– நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியவை அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால்தான் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 2 மடங்காக உயர்ந்துள்ளது. சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாகப் பார்க்க வேண்டும்.
ஜோதிடமும், செம்பைப் பொன்னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு. ஒரு நல்ல அரசு எவ்வாறு மக்களை அவர்களின் மோசமான உணர்வுகளில் இருந்து பாதுகாக்கிறதோ, அது போலவே நம்மை நமது பாகுபாடு நிறைந்த கண்ணோட்டத்தில் இருந்தும், மூடநம்பிக்கைகளிலிருந்தும் அறிவியல் காப்பாற்றுகிறது. அறிவியல் நடை முறைகள் மூடநம்பிக்கைகளின் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. முறையான சோதனையினால் மெய்ப்பிக்கப்பட முடியாத எந்த ஒரு நடைமுறையோ, உயர்குடி மக்களின் விமர்சனமோ மற்றும் நவீன அறிவியல் மீதான கட்டுப்பாடுகளோ எந்த அறிவியல் பெயரைக் கொண்டிருந்தாலும், அறிவியல் என்று அவற்றைக் கருத முடியாது. மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் எப்போதுமே மிகுந்த அளவிலான கேட்டினை உருவாக்கும்.
எதனையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடாமல், அதனைச் சோதனை செய்து பார்ப்பது, கருத்தூன்றி ஆய்வு செய்வது, சிறு நிகழ்ச்சிகள் பற்றிய கதைகளைவிட சோதனை செய்து பார்ப்பதை நம்புவது ஆகிய கருத்துகளே நவீன அறிவியல் உருவாக்கத்தின் மய்யக் கருத்தாக இருப்பவை என்பதுடன், மிகவும் முக்கியமான வழிகாட்டும் கொள்கையாக இருக்கின்றது .
16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலம் முதற்கொண்டு அறிவியல் முன்னேற்றத்துக்கு மிகவும் இன்றியமையாத, முக்கியமான சிந்தனைச் சுதந்திரமின்றி நல்ல அறிவியல் வளர்ச்சி பெற இயலாது. முழு சிந்தனைச் சுதந்திரம் இன்றி, தொடர்ந்த காலங்களில் மிகச் சிறந்த அறிவியல் இருப்பதும் இயலாதது. யார் எவ்வளவு அழகாகச் சொன்னாலும், அது சோதனையால் மெய்ப்பிக்கப்பட முடியாவிட்டால், அது நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நிலைபெற்றது.
இறுதியில் சோதனையில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்று சமூகங்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல நவீன அறிவியலை உருவாக்கியது. சோதனையில் தோல்வியடைந்த பிறகும் சில பரவலான மூட நம்பிக்கைகள் தொடர்ந்து சமூகங்களில் நிலவுகின்றன. உண்மையான காரணத் தையும், தற்செயலாக நடைபெறுவதையும் பிரித்துக் காண முடியாத மனிதரின் இயல்பான தன்மைதான் இதன் காரணம். கணிதம், இசை, கலை போன்ற நல்ல விளைவுகளை ஏற்படுத்திய நடைமுறை களை அங்கீகரிக்க விரும்பும் மனநிலை, அத்தகைய நடைமுறைகள் இல்லாத இடங்களிலும் அவை இருப்பது போன்று நம்மைக் கற்பனை செய்து கொள்ளச் செய்கிறது.
தனது குறைகளைத் திருத்திக் கொண்டு தன்னைத்தானே சரி செய்து கொள்ள இயன்றதுதான் அறிவியல். புதிய ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள் வந்த பிறகு, அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை, கொள்கைகளை மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் அறிவியலின் பண்புதான், மற்ற மூடநம்பிக்கை நடைமுறைகளில் இருந்து அதனைப் பிரித்து அடையாளம் காட்டுவதாகும். அறிவியலில் தவறு நேர்வது கேடுபயப்பதில்லை; ஆனால் தவறான விளக்கம் அளிப்பது உண்மை யிலேயே பெருங்கேடு விளைவிப்பதாகும்.
(சென்னையில், கடந்த 2011 டிசம்பர் 29 அன்று, பாரதிய வித்யா பவன் – இரண்டாவது எஸ்.வி.நரசிம்மன் நினைவுச் சொற்பொழிவில் அறிவியலாளர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து…)