கவிதை – தமிழர் திருநாள் – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

ஜனவரி 16-31

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!

புதிய பரிதியைப் புகழ்ந்து வாழ்த்தி
இதுதான் வல்லான் எழுதிய தமிழோ
எனும்படி இறக்கிய இளஞ்சூட்டின்சுவைப்
பொங்கல் இலைதொறும் போட்டுத் தேன்கனி,
செங்கரும்பின் சாறும் சேர்த்தே

அள்ளூர அள்ளி அள்ளிப் பிள்ளைகள்
தெள்ளு தமிழ்ப் பேச்சுக் கிள்ளைப் பெண்டிர்
தலைவரொ டுண்ணும் தமிழர் திருநாள்!

தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!
இருளும் பனியும் ஏகின, பரிதி
அருளினால் எங்கணும் அழகு காண்கிறோம்!
கலக்கம் தீர்ந்தது! கருத்திடை அனைத்தும்
விளக்கம் ஆயின! மேன்மைத் தமிழைப்
போற்றுதல் வேண்டும்:

வண்மைத் தமிழர்
திராவிடர் என்று செப்பும் இனத்தின்
பெரும்பகை ஆரியர்; வரம்பு மீறாது
மறச்செயல் தொடங்க மறத்தல் வேண்டா.

ஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன!
ஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்!
தெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்
சிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்
அமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்!
ஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது!
தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால்
சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!

திராவிடரின் பகைவர்க்கே அடிமை யானோர்,
திராவிடர்க்கு நலம்புரிதல் குதிரைக் கொம்பே!
அரிய தமிழ் நாட்டுரிமை வேண்டும்; அன்றே
அன்புள்ள தெலுங்கர்க்கும் கேர ளர்க்கும்
உரிமையினை நாட்டுவதும் தமிழர் வேலை!
ஒன்று பட்டோம், ஜாதியில்லை; சமயமில்லை;
குரல்கேட்க ஆள்வோரின் காதே! ஒப்பம்
கூறுவாயே இன்றேல் புரட்சி தோன்றும்.

– தமிழர் திருநாள்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *