பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறவேண்டும் என்பதற்கு பல போராட்டங்களை நடத்தியும், சிறை சென்றும் பெற்றுக் கொடுத்த உரிமையை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து மாணவர் களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும், முயற்சியையும் ஏற்படுத்த வேண்டும். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு மாணவர்களுக்கு பிரத்யேக நட்சத்திர பலன்கள் (குமுதம் பக்தி ஸ்பெசல் ஜூன் 1.5.2011) என்று ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒவ்வொரு கடவுளை வணங்குங்கள் என்று கூறிய அவர்களே தன்னம்பிக்கை, முயற்சி போன்றவற்றை நம்பாதே என்கின்ற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்து கின்றனர். இவையெல்லாம் ஜோதிடர்கள் தங்கள் சொத்துக் கணக்கை அதிகப்படுத்துவதற்குத்தான் என்று மக்களுக்குத் தெரிவதில்லை.
இது மட்டுமல்லாமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜோதிடத் துறையில் பட்டயப் படிப்பு, இளங்கலைப் பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு போன்ற படிப்புகள் இடம் பெறும் என்னும் செய்தி வெளியாகி யுள்ளது.
ஜோதிடத்தின் மேலுள்ள நம்பிக்கை கொண்ட மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு, சொத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து தவிப்பவர் நிறையப் பேர் உண்டு. இந்த ஜோதிடத்தை விட்டு விலகி தன்னம்பிக்கையுடன் செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் இப்படி ஒரு பட்டப்படிப்பு அவசியமா? என்னும் கேள்வியும் எழுகின்றது. இது மாணவர்களின் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, படிப்பின் மீதுள்ள ஆர்வத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடும். காலத்தின்மீது பழியைப் போட்டு சோம்பேறிகளாக்கிவிடும். இது அவர்களின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் கற்களாகிவிடும் என்பது திண்ணம்.
ஜோதிடத்தைக் கல்வித் திட்டத்தில் கொண்டுவரும்போது மாணவர்களிடையே மூடநம்பிக்கையை உறுதிப்படுத்திவிடும். இது ஒரு செடியின் வேரை மெல்லமெல்ல அரித்து அந்தச் செடியையே கருக்கிவிடும் நிலை போன்றது. இது வளரும் பயிர்களுக்குத் தேவைதானா?
– வி.மீனாட்சி, நாமக்கல்