குடும்பம், அரசு, பொருளாதாரம், சட்டம், வழக்கம், ஒழுக்கம், சமயம்,கல்வி போன்ற நிறுவனங்களே ஒரு மனித சமூகத்தை ஒருங்கிணைக்கும் காரணிகள். இவற்றில் குடும்பம் என்ற நிறுவனமே சமூகத்தின் அடித்தளமாக, ஆணிவேராக இருக்கின்றது.
தமிழைப் பொறுத்தவரை கூடி இருக்கும் இடம் என்ற அடிப்படையில் குடும்பம் என்ற சொல் உருவாகியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, பேமிலி (family) என்ற சொல் பேமுலஸ் (famulus) என்ற சொல்லில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். பேமுலஸ் என்றால், வீட்டு அடிமை என்று பொருள். அதாவது, ஒரு தலைவனின்கீழ் இருக்கும் அடிமைகள் முறை என்று ஏங்கல்ஸ் தெரிவிக்கிறார்.
பொதுவாக, குடும்பம் என்பது திருமணத்தால் பிணைக்கப்பட்ட மனிதர்களின் குழு. இந்த குழுவில் உள்ள மனிதர்கள், ஒரே வீட்டில் இருப்பவர் களாகவும், உறவுத்தொடர்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். குடும்பம் என்பது சமூக அமைப்பிற்கு அடிப்படையாக இருப்பதோடு அல்லாமல், ஒருவருடைய காம உணர்விற்கு வடிகாலாகவும், அதனால் பிறக்கும் குழந்தைகள் மூலமாக ஒரு இனம் அழியாமல் நிலைக்கச் செய்யும் எற்பாடாகவும் இருக்கின்றது.
குடும்பம் என்ற நிறுவனத்திற்கு, அதாவது கணவன் மனைவி என்ற அமைப்பிற்குக் காரணமாக இருப்பது திருமணம். திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். திருமண வாழ்க்கை முறை என்பது வரைமுறையற்ற பாலுறவில் தொடக்கி ஒருவன் ஒருத்தி பாலுறவு முறைவரை வந்துள்ளது. இன்னார் இன்னாரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நெறிமுறைகள் சமூக அமைப்புகளால் காலப்போக்கில் உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் வரன்முறையற்ற பாலுறவு இருந்த காலத்தில், ஆண்களும் பெண்களும் யார் யாருடன் வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம் என்ற நிலை இருந்துள்ளது. இதுபோன்ற முறைகள் இருந்ததைப் பல்வேறு இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன.
மேற்சொன்ன நிலை பிறகு மாறி, பெற்றோருடன் அவர்களது பிள்ளைகள் கொண்ட பாலுறவு முறை தடை செய்யப்பட்டு அல்லது மாறி, சகோதர சகோதரிகளுக்கு இடையே திருமண உறவு ஏற்பட்டது. இது இரத்த உறவு குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.
அடுத்து, சகோதர சகோதரிகள் திருமண உறவு தடை செய்யப்பட்டு அல்லது மாற்றமடைந்து, ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரிகளையும் திருமணம் செய்துகொள்ளும் முறை வந்துள்ளது. இந்த முறை அந்தப் பொதுவான கணவர்கள், அந்தப் பெண்களின் சகோதரனாக இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
தற்காலக் கண்ணோட்டத்தின்படி, வரன்முறையற்ற பாலுறவாகக் கருதப்படும் இந்த முறை மாறியதே, பின்னாளில், திருமண உறவு முறைகள் ஏற்பட வழிகோலியுள்ளன. இந்தத் தடைகளுக்கு பல காரணங்களை அறிஞர்கள் முன்வைக்கின்றனர். அவை,
வேட்டை மனிதர்களாக இருந்தவர்களுக்கு இடையே, அதாவது ஒரே குடும்பமாக இருந்தவர்களுக்கு இடையே, தந்தை மகன் மற்றும் சகோதரர்களுக்கு இடையே ஒரே பெண்ணிற்காக போட்டியும் சண்டையும் ஏற்பட்ட காரணங்களால், அதனால் ஏற்படும் பிளவைத் தவிர்க்க இப்படிப்பட்ட தடை வந்திருக்கக்கூடும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, சிறுவயதில் இருந்தே ஒன்றாய்ப் பழகும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உளவியல் ரீதியாக பாலுணர்வு ஏற்படாத சூழலில் இப்படிப்பட்ட தடைகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது மாறியிருக்கக்கூடும்.
பல்வேறு அழிவுகள் காரணமாக, தேவையான வயதொத்த ஆண் பெண்கள் இல்லாத சூழலில், வேறு குடும்பத்தைச் சேர்ந்தவரோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் தடை வந்திருக்கக்கூடும் அல்லது மாறியிருக்கக்கூடும்.
தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ளும் சூழல் வந்திருக்கக்கூடும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்பின் தெரியாதவரைத் திருமணம் செய்யும் களவு முறையும், தனது இனத்தில் திருமணம் செய்யும் பெற்றோர் இசைவு மணமுறையும், ஜாதியில் நெருக்கமாக உள்ளவரோடு மட்டும் திருமணம் செய்யும் மணமுறையுமாக மூன்று வகைத் திருமண முறைகள் ஆதியில் இருந்துள்ளன. தம் இனத்தில் திருமணம் செய்வதை அகமணம் என்றும் வேறு இனத்தவரோடு திருமணம் செய்வதைப் புறமணம் என்றும் அழைக்கப்படுகிறது. குடும்பத் தலைமை உரிமை , தொழிலுரிமை, சொத்துரிமை ஆகிய மூன்றையும் காப்பாற்றிக் கொள்ள புறமணமுறை தடை செய்யப்பட்டு ஒரே இனக்குழுவுக்குள் மட்டும் திருமணம் செய்வதும், பெற்றோர் இசைவோடு மட்டும் திருமணம் செய்யும் முறையும் சமூகக் கட்டுப்பாடாக ஏற்படுத்தப்பட்டு, அது ஒரு மரபாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த மரபு தொடர்ந்து மீறப்பட்டதை அதாவது, பெற்றோரை மீறி காதலர்கள் உடன்போக்கு மேற்கொண்டதையும், உடன்போக்கு நடைபெறு வதைத் தடுக்க பெண்களை வீட்டிலே வெளியில் விடாமல் வைத்திருக்கும் இச்செறித்தல் என்றும் இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன.
தொடக்கத்தில் தாய்வழித் தலைமை இருந்தது. அப்போது குடும்ப அமைப்பில் பெண்கள் சொத்துக்கு உரிமை உடையவராக இருந்தனர். ஆண்கள் மனைவியின் வீட்டில் தங்கி இருக்க வேண்டியிருந்தது. குழந்தை பெறுவதற்கு ஆணும் ஒரு காரணம் என்று அறியாமல் இருந்தகாலமாக அது இருந்திருக்கக்கூடும். காலப்போக்கில், பெண்கள் குழந்தை பெறுவதும், மாதவிடாயினால் பணி செய்யமுடியாமல் போவதாலும், குழந்தையைக் கவனித்துக்கொண்டு இல்லத்தைப் பராமரிப்பவளாகவும் மாற, ஆண்கள் உழைக்கும் மற்றும் அதிகாரவர்க்கமாக மாறியபோது, குடும்பத்தின் தலைமை தாய்வழியில் இருந்து தந்தை வழிக்கு மாறுகின்றது. தந்தைவழித் தலைமை, திருமண உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. தலைமையைக் காப்பாற்ற புறமணத்தடை ஏற்படுகிறது. ஆணின் வாரிசுரிமையைச் சாத்தியமாக்கக்கூடிய பெண்ணின் கற்புநெறி குறைந்தபட்சத் தேவையாகிவிடுகிறது. பெண் கற்பு நெறியைக் கடைப்பிடிக்காவிடின், ஆணின் வாரிசுரிமைக்கு உத்தரவாதமில் லாமல் போய்விடும். இது தனியுடைமை சமூக அமைப்பை முற்றிலும் சீர்குலைத்துவிடும். எனவேதான், பண்டைய எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் பெண்ணின் கற்பு நெறிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன. இச்சமூகங்கள் கற்பு தவறிய பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளை வகுத்ததுடன், கற்பு தவறாமைக்கு மிகக் கடுமையான வழிமுறைகளையும் கைக்கொண்டன. இந்தச் சமூகக் கட்டமைப்பை யாரும் மாற்றிவிடாமல் இருப்பதற்காக, ஜாதிய அமைப்புகளை ஏற்படுத்தினர், ஜாதகம் பொருத்தம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை, கடவுள் புராணக் கதைகள் மூலமாகப் பலப்படுத்தினர்.
இதனால், மனிதர்களின் சமூக வளர்ச்சி சிந்தனை முழுவதுமாக முடக்கப்பட்டது, பெண்கள் அடிமையானர்கள். மனிதர்களுக்கு இடையே பிறப்பால் சமூக ஏற்றத்தாழ்வும், பிறப்பால் தொழில் ஏற்றத்தாழ்வும், அதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு, பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் கல்வி மறுக்கப்பட்டது, அதனால் அறிவுடையோர் குறைந்தனர். புராண இதிகாச கடவுள் கதைகள் மற்றும் மூடநம்பிக்கைகளினால், இந்திய சமூகம் பின்தங்கிய அதாவது தேக்கநிலை அடைந்த ஒரு சமூகமாக மாறியது. ஒரு சமூகத்தின் திருமண உறவுமுறை என்பது அந்தச் சமூகம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகவும் இருக்கிறது. உலகின் முன்னேறியுள்ள பல நாடுகளில் உள்ள நாகரிகமடைந்துள்ள சமூகங்கள், பழைய திருமண முறைகளான, அகமணமுறை மற்றும் பெற்றோர் இசைவு மணமுறை இரண்டையும் விட்டுவிட்டன. திருமணம் செய்ய விரும்பும் ஆடவரும் பெண்டிரும் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து மணந்துகொள்ளும் வழக்கமே இப்போது உள்ளது. மனித சமூகம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துவருகிறது. மனிதர்களின் அறிவியல் சிந்தனை, அவர்களைத் தொடர்ந்து அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. அதன் விளைவாக, தங்களின் அனைத்துப் பணிகளையும் எளிதாக்கி வருகின்றனர், அவர்கள் அச்சப்பட்ட அனைத்தையும் ஆராய்ந்து அச்சம் விலகுகின்றனர், தொடர் தேடலினால் தொடர் முன்னேற்றத்தில் மனித சமூகம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், மணமக்களில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே மணமக்களின் பெற்றோர்களால் மட்டும் முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்தது மற்றும் வருகிறது. இத்திருமணம் புரோகிதர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது மற்றும் வைக்கப்படுகிறது.
இப்படிச் செய்யப்படும் திருமணத்தில் பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவராகவும், கணவனுக்கு உடலில், மனதில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கடைசி வரை கணவனைக் காப்பாற்றும் விதமாக மனைவி கணவனுடனேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது மற்றும் இருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் தகர்த்து புதிய சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டின் பகுத்தறிவுத் தந்தை பெரியா அவர்களால் 1929ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தந்தை பெரியாரும் அவரது கொள்கைவழி வந்தவர்களும் சுயமரியாதைத் திருமண முறையையே கடைப்பிடிக்கின்றனர்.
1955 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பெரியாரின் முதன்மை மாணவர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா இதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இது சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு 17.-01.-1968இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று 20.01.-1968இல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் 08.06.1934 இல் சென்னை தோழர்கள், கற்பகம் அம்மாள் கே.கல்யாணசுந்திரம் ஆகியோருக்கு சென்னை சவுகார்பேட்டையில் நடத்திய சுயமரியாதைத் திருமணத்தில் ஆற்றிய உரையில், சுயமரியாதைத் திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமென்றும் அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும், ஆணையும் மாத்திரமே பொறுத்ததே ஒழிய வேறு எவ்விதத் தெய்வீகத்துக்கோ அல்லது எவ்விதக் கட்டுப்பாட்டுக்கோ சம்மந்தப்பட்டதல்ல என்பதே சுயமரியாதைக் கல்யாணத்தின் தத்துவமாகும் வாழ்க்கைக்கும் மனதுக்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடி வாழலாம். அவைகளுக்கு ஒவ்வாத வாழ்க்கையே நரகம் போன்றதான தம்பதிகளானால் பிரிந்து மனதிற்கு ஏற்றவர்களை மணந்து இன்பசுக வாழ்வு வாழ உரிமை உண்டு என்பதோடு புருஷனோ மனைவியோ யார் இறந்துபோனாலும் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறது
இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கல்யாணம் செய்துகொண்டார்களே ஒழிய ஆணும் ஆணும் சேர்ந்தோ, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆதலால் இவ்விதத் திருமணத்தைப் பற்றி யாரும் கவலையோ ஆத்திரமோ படவேண்டியதில்லை என்கிறார்.
எனவே, சுயமரியாதைத் திருமணம் என்பது நாகரிகம் அடைந்த மனிதர்களின் திருமண முறை என்பது தெளிவாக விளங்குகிறது.
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், சுயமரியாதைத் திருமணமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே தங்களை நாகரிகமடைந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காட்டிக் கொள்ள முடியும்.