அலுவலகத்தில்
செருப்பை
உள்ளே விட்டுவிட்டு
நீங்கள்
வெளியே வந்து நிற்க வேண்டும்!

அது ஆய்
கையால் தொடக்கூடாது
என செருப்பை எடுத்து
விளையாட முயற்சிக்கும்போதெல்லாம்
தன் பேரக்குழந்தைகளுக்கு
அறிவுறுத்தத் தவறாத
சில பெருசுகள்,
தைத்து முடிந்த பிறகு
எவ்வளவு என்றே கேட்காமல்
போனால் போகட்டும் வைத்துக்கொள்
என்பதுபோல்
கொஞ்சம் சில்லறைகளை மட்டுமே
தந்துவிட்டு
நைசாக நழுவிக் கொள்ளும்போது
வாயடைத்து வெறிக்கத்தான்
முடிகிறது இவனால்!

படத்தில்
வாளேந்தி நிற்கும்
மதுரை வீரனுக்கு
கரைந்துகொண்டிருக்கிறது
ஒரு ஒற்றை ஊதுபத்தி!

வெயிலின் புழுக்கம்
குறைக்க வரும் அந்தியோடு
சேர்ந்தே வரும் தின வட்டிக்காரன்
இருசக்கர வாகனத்தில்
அமர்ந்துகொண்டே கைநீட்ட
கிடைத்த மொத்தக் காசையும்
கப்பம் கட்டிவிட்டு
போவோர் வருவோரின்
கால்களையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்
ஒண்டி வீரனின் வாரிசு ஒருவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *