தமிழின் பிள்ளைகள் – சி.இலக்குவனார்

ஜனவரி 16-31

சி.இலக்குவனார்

மலையாளம்: மலையாளம் என்ற சொல் தமிழ்ச் சொல்லேயாகும். மலையிடத்தை ஆட்சியாகக் கொண்டது என்னும் பொருளதாகும். மலையாளம் என்ற சொல் மொழியைக் குறிக்கும். கேரளம் என்ற சொல் நாட்டைக் குறிக்கும். இச்சொல் சேரலன் என்ற தமிழ்ச் சொல்லின் வேறு வடிவமேயாகும். சவுக்குப் போலியாகக் க வருவது இயல்பு. சீர்த்தியே கீர்த்தியாகவும், செம்பே கெம்பாகவும் (கன்னடத்தில்) உருமாறியுள்ளமையைக் காண்க. மலையாள நாடு தமிழிலக்கியங்களில் சேரநாடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையாண்ட அரசர்கள் சேரர் என்றும் சேரலர் என்றும்அழைக்கப்பட்டனர். சேரன் செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், தகடூர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ்சேரல் என்னும் பெயர்களை நோக்குக. சேரல் சேரலன் ஆயது, தென்னவன் சேரலன் சோழன் (திருவாசகம்). செருமாவுகைக்கும் சேரலன் காண்க. (திருமுகப்பாசுரம்) என்னும் இலக்கிய வழக்குகளை நோக்குக. சேரலன் கேரலன் ஆகிப் பின்னர் கேரளன் ஆகியது. ஆதலின் கேரளன் என்ற சொல்லின் தோற்றத்திற்கு வேறு மூலம் தேடி உரைப்பது உண்மை நிலைக்கு மாறுபட்ட தாகும்.

மலையாள மொழி வழங்கும் நாடாக இன்று கருதப்படும் பகுதி கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரைச் செந்தமிழ் நாடாகவே இருந்துள்ளது. செந்தமிழ் இலக்கியங்களாம் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, ஆதியுலா, பெருமாள் திருமொழி முதலியன இப்பகுதியில் தோன்றியனவே.

கன்னடம்: மலையாளத்தை அடுத்துத் தமிழோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பது கன்னடம். கன்னடம் என்ற சொல் கருநாடகம் என்ற சொல்லின் சிதைவாகும். அதிலிருந்து தோன்றிய கன்னடம் மொழியைக் குறிப்பதாகும்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கருதப்படும் குமாரிலப்பட்டர் தென்னிந்திய மொழிகளைக் குறிக்குங்கால் ஆந்திர திராவிட பாஷா என்று குறிப்பிட்டுள்ளார். ஆந்திரம் தெலுங்கையும், திராவிடம் தமிழையும் குறிப்பதாகும். ஆதலின் கன்னடம் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் தனிமொழியாக உருப்பெறவில்லை.

பம்பாய் மாகாணமும் அய்தராபாத்துச் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு கி. பி.ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னால் வடசொற் கலப்பு மிகுதியாலும் ஒலி வேற்றுமைச் சிதைவாலும் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்துவிட்டது.

கன்னடம் திரிந்துள்ள முறைகள்:-

1. ப ஹ வாக மாறியுள்ளது.
பள்ளி – ஹள்ளி; பாடு – ஹாடு.

2. உயிரீற்றுப் பேறு.
எதிர் – எதிரு; இருந்தேன்_இருந்தேனெ.

3. தொகுத்தல் திரிபு.
இருவர்-இப்பரு; இருந்தேன்-இத்தேன.

4. வல்லொற்று மிகாமை.
ஓலைக்காரன்_ஓலகார; நினக்கு – நினகெ.

5. சொற்றிரிபு.
மற்றொன்று_ மத்தொந்து;
முதலாயின_ மொதலானய.

6. போலி.
வேடர்_பேடரு: செலவு_கெலவு.

7. எதிர்மறை இடைநிலைக் குறுக்கம்.
இராதே-இரதெ.

8. பெயரீற்றுப் பால் விகுதிக் கேடு.
குருடன் – குருட; மகன்-மக;
அப்பன் -அப்ப.

9. வேற்றுமை உருபின் திரிபு.
நின்னால்_நின்னிந்த; நின்கண்_ நிந்நொள்_நிந்நல்லி.

10. விகுதி மாற்றம்.
அன் அம் ஆதல்;
செய்கின்றேன்-செய்தபெம்.

கன்னடச் சொற்கள் கிரேக்க மொழியார் நூல்களில் காணப்படுகின்றவென்றும், அந்நூல்களின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறிக் கன்னடத்தின் பழமையை நிலைநாட்டுவாருமுளர். கன்னட மொழியின் பழமையான நூல் கவிராச மார்க்கம் என்ற இலக்கண நூல்தான். அதன் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். அஃது ஓர் அணியிலக்கண நூலாக இருத்தலினால் அதற்கு முன்பு பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக் கக் கூடும் என்பாரும் உளர். கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் இலக்கியம்   தோன்றவில்லை என்று ஆராய்ச்சியாளர் வரையறுத்துள்ளனர்.

தெலுங்கு: இதனைத் தமிழின் முதல் மகள் என்று கூடக் கூறலாம். தென்னகத் திராவிட மொழி களுள் முதன் முதலாகத் தமிழ்த் தாயினின்றும் தொடர்பு நீங்கி வாழத் தொடங் கியது தெலுங்கு தான். தொல்காப் பியர் காலமாம் கி.மு.ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே தமிழ் என்று அழைக்கப் படுதலை இம்மொழி இழந்துவிட்டது. வடவேங்கடத்துக்கு அப்பால் வழங்கிய இதனைத் தமிழர் வடுகு என்று அழைத்தனர். ஆரியர் ஆந்திரம் என்று அழைத்தனர். தெலுங்கு என்பது தெலுங்கு மொழிக்குரியோரே சூட்டிக்கொண்டது என்பர். தெலுங்கு என்னும் சொல் திரிகலிங்கம் என்பதனின்றும் பிறந்தது என்பர். திரிகலிங்கம், திரிலிங்கம், தெலுங்கம், தெலுங்கு என வந்தது என்பர். நாட்டின் பெயரால் வழங்கிய இப்பெயர் பின்னர் மொழியின் பெயராயிற்று. தெலுங்கு என்னும் பெயர் தெலிங்க – தைலிங்க – தெலுகு, தெனுங்கு – தெனுகு என்னும் சொற்களாகவும் வழங்கி வருகின்றது. தேன் போன்று இனிமைதரும் மொழியாதலின் தெனுகு எனப்பட்டது என்பர்.

ஆரிய மொழிக் கலப்பு அற்றிருந்த தமிழ், கொடுந்தமிழாகிப் பின்னர் ஆரிய மொழிக் கலப்பால் வேற்று மொழியாகிவிட்டது. தெலுங்கு நாட்டின் ஊர்ப் பெயர்களில் பல இன்றும் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன. தமிழ்ச் சொற்களெல்லாம் தெலுங்கில் உருமாறி வழங்குகின்றன. தமிழுக்கும் தெலுங்குக்கும் தொடர்பு கிடையாது என்று எண்ணும் அளவிற்கு உருமாறியுள்ளன. நுணுகி ஆராயும் மொழிநூற் புலவர்க்கே சொற்களின் உண்மை வடிவங்கள் தமிழுக்குரியன என்று புலப்படும்.

தமிழ்ச் சொற்கள் தெலுங்கில் திரிந்துள்ள முறைமையைப் பின்வரும் காட்டுக்களால் அறியலாம்.

1. இ எ யாகும்.
கோணி>கோனெ விலை>வெல;
திரை>தெர.

2. உ, அ வாகும்.
ஊற்று>ஊட்ட; பாட்டு>பாட்ட;
தட்டு>தட்ட; போக்கு>போக்க.

3. உ ஒ வாகும்.
புகை>பொக; உடல்>ஒடலு;
முனை>மொன; உரை>ஒர.

4. ஐ, அ வாகும்.
பொம்மை>பொம்ம; உவமை>உவம;
குப்பை>குப்ப

5. ஐ, எ யாகும்.
கட்டை>கட்டெ; திண்ணை>தின்னெ.

6. ண, ன வாகும்
அண்ணன்>அன்ன; வெண்ணெய்> வென்ன; எண்ணிக்க>என்னுக்க.

7. ந, ம வாகும்.
நீர்>மீரு; நாம்>மேமு.

8. ய, ச வாகும்.
உயிர் > உசுரு; பயறு>பெசறு.

9. ழ, டவாகும்.
நிழல்>நீட; பாழ்>பாடு; கோழி>கோடி;
மேழி>மேடி.

10. ற, ர வாகும்.
மீறு>மீரு; வேறு>வேரு.

11. ற்ற, ட்ட வாகும்.
ஊற்று>ஊட்ட; புற்று>புட்ட;
மாற்றம்>மாட்ட; சுற்று>சுட்ட;
பற்று>பட்டு.

இவ்வாறு உருமாற்றம் அடைந்த சொற்கள் இருப்பினும், உருமாற்றம் அடையாதனவும் இன்னும் வழக்கில் உள்ளன; ஒலித்துணை காரணமாக உகரம் சேர்ந்தன எளிதில் தமிழ் என்று அறியக்கூடியன.

உருமாற்றம் இல்லாதன: செப்பு, ஈ, கொட்டு, உண்டு, குக்கல், மஞ்சு, கணக்கு, அச்சு, தொட்டி, பொட்டு, வெறி, கூலி, கொண்டி, முடி முதலியன.

உகரம் சேர்ந்தன: தெய்வமு, கோணமு, ஏலமு, பக்கமு, பாகமு, சுங்கமு, மேளமு, மாதமு, சமமு, களங்கமு, கலகமு, கடினமு, குடும்பமு, நாடகமு முதலியன.

தமிழ்ச் சொற்களின் இறுதி மெய்யுடன் உகரம் சேர்த்து ஒலித்தால் தெலுங்காய்விடும்.

தெலுங்கு மொழியில் அனைத்துச் சொற்களும் உயிரிறுதியே கொண்டுள்ளன என்பது அறியத்தக்கது.

(எடுத்துக்காட்டுகள் திராவிடத்தாய் என்னும் நூலின் துணைகொண்டு எழுதப்பட்டன.)

துளு: திருந்திய தமிழ்க் குடும்ப மொழிகளுள் துளுவும் ஒன்று. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தில், கவின் மலையாளமும் துளுவும் என இடம் பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளது. குடகு என்னும் மொழியை ஒத்து கன்னடத்தினின்றும் சிறிதும், மலையாளத்தினின்றும் பெரிதும் வேறுபட்டுள்ளது. தமிழ்ச் சொற்கள் பலவற்றை அப்படியே கொண்டிருப்பினும் பல சொற்களை உருமாற்றியே வழங்குகின்றது.

இதற்குத் தனி எழுத்தோ பழைய இலக்கியச் சிறப்போ இல்லை. கிருத்துவத் தொண்டர் குழாம் கன்னட எழுத்திலும் துளுவப் பார்ப்பனர் மலையாள எழுத்திலும் இம்மொழியை எழுதி வருகின்றனர்.

கொடுந்தமிழாக இருந்து தமிழிலிருந்து பிரிந்து போன காலம் பதினாறாம் நூற்றாண்டு என்பர். துளுவ வேளாளர் எனத் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் துளுவ நாட்டிலிருந்து வந்து இங்கு குடியேறியவர் என்பர். அவர்கள் மொழி என்றுமே தமிழாயிருந்ததினால் துளுவ மொழி யென்பதும் தமிழே என்று அறியற்பாலது.

குடகு: இதனைக் கூர்க் என்றும் அழைப்பர். திருந்திய திராவிட மொழிகளின் வரிசையில் ஈற்றில் நிற்பது. குடகு என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மேற்கு என்று பொருள். தமிழ் வழங்கும் பகுதியோர் தமக்கு மேற்கில் உள்ள இடத்தைக் குடகு என்று அழைத்தனர். பின்னர் அப்பகுதியில் வழங்கும் மொழிக்கும் பெயராய்விட்டது. மலைப் பகுதியிடத்தில் உள்ள பழந்தமிழ் மக்கள், முதன்மைத் தமிழ்நாட்டோடு  கூட்டுறவு கொண்டு அடிக்கடிப் பழகும் வாய்ப்பினைப் பெறாத காரணத்தால், இப்பகுதியில் வழங்கிய மொழி நாளடைவில் தமிழுடன் வேறுபடும் நிலையை அடைந்துவிட்டது.

இம்மொழியில் அஃறிணைப் பெயர்கட்குப் பன்மை இல்லை. பேச்சு வழக்குத் தமிழில் வரும் அஃறிணைப் பெயர்களைப் பன்மைப்படுத்துவதில்லை. பேச்சு வழக்குத் தமிழே குடகு மொழி என்பது பொருந்தும்.

அஃறிணை ஒருமை உருபேற்கும் முறை.

வேற்றுமை  தமிழ்  குடகு
எழுவாய் மரம்  மர
செயப்படுபொருள்  மரத்தை  மரத்தன
கருவி  மரத்தால்  மரதிஞ்சி
கொடை  மரத்திற்கு  மரக்க்
உடைமை  மரத்தினது  மரத்ர
இடம்  மரத்தில்  மரத்_ல்

இனிக் கருத இருப்பன திருத்தம் பெறாதன என அழைக்கப்படுவன. தமக்கென எழுத்துருவம் பெறாதன. எழுத்துருவம் பெறாத மொழிகள் அடிக்கடி மாறும் இயல்பின. ஆதலின் தாய்த் தமிழோடு பெரிதும் வேறுபடுவன. இம்மொழிக்குரியோர் முதன்மை நிலத்தில் வாழும் தமிழர் கூட்டுறவை இழந்து, மலைகளிலும் காடுகளிலும் ஒதுங்கி வாழ்ந்துவிட்டனர். கல்வியறிவைப் பெற்றிலர். ஆகவே எழுதும் நெறியை அறிந்திலர். இவர்களுடைய பேச்சு வழக்கு மொழி நாளடைவில் பல பெயர்களைப் பெற்றுவிட்டன.

துதம்: தொத அல்லது துத என்றும் அழைக்கப்படும். நீலமலையில் வாழும் தோதவப் பழங்குடி மக்களால் பேசப்படும் மொழியாகும். நாகரிக வளர்ச்சி பெறாமல் வாழ்வதால் அவர்களைத் தமிழினத்தார் அல்லர் எனத் தள்ளிவிடுதல் சாலாது. தொதம் என்ற பெயர் தொகுதி என்னும் தமிழ்ச் சொல்லினின்றும் தோன்றியது எனப் போப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் தொகை எப்பொழுதும் ஆயிரத்துக்குமேல் போகவில்லை என்று அறிஞர் கால்டுவல் குறிப்பிட்டுள்ளார்.

கோதம்: இம்மொழியும் நீலமலையில் வாழும் பழங்குடி மக்களால் பேசப்படும் மொழியே யாகும். ஆயிரத்திருநூறு மக்களைக் கொண்ட அடிமைத் தொழிலாளர் எனப்படும் இனத்தவர் வழங்கும் மொழி என்பர் அறிஞர் கால்டுவல். இதுவும் தமிழின் சிதைவு மொழி என்பதில் அய்யமன்று.

கோண்டு: முன்பு கோண்டுவனம் என்று அழைக்கப்பெற்ற மலையும் காடும் மண்டிக்கிடக்கும் நடு இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மொழியே கோண்டு. இம்மொழியைப் பேசுவோர் தொகை பலவாண்டுகளுக்கு முன்னர் பதினைந்து நூறாயிரம் என்பர். குன்று என்னும் சொல்லே கோண்டு என உருமாறி இருக்கிறது என்பர்.

கூ அல்லது கோந்த்: கோந்தர் என அழைக்கப்படும் மக்கள் மொழியே கூ. ஒரிசாவின் மலைநாட்டில் வாழும் மக்கள் மொழி. குன்று என்ற சொல்லிலிருந்தே கோந்த் என்ற சொல்லும் தோன்றியுள்ளது. அயலவரால் கந்தர் என அழைக்கப்படுகின்றனர். தம் மொழியைக் கூ என்று அழைத்துக் கொள்கின்றனர்.

– (பழந்தமிழ் என்னும் நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *