ஒரு கலை விழாவாக, ஒரு பண்பாட்டு விழாவாக தமிழகத்திலே நடத்தப்படுவது பொங்கல் விழா.
உழவர் திருநாள் இப்பொங்கல் புதுநாள் என்பதை அனைவரும் இன்று அறிந்து போற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சங்கராந்திப் பண்டிகையாகவும் சூரிய நமஸ்காரப் பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இதுபோது, அறுவடை விழா என்றும், உழவர் திருநாள் என்றும், தமிழர் விழா – திராவிடர் திருநாள் என்றெல்லாம் ஏற்றம் பெற்று விளங்கிடக் காண்கிறோம்.
எல்லாப் பண்டிகைகளும் நம்மைப் பிற இனத்தாரின் எடுபிடிகளாக்குவதற்கே பெரிதும் பயன்பட்டு வருவது கண்டு பேராசிரியர் பலரும், சிந்தனையாளர்களும், சீர்திருத்தச் செம்மல் களும், தமிழருக்கே உரித்தானதும் தனிச் சிறப்பளிப்பதுமான இப்பொங்கல் புதுநாள் மாண்பினை மக்கள் அறிந்திடச் செய்துள்ளனர்.