சிறுகதை : திராவிட மாடல்!

மே 1-15,2022

ஆறு.கலைச்செல்வன்

ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வது செல்வகுமாருக்கு வழக்கமாகிவிட்டது. அதுவும் குறிப்பாக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தான் சற்றுலா செல்வதை மிகவும் இரகசியமாகவே வைத்திருப்பார். நண்பர்களிடம் மட்டுமல்ல, துணைவியாரிடம்கூட சொல்ல மாட்டார். சுற்றுலா செல்வதற்கு சில நாள்களுக்கு முன்புதான் சொல்வார். ஆரம்பத்தில் அவரது துணைவியார் கோகிலாவுக்குக் கடும் கோபம் வரும். ஆனால், சில ஆண்டுகளில் அதுவே பழகிவிட்டதால் ஏதும் சொல்வதில்லை. பணி ஓய்வுக்குப் பின் இருவரும் தனியாக வசித்து வந்தனர். ஒரே மகள் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டார்.

ஒரு நாள், தான் வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா செல்லப் போவதாக நேரம் பார்த்து கோகிலாவிடம் சொன்னார் செல்வகுமார்.

“நீங்க மட்டும் போறீங்களே… என்னையும் அழைத்துச் செல்லக் கூடாதா?’’ கோகிலா கேட்டார்.

“உன்னால் நீண்ட தூரம் நடக்க முடியாது. அடிக்கடி உனக்குத் தலைவலி வேறு வரும். நீ வந்து என்ன செய்யப்போறே!

வெளிநாடு போகணும்னா உடனே போக முடியாது. விசா வாங்கணும். விசா கிடைக்க நாள்கள் ஆகும். அடுத்த முறை பார்க்கலாம்’’ என்று துணைவியாரைச் சமாதானம் செய்து விட்டு வெளிநாடு சுற்றுலாவுக்குச் சென்றுவிட்டார் செல்வகுமார்.

சுற்றுலா முடிந்து வந்தவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு, செய்திகளை அறிந்து கொண்டார் கோகிலா.

இதற்கு முன்பெல்லாம் அவர் வெளிநாடு சென்றுவந்த பின்பு எதுவுமே கேட்க மாட்டார். ஆனால், அதற்கு மாறாக செல்வகுமார் ஆச்சரியப்படும் அளவுக்கு பல கேள்விகளை இம்முறை கேட்டார் கோகிலா.

“நீங்கள் போன நாட்டில் தெருக்கள் எல்லாம் சுத்தமாக இருக்குமா? தூய்மை நாடு என்று அங்கு ஏதாவது திட்டம் உள்ளதா?’’

“கோகிலா, அங்கு தெருக்களில் குப்பைக் கூளங்கள் எதுவும் இருக்காது. தெருக்கள் அகலமாகவும் தூய்மையாகவும் இருக்கும். மரங்கள் நிறைய வைத்திருப்பார்கள். அதிலிருந்து விழும் இலைகளைக் கூட அடிக்கடி சுத்தம் செய்து விடுவார்கள்.’’

“சுகாதார வசதிகள் எப்படி இருக்கும்?’’

“நிறைய இடங்களில் கழிவறைகள் இருக்கும். யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். சந்து பொந்துகளில்கூட யாரும் அசுத்தம் செய்ய முடியாது. அதற்கு வாய்ப்பும் இருக்காது.’’

“சாலைகளில் ஆடு, மாடுகள் நடமாட்டம் இருக்குமா?’’

“இருக்காது. சாலைகளில் எந்தவிதக் குறுக்கீடுகளும் இருக்காது கோகிலா.’’

“நாய்கள் தொல்லை இருக்குமா? எதுக்கு கேட்கிறேன் என்றால் ஆறு மாதங்களுக்கு முன்பு நீங்கள் வாக்கிங் சென்றபோது உங்களை தெரு நாய் கடித்து விட்டதே! ஆஸ்பத்திரியில் கூட மருந்து இல்லாமல் அலைஞ்சீங்களே! அதுபோல நீங்க போன இடத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என நான் பயந்துகிட்டே இருந்தேனுங்க.’’

“அப்படிப்பட்ட பயமெல்லாம் இல்லை கோகிலா. நாய்களையெல்லாம் வீடுகளில்தான் வளர்ப்பாங்க. நம் ஊர் செய்தித் தாள்களில் வாசகர் கடிதம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை பற்றியே பலரும் எழுதி இருப்பாங்க. அதைப் படித்துவிட்டு இப்படிக் கேட்கிறாயா கோகிலா?’’

“நீங்க சுற்றுலா செல்லும்போது எனக்கு பயமாகவே இருக்கும். போன வருஷம் உங்க நண்பர் ஒருத்தர் காலை நேரத்தில் வாக்கிங் போறப்போ மாடு முட்டி அவர் தடுமாறிக் கீழே விழுந்து, அப்போ எதிர்பாராம வந்த பஸ் அவர் மீது ஏறி… அப்பப்பா, நெனைச்சாலே பயமா இருக்குங்க.’’

கோகிலா இப்படியெல்லாம் பேசுவார், கேள்விகள் கேட்பார் என செல்வகுமார் நினைக்கவே இல்லை. எல்லாவற்றிற்கும் பொறுமையாகப் பதில் சொன்னார்.

மக்களின் பொருளாதார நிலை, பெண்ணுரிமை, சமூகப் பாதுகாப்பு, பழக்க வழக்கங்கள், உணவு முறை, நாகரிகம் போன்ற அனைத்து விவரங்களையும் கேட்டார்.

ஓராண்டு கழிந்தது. செல்வகுமாருக்கு மீண்டும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. இம்முறை வெளிநாடு செல்லாமல் நம் நாட்டிலேயே வடமாநிலங்கள் சென்று வர விரும்பினார். ஆனால், இம்முறை கோகிலாவை எப்படிச் சமாளிப்பது, நானும் வருவேன் என்று சொன்னால் என்ன செய்வது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது,

“நீங்க சுற்றுலா போய் ஒரு வருஷம் ஆயிடுச்சு. இப்ப ஏதாவது டூர் புரோகிராம் போட்டிருக்கீங்களா?’’ என்று கோகிலாவே கேட்டாள்.

இந்தக் கேள்வியை செல்வகுமார் எதிர்பார்க்கவில்லை. சற்றே தடுமாறிவிட்டார்.

“போகலாம்னுதான் இருக்கேன் கோகிலா. இந்தமுறை வடமாநிலங்களுக்குச் சென்று வரலாமா என்று பார்க்கிறேன்.’’

“வடமாநிலங்கள் என்றால் எங்கே?’’

“சிம்லா, மணாலி, ஆக்ரா, டெல்லி இங்கெல்லாம் போகலாம்னு இருக்கேன்’’

“தனியா போகப் போறீங்களா? நானும் வரலாமா?’’

கோகிலா இப்படிக் கேட்டதும் சட்டெனப் பதில் சொல்ல முடியாத செல்வகுமார் சற்றே யோசித்தார்…

“அங்கெல்லாம் குளிர் அதிகமாக இருக்கும். நீ வேறு கீழே விழுந்து கால் வலியோடு இருக்கே. உட்கார்ந்து எழுந்திருப்பதே உனக்கு சிரமமாயிருக்குதே, எப்படி வருவே?’’ என்று கோகிலா வரவேண்டாம் என்பதற்கான காரணங்களை அடுக்கினார் செல்வகுமார்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இந்தத் தடவை நானும்தான் வருவேன். எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார் கோகிலா.

வேறு வழியில்லாமல் கோகிலாவுக்கும் சேர்த்து டிக்கெட் போட்டார் செல்வகுமார்.

சுற்றுலா செல்லும் நாள் அன்று மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார் கோகிலா. டெல்லி வரை விமானத்தில் சென்றனர். சன்னல் ஓரத்தில் இடம் கிடைத்ததால் விமானத்தில் இருந்தபடியே பூமியின் அழகைக் கண்டு களித்தார் கோகிலா. மேகக் கூட்டங்களை யெல்லாம் பார்த்து அகமகிழ்ந்தார். அவரது மகிழ்ச்சியைக் கண்டு செல்வகுமாரும் மகிழ்ந்தார்.

அந்த சுற்றுலாக் குழுவில் மொத்தம் பதினைந்து பேர் இடம் பெற்றிருந்தனர். அனைவரும் டெல்லியிலிருந்து அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் சிம்லா நோக்கிப் புறப்பட்டார்கள்.

கோகிலா சன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டு சுற்றுப் புறத்தை நோட்டம் விட்டபடியே நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார். மேலும் அவர் யாரிடமும் பேசவும் இல்லை.

சுற்றுலாவில் வந்த மற்றவர்கள் எங்காவது இட்லி கிடைக்குமா, சாம்பார் ரசத்துடன் சோறு கிடைக்குமா என்று பேசிக் கொண்டிருந்தனர். சிலர் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே பயணம் செய்தனர். ஆனால், கோகிலா வெளிப்புறங்களை நோட்டம் விடுவதிலேயே குறியாக இருந்தார்.

விடுதிகளில் சாப்பிடும்போதும் அந்தப் பகுதி மக்கள் விரும்பி உண்ணும் உணவையே சாப்பிட்டார். வடமாநில உணவு விடுதிகள் சிலவற்றில் சிறுவர்கள் வேலை செய்வதையும்,  பணியாளர்கள் பலருக்கு சாதாரண ஆங்கில வார்த்தைகளுக்குக் கூட பொருள் தெரியாமலிருப்பதையும் அறிந்து கொண்டார்.

சிம்லா, மணாலி ஆகிய இடங்களில் அனைவரும் குதிரை, எருது சவாரிகளை மேற்கொண்டனர். கோகிலாவிற்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என நினைத்தார் செல்வகுமார். ஆனால், அவர் வியக்கும் வண்ணம் அந்தச் சவாரிகளைத் துணிவுடன் மேற்கொண்டு, செல்வகுமாருக்கே சவால் விட்டார்.

“கோகிலா, கால் வலி எப்படி இருக்கு?’’ என்று செல்வகுமார் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சுற்றுலா வந்த இடத்தில் ஏன் அதையெல்லாம் கேட்கறீங்க? எல்லாம் சரியாயிட்டுது. சுற்றுலாவை அனுபவிப்போம்’’ என்று பதில் கூறினார் கோகிலா.

இமயமலைத் தொடரைக் கண்டுகளித்தனர். பனிச்சறுக்கு விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை கோகிலா. செல்வகுமார் அசந்துபோனார்.

சுற்றுலா சென்ற ஆறு நாள்களும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார் கோகிலா.

நடக்க வேண்டிய இடங்களில் மற்றவர்களை விட சுறுசுறுப்பாகவே நடந்தார். அங்குள்ள மக்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்.

“தூய்மை, சுகாதாரம், கழிவறை வசதிகள், நல்ல சாலை வசதி எதுவும் இல்லையே’’ என அவர் வாய் முணுமுணுத்ததையும், இவை அனைத்தையும் குறிப்பேட்டில் பதிவு செய்ததையும் கவனித்தார் செல்வகுமார்.

சுற்றுலா முடிந்து ஊர் திரும்பிய பிறகு, இரண்டு நாள்கள் நல்ல ஓய்வெடுத்தார் செல்வகுமார். ஆனால், கோகிலாவோ நிறைய படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.

“கோகிலா, நான் எதிர்பார்க்கவே இல்லை’’ என்றார் செல்வகுமார்.

“என்ன எதிர்பார்க்கலை?’’

“நீ இவ்வளவு சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் சுற்றுலாவில் இருப்பாய் என்று.’’

“இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே நல்லது!’’

“நான் போன வருஷம் போய் வந்த சுற்றுலா அனுபவங்களை எழுதிக்கிட்டு வர்றேன். முடியும் நிலையில் இருக்கு. புத்தகமா வெளியிடப் போறேன்’’ என்ற சொன்ன செல்வகுமார்,

“கோகிலா, இந்தச் சுற்றுலாவில் நீ தெரிஞ்சிகிட்ட முக்கியமான உண்மை என்ன?’’

இக்கேள்விக்கு சற்றும் தயங்காமல் உடனே பதில் சொன்னார் கோகிலா.

“தமிழ்நாடு அனைத்திலும் முன்னோடியான மாநிலம்.’’

கோகிலாவின் இந்தப் பதிலை ஆமோதிப்பதைப் போல் தலையசைத்த செல்வகுமார் மீண்டும் ஒருகேள்வியைக் கேட்டார்.

“நிறைய எழுதிக்கிட்டு இருந்தியே, என்ன அது?’’

கோகிலா பதில் சொன்னார்,

“நீங்க போன வருஷம் போய் வந்த சுற்றுலாவைப் பற்றியே இன்னும் எழுதி முடிக்கலை. ஆனால், நான் இப்ப போய் வந்த சுற்றுலா பற்றி நூறு பக்கங்கள் வரும்படியா எழுதி முடிச்சுட்டேன். இதை புத்தகமாகவும் வெளியிடணும். இந்தாங்க, இதைப் பிடிங்க’’ என்ற சொல்லிக் கொண்டே தான் எழுதி வைத்த தாள்களைக் கொடுத்தார் கோகிலா.

“எப்படி இவ்வளவு தெளிவாய் இருக்கே கோகிலா?’’

“எல்லாம் இந்தப் புத்தகம் கொடுத்ததுதான்’’ என்று பெரியாரின், ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்தைக் காட்டினார்.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள் என்பதை உணர்ந்தார் செல்வகுமார். இவ்வளவு காலம் அவரை வெளியில் அழைத்துச் செல்லாததை எண்ணி வருந்தினார். பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணியாற்றுவதற்கும், துணிவுடன் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கும் வாய்ப்பளிப்பது இன்றியமையாதது என்பதை உணர்ந்தார்.

தமிழ்நாடு முன்னோடியான மாநிலம் என்பதை இந்தச் சுற்றுலா மூலம் உணர்ந்த கோகிலாவின் அறிவுத் திறனைப் பாராட்டினார். பிறகு மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டார் செல்வகுமார்.

“ரொம்ப மகிழ்ச்சி கோகிலா. அது சரி, நீ எழுதிய இந்தப் புத்தகத்திற்கு என்ன பெயர் வைச்சிருக்க?’’

“திராவிட மாடல்’’ என்று ‘பட்’டெனப் பதில் சொன்னார் கோகிலா.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *