கே: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியால் இழிவு செய்யப் பட்டிருந்தும், “தூக்கிப் போட்ட துணியைப் பெற்றுக்கொண்டது எனது பாக்கியம்’’ என்கிறாரே! ஆரிய ஆதிக்கமும் சூத்திரர் அறியாமையும் போட்டி போடும் நிலைபற்றித் தங்கள் கருத்து என்ன?
– முகமது, மாதவரம்
ப: ஒரு ஆளுநர் பதவிக்கான மதிப்பையும் மரியாதையும் இதன்மூலம் கொச்சைப்-படுத்தப்பட்டதுமல்ல; இப்படி பூணூல் திருமேனிகளிடம் அவர் சால்வைகளைத் தூக்கியா போட்டிருக்கிறார்? பெண்ணையும் சூத்திரச்சியாகப் பார்க்கும் ஆரிய ஆணவத்தின் முன் அம்மையார் மண்டியிடுவது மகா மகா மானக்கேடு _ வெட்கக் கேட்டையும் தாண்டி!
கே: தங்களின் பரப்புரை நெடும்பயணத்தின் சிகரமாய் நிறைவுவிழா எழுச்சியோடு உணர்வு ஊட்டியுள்ள நிலையில், அடுத்து உடனடி மக்கள் போராட்டம் கட்டாயம் என்கிற நிலையுள்ளதால் எப்போது?
– கோகுல், திருச்சி
ப: காலமறிந்து வினையாற்றுவது வினைத்திட்பமாகும்.
கே: ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு ‘நீட்’ விலக்கு மசோதாவை அனுப்பப் போவதாய் செய்திகள் வந்தனவே! வதந்தியா? எதிர்ப்பைக் குளிர்விக்கும் சூழ்ச்சியா?
– சோமசுந்தரம், மயிலாடுதுறை
ப: முடிந்த பிறகு வருவதோ செய்தி. முன்னால் வந்தால் அது ஊகம் அல்லது வதந்தி.
கே: முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர்; முதலமைச்சர் முடிவின்படியே துணைவேந்தர் நியமனம் என்பதை அடைய அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும்?
– ஸ்டீபன்ராஜ், பொன்னேரி
ப: பல்கலைக்கழகச் சட்டதிட்டங்களைத் திருத்த வேண்டும். அம்முயற்சியில் இறங்கியுள்ளது.
கே: அரசுக் கல்லூரிகளின் கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டி சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடர்கிறதே! முதலமைச்சருக்கு தாங்கள் தெரிவிக்கும் தீர்வு என்ன?
– சசிகுமார், வேலூர்
ப: மாணவர்களின் இந்தக் கோரிக்கை நியாயமானது. இதில் தமிழ்நாடு அரசு முதல் அமைச்சர் கருணை உள்ளத்தோடு அணுகுமுறை தேவை.
கே: அ.தி.-மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாய் நடந்த அதிகாரிகளின் தர்பார், வசூல் கொள்ளை போன்றவை தமிழ்நாடு அரசின் நிருவாகத்தில் இன்னமும் நடப்பதாயும், அமைச்சர்கள் அலட்சியப் படுத்தப்படுவதாயும் செய்திகள் வருகின்றனவே! உண்மையென்றால் தீர்வு என்ன?
– மகேஷ், திருத்தணி
ப: இந்தக் கேள்வியை தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறோம்.
கே: கும்பகோணத்தில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட சிலம்பரசன் வழக்கு விசாரணையின் இறுதியறிக்கை ஓராண்டாகியும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அரசுக்கு நற்பெயர் கிடைக்க முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்?
– திலீபன், தஞ்சை
ப: முதல் அமைச்சர் கவனத்திற்கு இது ஒரு வேளை தப்பி இருக்கலாம். விரைவில் தீர்வு கிடைக்கட்டும்.
கே: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பதவியில் இருக்கும்போதே, ‘நீட்’ இறுதி வழக்கை முடிவு செய்ய முடியாதா?
– நாகராஜன், ஆவடி
ப: இப்படியெல்லாம் உச்சநீதிமன்றத்திற்கு யாரும் கட்டளை இடமுடியாது _ கூடாது என்பதே சட்ட நிலையாகும்!