முனைவர் வா.நேரு
தாராளமயம், தனியார் மயம், உலக மயம் வந்தால் பாலும் தேனும் தெருக்களிலே ஓடும் என்றார்கள் சிலர். ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரியாக இருக்கிறது. இலங்கை மாபெரும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. “இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மருந்துத் தட்டுப்பாடானது தலைவலி மாத்திரையிலிருந்து அவசர சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வரை நிலவுகிறது. இந்த நிலைமையும் இதன் விளைவுகளும் பன்னாட்டு ஊடகங்களில் காட்டப்படுவதில்லை.
ஆய்வுக்கூட இயந்திரங்கள் வேலை செய்யவும், அறுவை சிகிச்சைகள் செய்யவும் தேவையான பொருள்களோடு மின்சாரமும் இல்லை. அவசரத்துக்கு அவசர ஊர்தி, ஜெனரேட்டர்களை இயக்க டீசல் இல்லை. குடிக்கவோ சுத்திகரிக்கவோ தேவையான தண்ணீர் இல்லை’’ என்பன போன்ற செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகளிலேயே இந்த நிலை என்றால் மற்றவை?…
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். மொழி, இனம், மதம் வேறுபாடுகளை எல்லாம் கடந்து உழைக்கும் மக்கள் எல்லோரும், உயிர் போனாலும் பரவாயில்லை என்று இலங்கைத் தலைநகர் கொழும்புவிலே கூடி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை கொத்து கொத்தாக அழித்த கொடிய ராஜபக்சேயும், அந்தக் குடும்பமும் விழி பிதுங்கி, வெளிநாட்டிற்கு ஏதாவது தப்பித்து ஓடி விடலாமா என்று சிந்திக்கும் அளவுக்கு அங்கு நிலைமை இருக்கிறது.
“ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!”
என்ற புரட்சிக்கவிஞர் வரிகள் நடைமுறைக் காட்சியாகிவிட்டது. வளரும் நாடுகள் பலவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. நேபாளத்திலும், பாகிஸ்தானிலும் இலங்கை அளவிற்கு மோசமில்லை என்றாலும் அங்கும் பொருளாதார நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவிலும் தொடர்ந்து விலைவாசி உயர்ந்துகொண்டே வருகிறது. அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 12 மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியா இருளில் மூழ்கும் என்று செய்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, ஒன்றிய மோடி அரசு, எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்து அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. மிகப் பெரிய லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (எல்.அய்.சி.-யை) தனியாருக்குக் கொடுத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.
அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஆதரவு அளிக்காமல், ஜியோ நிறுவனம் லாபம் அடைவதற்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கிறது. எல்லாம் இலவசம் என்று ஆரம்பித்து மற்ற நிறுவனங்களில் இருந்த வாடிக்கையாளரைத் தன் பக்கம் இழுத்தது. குறைந்த விலைக்கு டேட்டாவை அறிவித்ததன் மூலமாக மற்ற நிறுவனங்களையும் குறைந்த விலைக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தியது. அதனால் போட்டியிட முடியாமல் சில நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
டெலிகாம் துறையை ஜியோ ஆக்கிரமித்துக் கொண்டது. இன்னும் சில ஆண்டுகளில் ஜியோ நிறுவனம் மட்டுமே டெலிகாம் துறை என்றாகி விடும். பங்கு மார்க்கெட்டில் நடந்த ஊழல்களெல்லாம் நமக்குத் தெரியும். எப்படி அவை மூடி மறைக்கப்படுகின்றன. அதனால் பலன் பெற்ற பணக்காரர்கள் எல்லாம் யார் என்பது வெளிப்படையாகத் தெரியாதவண்ணம் மறைக்கப்படுகிறது.
இப்படி ஒரு சில பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கான வழி வகைகளை ஒன்றிய அரசே அமைத்துக் கொடுக்கிறது. இதனைத்தான் இந்த தாராள மயம், தனியார் மயம், உலக மயம் செய்திருக்கிறது. வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரும் அளவில் குறைந்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் வாங்கிக் கொடுத்த சமூக நீதியை ஒழிப்பதற்கான வழியாகவும் ஒன்றிய அரசு அனைத்தையும் தனியார் மயமாக்கி, இட ஒதுக்கீடே இல்லை என்னும் நிலைமையைக் கொண்டுவர நினைக்கிறது. அனைத்தையும் தனியார் மயமாக்குவதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை. அதனையே நடைமுறைப் படுத்துகிறது ஒன்றிய அரசு.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் ஒன்றிய அரசு, ஏழை மக்களை, தொழிலாளர்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கிறது. பாகுபாடு காட்டுகிறது. உத்தரப்பிரதேசத்திலும், டில்லியிலும் காவலர் படையை வைத்து சாதாரண தொழிலாளர்களின் வீடுகளை ஆணவத்தோடு இடிக்கிறது. மத வெறி ஊட்டுகிறது. இனவெறி ஊட்டி இராஜபக்சே இலங்கையை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையச் செய்தது போலவே இங்கும் நடைபெறுகின்றது. கண்ணுக்குத் தெரியாமல் நடைபெறும் பொருளாதார மாற்றங்கள் ஒரு நாள் இந்தியாவையும் இலங்கை நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்முன் உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். நம்மைப் பிரிக்கும் ஜாதி, மத வேறுபாடுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால், இதனை இன்றைய ‘மே’ தினம் கொண்டாடும் கம்யூனிச இயக்ககங்கள் முழுதாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா? எனும் கேள்வியை எழுப்பினால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
‘கடவுள் என்ற கட்டறுத்துத் தொழிலாளரை ஏவுவோம்’ என்றார் புரட்சிக்கவிஞர். கடவுள் என்ற கற்பனையை வைத்துக்கொண்டு மிக எளிதாக உழைக்கும் மக்களைப் பிரித்துவைத்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் பெரும் பணக்காரர்களும் அவர்களுக்கு ஆதரவான பிறவி முதலாளிகளான பார்ப்பனர்களும். ஜாதியும், மதமும் கடவுள் என்னும் கற்பனை பெற்றெடுத்த குழந்தைகள்தானே. உலக மெல்லாம் உழைப்பாளர்கள் கொண்டாடும் தினமான ‘மே 1’ வருகின்றது. உழைக்கும் மக்கள் ஏழைகளாகவும், உழைக்காமல் இருக்கும் பெரும்பணக்காரர்கள் மேலும் பணக்காரர்-களாகவும் ஆவதற்கு ஓர் அமைப்பு முறைதான் இன்றைக்கும் இருக்கிறது. இது மாறவேண்டும்.
“தோழர்களே, கம்யூனிஸ்ட் கட்சி நமது நாட்டில் வளரவேண்டிய அளவுக்கு வளர-வில்லை. மிகவும் உன்னதமான கொள்கை-யினைக் கொண்ட கட்சி, உலகில் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் முடிந்த முடிவான பொதுவுடைமைத் தத்துவத்தைக் கொண்ட கட்சி வளர்ச்சி அடையவில்லை என்றால் என்ன காரணம்?
கம்யூனிஸ்ட் என்றால் நாத்திகர்கள் ஆவர். கம்யூனிஸ்ட்களுக்கு கடவுள் பற்றோ ,மதப் பற்றோ, சாஸ்திரப் பற்றோ, ஜாதிப் பற்றோ, நாட்டுப் பற்றோ, மொழிப் பற்றோ கூட இருக்கக் கூடாது. லட்சியப் பற்று மட்டும்தான் இருக்க வேண்டும்.
நல்ல கொள்கைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இன்னின்ன மாறுதல்கள் பண்ணியது என்று சொல்ல முடியவில்லையே! இராமாயாணத்திலும், பாரதத்திலும், பழைய இலக்கியங்களிலும் நம்பிக்கை வைப்பவர்கள் எப்படி கம்யூனிஸ்ட்டாக முடியும்?
விபூதியும், நாமமும் போட்டுக்கொண்டு கம்யூனிசமும் பேசுபவர்கள் எப்படி உண்மை கம்யூனிஸ்டாக முடியும்? கம்யூனிஸ்ட்களுக்கு ஜோசியப் பைத்தியம் எதற்கு? கம்யூனிஸ்ட்டுக்கு நாட்டுப் பற்றுதான் எதற்கு? அவனுக்கு நாடே கிடையாதே. அவனுக்கு உலகம்தானே நாடு! கம்யூனிஸ்டுக்கு கடவுள் எதற்கு? அவனுக்கு அவனது கொள்கைதானே கடவுளாக இருக்க வேண்டும்” (‘விடுதலை’, 2.2.1966) என்று தந்தை பெரியார் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
‘காணும் பொருளெல்லாம் தொழிலாளி செய்தான், அவன் காணத் தகுந்தது வறுமையா? பூணத் தகுந்தது பொறுமையா?’ என்றார் புரட்சிக்கவிஞர். அவன் வறுமையில் வாடினாலும் பொறுமையைப் பூணுவதற்கு கடவுள், மதம், ஜாதி, விதி என்னும் கற்பனைகள் எல்லாம் தொழிலாளியின் மூளையில் உட்கார்ந்து ஆட்சி செய்து கொண்டிருப்பது தான் காரணம். அந்தப் பாசி படர்ந்த மூளை விலங்கை உடைத்து எறியும் கருத்துகளை தொழிலாளிக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான ‘மே’ தினம், ‘அனைவர்க்கும் அனைத்தும்’ என்னும் அற்புதமான திராவிட மாடலில் அமையும் ‘மே’ தினம் அமையும். அப்படிப்பட்ட ‘மே’ தினம் அமையும் நாளை நோக்கிய பயணத்திற்கு அடித்தளமாக இந்த ‘மே’ தினம் அமையட்டும். அனைவர்க்கும் உழைப்பாளர் தினமான, மே தின வாழ்த்துகள்.