சுதந்திரமான உழைப்பே பெண்மையின் பொங்கல் – பிரதிபா

ஜனவரி 16-31

னக்கும் ஒரு ஆசைங்க.. என்னதான் சராசரி மனிதப் பிறவியா நாம இருந்தாக்கூட மற்றவங்க நம்மள நல்லவங்கன்னு சொல்லணும்ங்கிற எதிர்பார்ப்பு இருக்கும்.

அடுத்தவர் பாராட்டுக்கும் பெருமைக்கும் ஆசைப்படக்கூடாதுன்னு எவ்வளவுதான் நினைத்தாலும் ஆசை விடமாட்டேங்குது.  ஒவ்வொரு நாளும் நானும் என்னெவோ செய்து பார்க்கிறேன். ஆனால் பாராட்டு மட்டும் வரவேயில்லை. ஒருநாள் நானே வெறுத்துப்போய் இதோடு இந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கணும், சும்மா பாராட்டு பத்தியே நினைச்சுட்டு இருக்கக்கூடாது என நினைத்து அன்றோடு ஆசை என்கிற தட்டைக் கழுவி கமுத்தி வச்சிட்டேன்.

ஆசைதான் நிறைவேறலை. கஷ்டங்களாவது சரியாகட்டும். சாமியைக் கும்பிடுவோம், இன்றோடு நம் கஷ்டங்கள் கைவிட்டுப் போகணும்னு நினைச்சி வழக்கமா கும்புடுற சாமியக் கும்புட ஆரம்பிச்சேன். எல்லாரது குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறைகிறது, ஆனால் நம் குடும்பம் மட்டும் ஒருநாள் சந்தோஷம், பலநாள் துன்பம் என வாழ்ந்து கொண்டு இருக்கிறது, கஷ்டத்தை எப்படியாவது நிறுத்தி சந்தோஷம் ஒன்றுதான் நிலையானது என்று ஆக்க வேண்டும் என்று அல்லும் பகலும் சாமிக்கு அங்கப்பிரதட்சணமும், அடிதோறும் 108 சூடமும் வைத்து வழிபட்டேன். காலையில் நான் சாப்பிடுறேனோ இல்லையோ தினமும் கடவுளுக்கு மட்டும் தினுசு தினுசாக சமையல் செய்துதான் படைத்தேன்.

ஆனால், ஏனோ  அந்தக் கடவுள் மட்டும் என் கண்ணுக்குத் தெரியவே இல்லை, எங்காவது ஒளிந்து கொண்டு இருப்பார் போல. என்னைச் சுற்றியிருந்தவங்களோ, நீ நன்றாக சாமி கும்பிடவில்லை. சரியா விரதமிருக்கவில்லைன்னு சொன்னாங்க. நாலாம் தெருவில் இருக்கும் ஜோசியரும் இதுபோல சொன்னபோதுகூட நம்பினேன். உடனே கடவுளுக்கு இளநீர், பால், தேன் என வாங்கிக்கொடுத்து கடவுளைக் குளிரவைத்துப் பார்க்கலாம் என ஒவ்வொருநாளும் இதே கடமையும், கடவுளுமாகத்தான் திரிந்தேன். ஆனால், கடவுளுக்கு வாங்கிய தேங்காயின் கடன் மட்டும் என் பாட்டியின் நிலத்தை விற்றுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

கஷ்டமும் குறைந்தபாடில்லை, நஷ்டமும் இணைந்து வந்தது, அன்றோடு கோவிலுக்கு குட்பை சொல்லிட்டு, திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன்.

சரி, நமக்குதான் ஆசையும் போய்விட்டது, சாமி நம்பிக்கையும் போய்விட்டது… தானதர்மம் செஞ்சி பெரிய ஆளாயிடலாம்னு நினைச்சுக்கிட்டே நடந்து போய்க்கிட்டிருந்தப்ப, எதிரில் ஒருவர் கையில் பிச்சைப் பாத்திரத்தோடு வந்தார். அவருக்குத் தானமாகப் பத்து ரூபாயைப் போட்டேன். அவரும் கையெடுத்துக் கும்பிட்டுப் போனார்.

ஆஹா, நாமும் நல்லது செய்துவிட்டோம் என்ற உணர்வோடு, பல ஊர்களுக்குச் சென்று பிச்சை கேட்டு வந்தவர்களின் கைகளில் எல்லாம் பணத்தைத் திணித்துவிட்டு பாசத்தோடு அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகருவேன். எனக்குள் ஒரு திருப்தி, சரி இன்றைய திருப்திகரமான காரியம் நடந்தேறிவிட்டது என்ற மயப்புக்கு (மயக்கத்துக்கு) ஆளானேன்.

பல நாள் ஊர் சுற்றிய அலைச்சலால் உடம்பு கெட்டுப்போனது. தானம் செய்ததன் மூலமாக எனக்குக் கிடைத்த பெயர் ஊதாரி. கையில் இருந்த காசும் காலி.

இனி  என்னதான் செய்வது? எப்படித்தான் நடந்து கொள்வது என வருத்தமுடன் நினைக்கும்போது எனக்கு வயது முப்பது தாண்டிவிட்டது, கடனாளி என்ற பெயரும் வந்துவிட்டது. இனியும் உழைக்காமல் நாட்களை வீணாக்கி வந்தால், நாம் பிறந்ததற்கே அர்த்தமில்லை என நினைத்தேன். ஆசை, சாமிபக்தி, தானதர்மம் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு இடத்தில் போட்டு அடைத்து பெரிய பூட்டாக வாங்கிப் பூட்டிவிட்டேன், சாவியையும் தொலைத்து விட்டேன்.

நல்ல வேலை யைத் தேடினேன். அதுவரைக்கும் வெட்டியாகவே பொழுதைப் போக்கியதில் நன்றாகப் படிக்க வில்லை என்பதும் அதற்கப்புறம்தான் தெரிந்தது. இனியும் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்க நேரம் இல்லை. எனவே உடனடியாக என்ன வேலை கிடைக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து, வேலையில் அமர்வது என முடிவெடுத்தேன். மரியாதையான வேலை கிடைத்தது. அதன் மூலம் வருமானமும் கிடைத்தது.

குடும்ப பாரம் நீங்கியது, குற்ற உணர்வும் நீங்கியது. நாளாக நாளாக நல்ல நிலைக்கு  வந்தேன். குடும்பத்தைக் காப்பாற்றியவள் என்ற நல்ல பெயர் என்னைத்தேடி வந்தது. அம்மாதான் எனக்கு எல்லாம் என்கிற என் குழந்தையின் மழலையில், காணாமல் போன நிம்மதி திரும்பக் கிடைத்தது. நான் என் வேலையை ஒழுங்காகப் பார்த்ததால் என்னை வேலைக்குச் சேர்த்த நிறுவனத்துக்கும் பலன் கிடைத்தது. எனது வேலையில் சுதந்திரமான சூழல் அமைந்தது. ஆசைப்பட்டபோதும், சாமியை விழுந்து விழுந்து கும்பிட்டபோதும் தான தர்மம் செய்தபோதும் கிடைக்காத பெயரும் புகழும் பாராட்டும் ஒழுங்காக வேலை பார்த்து, என்னையும் குடும்பத்தையும் நிலைநிறுத்தியபோது கிடைத்தது. நல்ல பெயருக்குத் தகுதியானவள் ஆனேன், நாட்டைப்பற்றிய தெளிவுக்கும் ஆளானேன்.

பொங்கல் என்பது அரிசி, வெல்லம், நெய், முந்திரி இவற்றின் கலவை மட்டுமல்ல, அடுப்பு என்று ஒன்று இல்லையெனில் பொங்கல் பொங்கவே பொங்காது. அடுப்பு என்பது நம் உழைப்பு. உழைப்பு இல்லையெனில் வாழ்க்கை எனும் பொங்கல் பொங்காமல் போய்விடும். எனவே உழைப்பை மதிப்பாகக் கருதி பெண்கள் வாழ வேண்டும். அது நம் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். உழைப்பு ஒன்றுதான் அனைத்தையும் பெற்றுத்தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *