அகர்தலா சமூகநீதி மாநாடு
கி.வீரமணி
நீடாமங்கலம் பகுதியில் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவரும், தந்தை பெரியாரின் பெருந்தொண்டருமான பூவனூர் மகாலிங்கம் அவர்கள் 10.10.1998 அன்று இயற்கை எய்தினார் என்னும் செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். கழகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்து-கொள்பவர். தனது இறுதிக்காலத்தில் “நான் இறந்துவிட்டால் எனது உடலை தி.க. பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து சுயமரியாதைக் குறைவின்றி அடக்கம் செய்ய வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார். கழக மாநாடுகளுக்கு சுவர் எழுத்து எழுதக் கூடியவர். அவரின் சுவர் எழுத்துகளைக் கண்டு வியந்து ‘விடுதலை’யில் பாராட்டி எழுதியிருந்தேன். அவருக்குக் கழகத்தின் சார்பில் கழக நிருவாகிகள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்கக் கட்டடத்தில், 13.10.1998 அன்று இயக்குநர் வேலுபிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ படப்பிடிப்பை கேமராவை இயக்கி தொடங்கி வைத்தேன். இவ்விழாவில் பாரதிராஜா, சத்யராஜ், மணிவண்ணன், ஜெயதேவி, வைரமுத்து என பெருமளவு திரைத் துறையினர் கலந்து கொண்டனர். விழாவில் பாரதிராஜா உரையாற்றுகையில், “வேதம் புதிது’’ படத்தின்போது ஏற்பட்ட இடர்ப்பாடுகளில், அய்யா வீரமணி அவர்கள், நான் கேட்காமலேயே தானே முன்வந்து கொடுத்த ஆதரவையும், ஊட்டிய துணிவையும் என் வாழ்நாளில் எப்போதும் மறவேன்’’ என உணர்வுப் பொங்கக் கூறினார். எனது உரையில், “தந்தை பெரியார் அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்றார். அந்த நோயிலிருந்து விடுபட்டு திசை திரும்பியிருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் இந்த விழா’’ எனக் கூறி பல கருத்துகளைக் எடுத்துரைத்தேன். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறினர்.
இராமநாதபுரம் பகுதிகளில் ஜாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற, 15.10.1998 அன்று நேரடியாக அப்பகுதிக்குச் சென்று, மக்களிடம் பேசினேன். அங்கு பொதுமக்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஜாதிக் கலவரக் கொடுமைகள் ஏன், எதனால் என்பதை உள்ளக் குமுறலுடன் உணர்வு பொங்கக் கூறினர். அவர்களிடம் மிகுந்த வேதனையுடன், மன இறுக்கத்துடன் ஆறுதல் வார்த்தைகளைக் கூறித் தேற்றினேன். அதன்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு காவல் துறையில் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். கழகப் பொறுப்பாளர்கள் பலரும் உடனிருந்தனர்.
தருமபுரி மாவட்டம் வேப்பிலைப்பட்டியில் அறிவாசான் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா 25.10.1998 அன்று நடைபெற்றது. விழாவில் சிலையினைத் திறந்து வைத்து நான் உரையாற்றுகையில், தந்தை பெரியார் சிலை ஏன் அமைக்க வேண்டும் என்பதை விளக்கியும், நம் மக்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினேன். இவ்விழாவின்போது கழகத் தோழர்கள் லட்சுமண்_முருகம்மாள் ஆகியோரின் பெண் குழந்தைக்கு அறிவுச்செல்வி எனவும், கருணாநிதி_கயல்விழி ஆகியோரின் ஆண் குழந்தைக்கு பெரியார்செல்வன் எனவும் பெயர் சூட்டினேன். விழாவில் அனைத்து கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும், ஊர்ப் பொதுமக்களும் பெருமளவில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர்.
தருமபுரி நகர தி.க. பொருளாளர் ஆர்.சின்னராசுவின் மகன் சி.ஆசைத்தம்பி _ சூடப்பட்டியைச் சேர்ந்த பி.என்.தேவராசன் _ சாலம்மாள் ஆகியோரின் மகள் தே.கீதா ஆகியோரின் இணை ஏற்பு நிகழ்வை தலைமை ஏற்று நடத்தி வைத்தேன். விழா நிறைவுற்றதும் மணமகன் வீட்டார் சார்பாக எனது எடைக்கு எடை ஒரு ரூபாய் நாணயத்தினை கழகத்திற்கு வழங்கினர்.
தமிழ்நாடு ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தலைவரும், சிறந்த பண்பாளரும், தியாகியுமான திருவாளர் மதுரை அய்யணன் அம்பலம் அவர்களும், அவருடன் சென்ற அவரது கட்சியின் செயலாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்களும் மற்றும் சில பொறுப்பாளர்களும் 29.10.1998 அன்று மதுரைக்கருகில் ஒரு கோர விபத்துக்குள்ளாகி இறந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும் துயரமும் அடைந்தேன்.
“கொள்கை மாறுபாடுகள் இருந்தபோதிலும், எவரிடத்திலும் நல்ல பண்போடு பழகும் இனிய பண்பு உள்ளவர் _ பெருமதிப்பிற்குரிய திருவாளர் அய்யணன் அம்பலம் அவர்கள்.
“பொதுவாழ்வில் எளிமையும் அடக்கமும் நிறைந்த ஒருவரை இழந்துவிட்டோம். அவரது கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் விபத்துக்குள்ளாகி இறந்தமை மேலும் அதிர்ச்சியளித்தது.
அவரது கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என இரங்கல் தெரிவித்திருந்தேன்.
கல்கத்தா _ அகர்தலா சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 4.11.1998 அன்று புதுடில்லிக்குச் சென்றேன். அங்கு பாதுகாப்புத்-துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அவரின் ஆலோசகருடன் பெரியார் மணியம்மையார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள், அறிவியல் துறையில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் _ வல்லம் பொறியியல் கல்லூரியும் இணைந்து கிராமப்புறங்களில் மேம்பாட்டுக்கான பல ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது. மேலும், இந்தியா _ பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான கிளாசியர் சிஷன்(Clasier Sischen) என்ற பகுதி பனி நிறைந்த பகுதியாகும். அங்கு பணியாற்றும் இராணுவ வீரர்கள் ‘பிராஸ்ட் ஃபைட்’ என்ற உடல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதனைத் தடுக்க பேராசிரியர் குழு அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் பெரியார் _ மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியிலிருந்து அய்ந்து விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுத்து பணியமர்த்தவும் திட்டமிடப்பட்டது. அதன்பின் அங்கிருந்து திரிபுரா மாநிலத்திற்குப் புறப்பட்டேன்.
திரிபுரா _ வடகிழக்குப் பகுதியில் உள்ள ஓர் சிறிய மாநிலம், புதுவை போன்றது. வளமான இப்பகுதியின் தலைநகர் அகர்தலா. 1949 வரை மன்னராட்சியின் கீழ் இருந்த மாநிலம் இது. இங்கே உள்ள மக்கள் வங்க மொழி பேசக் கூடியவர்கள். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரது பிறந்த நாள் விழாவை தன்னுடைய தோழர்களோடு. மிகுந்த ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் தோழர் உதயசிங் அவர்கள் நடத்தி, தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாளில் ‘அக்ரதூத்’ (Agradoot) என்ற தலைப்பில், ஓர் ஆண்டு மலரையே ஆங்கிலத்திலும் வங்க மொழியிலும் வெளியிட்டவர்.
அவரது அழைப்பினை ஏற்று, கல்கத்தாவில், மேற்கு வங்க OBC, SC, ST, மைனாரிட்டிகள் அமைப்பு நடத்திய சமூகநீதி மாநாட்டில் 8.11.1998இல் கலந்துகொண்டேன். மற்றொரு நிகழ்வாக லயன்ஸ் கிளப் மற்றும் அமைதி முன்னேற்றத்திற்கான மய்யம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திலும் கலந்து கொண்டேன். இதில் சையத் சகாபுதீன் அய்.எஃப்.எஸ்., கிரண்பேடி அய்.பி.எஸ்., ஜே.பிஷா, சந்திரஜித் யாதவ், ருஸ்தம் மோடி ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
09.11.1998 காலை விமானம் மூலம் கல்கத்தாவிலிருந்து அகர்தலா சென்றடைந்தேன். என்னுடன் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் அவர்களும் வந்தார்.
அகர்தலா விமான நிலையத்தில் தமிழ்-நாட்டிலிருந்து சென்று பணிபுரியும் திருமதி வெண்ணிலா (மு.நீ.சிவராசன் அவர்களின் மருமகள்) திருமதி புனிதா, திருவாளர் உதயசிங், 80 வயது தாண்டிய நாத்திகப் பெரியவர் சுபானி மோகன்ராய் (இவர் வீட்டிலேயே அம்பேத்கர், பெரியார் புத்தகங்களை வாங்கி, விற்று கொள்கை பரப்பும் பணியில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர்) ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து எங்களை வரவேற்றனர்.
அதன்பின் அங்கிருந்து திரிபுரா ONGC சமூக மண்டபத்திற்குச் சென்றோம். மண்டபத்தின் ஒருபுறத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இருபெரும் சமூகப் புரட்சியாளர்களின் உருவப் படங்களை வைத்திருந்தனர். பொதுச்செயலாளர் திரு.பி.கே.அதக் அவர்கள் கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்தார்.
தோழர் உதய்சிங் அவர்கள், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். உரையாற்று கையில், “தி.க. பொதுச் செயலாளர் வீரமணி அவர்களை அழைத்து வந்து, அவர்மூலம், தந்தை பெரியார் _ பாபாசாகேப் அம்பேத்கர் லட்சியங்களை இங்குள்ள மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்ற எனது அவா இன்று நிறைவேறுகிறது. இதுபற்றி வர்ணிக்க இயலவில்லை; எனது மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை’’ என்று வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
அதன்பின், பெரியார் _ அம்பேத்கர் ஆகியோரின் சமூகப் புரட்சிக் கொள்கை அடிப்படையில், புத்துலகம் _ புதிய சமுதாயம் அமைப்போம் என்று கருத்தாழம் மிகுந்த பாடல்களை வங்க மொழியில் பாடினர்.
அடுத்து, பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் அவர்கள் ஆங்கிலத்தில் சிறிது நேரம் உரையாற்றினார். “நான் ஒரு சிறு குக்கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எனது தாய், தந்தை இருவரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அப்படியிருந்தும் நான் டிப்ளோமா கல்வியிலும் மாநிலத்தில் முதல் மாணவனாகவும், பிறகு பட்டதாரியாக முதல் வகுப்பு, மேல் பட்டப் படிப்பிலும் முதல் வகுப்பு என்றெல்லாம் பெற்றதற்குக் காரணம் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை, கல்வி முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்ததால்தான். வாழ்க்கையில் முன்னேற, எங்கள் அறக்கட்டளை 43 அமைப்புகளை நடத்தி நாட்டில் நம் மக்களுக்கும் மகளிருக்கும் எப்படியெல்லாம் உதவி வருகின்றோம் என்பதையும் தந்தை பெரியார், அம்பேத்கர் தத்துவங்கள் எல்லாப் பகுதிகளையும் சென்றடையும்போது தான் நாட்டில் சமூகப் புரட்சி முழுமை பெற முடியும்’’ என்றும் விளக்கிப் பேசினார்.
அவரது உரையைத் தொடர்ந்து, நான் ஆங்கிலத்தில் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினேன்.
“கடந்த 2, 3 ஆண்டுகளாக அம்பேத்கர் விழா, பெரியார் விழாக்களை நீங்கள் சிறப்பாக இங்கு நடத்திவரும் உங்களுக்குப் பாராட்டும், நன்றியையும் தெரிவிக்கவே நான் வந்தேன்.
இந்தியாவில் பகுத்தறிவு இயக்கம் என்பது புத்தர் காலத்திலிருந்து தொடங்கிய ஒன்றாகும். அதனையொட்டித்தான் வடபுலத்தில் ஜோதிபாபூலே, அம்பேத்கர் போன்றவர்கள் துவக்கிய இயக்கங்களும் தென்னாட்டில் தந்தை பெரியார் அவர்களது சுயமரியாதை இயக்கமும் தங்களது புரட்சிப் பணிகளை ஆற்றி வருகின்றன.
சுயமரியாதை, பகுத்தறிவு இரண்டும் மனிதர்களுக்கே உரிய தனித்தன்மைகளாகும். இவ்விரண்டும் இல்லாதவர்கள் எவ்வளவு அறிவாளிகளாகத் தங்களைக் காட்டிக் கொண்டாலும், அவர்களால் அவர்களுக்கோ, சமுதாயத்திற்கோ எந்தப் பலனும் இல்லை. தந்தை பெரியார் ஏற்படுத்திய சமூகப் புரட்சி, வைக்கம் போராட்டம் டாக்டர் அம்பேத்கருக்கு, ‘மகத்’ பொதுக்குளத்தில் சத்தியாக்கிரகம் நடத்த ஒரு பெரும் ஆர்வத்தைத் தந்த உந்து சக்தியாகத் திகழ்ந்தது. வடநாட்டில் _ ஏன், அம்பேத்கர் பிறந்த மராத்திய மண்ணில் முந்தைய மகர் குல மக்கள் தங்கள் கழுத்தில் குடுவைப் பானைகளைக் கட்டிக்கொண்டும், பின்னால் முள்ளைக் கட்டிக்கொண்டும் நடந்தனர். பின்னர் அது எப்படி ஒழிந்தது? அதுபோல திருநெல்வேலியில் புரத வண்ணார்கள் எனப் பட்டோர் “பார்த்தாலே தீட்டு’’ உண்டாக்கக் கூடியவர்களாகக் கருதப்பட்டார்கள்; அந்நிலை மாற்றம் அடைந்தது எப்படி? யாரால்? என்று இரண்டு சமூக நிலைகளையும் மண்டல் அறிக்கையிலிருந்து எடுத்துக்காட்டி, இப்படிப்-பட்ட சமூக மாற்றம் _ (Social Transformation) இந்தத் தலைவர்களால் அல்லவா வந்தது’’ என்று அங்குக் கூடியிருந்தவர்களுக்கு விளக்கினேன்.
ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புப் பணிகளை முன்னின்று செய்வதன்மூலமே புதிய சமுதாயம் ஏற்பட முடியும். அதைத்தான் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் செய்து வருகிறது என்றும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.
உங்கள் கல்வியமைச்சர் அனில் சர்க்கார் டில்லியில் கூடிய கல்வியமைச்சர்கள் மாநாட்டில், ‘இந்துத்துவா’ திணிப்பை, சரஸ்வதி வந்தனாவைக் கண்டனம் செய்த துணிவுமிக்க புரட்சியாளர், நல்ல தெளிவுள்ள மார்க்சியர்! அம்பேத்கர், பெரியார் தத்துவங்களைப் புரிந்து, இங்கே அவற்றைப் பரப்பிட, பெரிதும் துணை நிற்பவர் என்று அவரைப் பாராட்டினேன்.
அதன் பிறகு பேசிய கல்வி அமைச்சர் அனில் சர்க்கார், “பார்ப்பனியம் என்பதுதான் இந்துத்துவா; ஆதிக்க சக்திகளுக்குக் கடவுளும், மதமும், மூடநம்பிக்கையும்தான் முக்கியமான ஆயுதங்கள், அதனால்தான் தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள். எனவே, தந்தை பெரியார் இயக்கம் _ கொள்கைகள் இந்தப் பகுதிக்கும் வரவேண்டும், பரவ வேண்டும். அப்போதுதான் பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வு வெகுவாக மக்களிடம் வரும்’’ என்றார்.
பிறகு திரு.பிரதன் நன்றி கூற, இரவு 9:30 மணியளவில் நிகழ்ச்சி சிறப்பாக முடிவுற்றது.
புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலரும், என்.ஜி.ஓ. சங்க முன்னாள் மாநிலத் தலைவருமான சு.அறிவுக்கரசு அவர்களின் பணி ஓய்வுப் பாராட்டு விழா 31.10.1998 அன்று புதுகை எஸ்.வி.எஸ். திருமண அரங்கத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு, அவரையும், அவரது குடும்பத்தினரையும் பாராட்டி சிறப்புரையாற்றினேன். விழாவின் போது என்.ஜி.ஓ. சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட தந்தை பெரியார் உருவம் பதித்த தங்கச் சங்கிலி ஒன்றை சு.அறிவுக்கரசுக்கு அணிவித்து வாழ்த்தினேன். முன்னதாக காட்டுப்புதுக்குளம் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட பெரியார் படிப்பகத்தினை கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சு.அறிவுக்கரசு அவர்கள் திறந்து வைத்தார். படிப்பகத்தில் அமைக்கப்பட்ட கல்வெட்டினை நான் திறந்து வைத்து சிறப்புரையாற்றினேன்.
பட்டுக்கோட்டையில் கழக 1.11.1998 அன்று உறுப்பினர் வீ.மாரிமுத்து _ தனபாக்கியம் ஆகியோரின் செல்வன் மா.சிவஞானத்திற்கும், திட்டக்குடி வீ.கணேசன்_மீனாட்சி ஆகியோரின் செல்வி க.தனலெட்சுமிக்கும் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்தத்தினை தலைமையேற்று நடத்தினேன். மணமக்கள் இணை ஏற்பு ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறி, மாலை மாற்றிக் கொண்டனர்.
மறுநாள், அரியலூரில் கழகத் தோழரான தங்க.சிவமூர்த்தி அவர்களின் மணவிழாவில் கலந்துகொண்டு அவரையும், அவரது வாழ்விணையர் சிவசக்தியையும் இணை ஏற்பு உறுதிமொழி கூறச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தேன்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நாமக்கல் கே.கருப்பண்ணன் அவர்கள் 3.11.1998 அன்று மறைவுற்றார்கள் என்கிற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவர் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு, கழகத்தில் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்தவர். அவருடைய இழப்பு கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என இரங்கல் செய்தி வெளியிட்டேன். எவ்வித சடங்குகளுமின்றி இறுதி மரியாதை நிகழ்வு நடை-பெற்றது. கழகப் பொறுப்பாளர்-களும், தோழர்களும் அதிக அளவில் கலந்துகொண்டனர்.
தஞ்சையில் வ.அரங்கசாமி _ நவநீதம் ஆகியோரின் மகன் ந.அ.குமணனுக்கும், தஞ்சை ரெ.காத்தான் _ குமுதினி ஆகியோரின் மகள் கு.கா.மீனாகுமாரிக்கும் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த நிகழ்வை, 15.11.1998 அன்று தலைமையேற்று நடத்திவைத்தேன்.
மதுரையில் பெரியார் பெருந்தொண்டர் பே.தேவசகாயம் அவர்களின் இல்ல மணவிழா 22.11.1998 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் பே.தேவசகாயம் _ அன்னத்தாயம்மாள் ஆகியோரின் பேத்தியும், மு.தெய்வராசன் _ தமிழரசி ஆகியோரின் செல்வியுமான தெ.செல்வமணிக்கும், கன்னிராஜபுரம் கா.ரா.குருசாமி _ ஆதிலட்சுமி ஆகியோரின் பேரன் _ மதுரை பா.கு.பெருமாள் _ லட்சுமியம்மாள் ஆகியோரின் செல்வன் பெ.எழில்ராஜனுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தே.எடிசன்ராஜா வரவேற்றார். இறுதியாக விவேகானந்தன் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட துணைத் தலைவர் சத்துவாச்சாரி இரா.கணேசன் அவர்களின் இல்ல மணவிழா 30.11.1998 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு நான் தலைமை தாங்கி இரா.கணேசன்_கனகம்மாள் ஆகியோரின் செல்வன் க.சிகாமணிக்கும், கோபாலபுரம் காந்தி நகர் வாசுதேவன் _மாலா ஆகியோரின் செல்வி வா.லதாவிற்கும் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த உறுதி மொழியினை கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன்.
“பாரதிதாசன் பரம்பரை’’யின் முக்கிய கவிஞர்களில் மூத்தவர் முடியரசன். 4.12.1998 கவிஞர் முடியரசன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
“புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை வழியைப் பின்பற்றி ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற ஒரு சீடர்கள் பாரம்பரியத்தை இளைய தமிழினக் கவிஞர்களைக் கொண்டு உருவாக்கித் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது ‘பொன்னி’ இதழ்!
அப்படி உருவாகியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்தான் கவிஞர் திரு.முடியரசன் ஆவார்.
அவரது குடும்பத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெருமையுடையவர்; கொள்கை உணர்வு அவரைக் குன்றென உயர்த்தும்! இறுதிவரை சுயமரியாதைக் கவிஞராகவே வாழ்ந்த அந்த பாரதிதாசன் பரம்பரையின் முதல் கவிஞர் மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அந்தத் தன்மானக் கவிஞருக்கு நமது வீரவணக்கம்!
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்! என்று இரங்கல் செய்தி வெளியிட்டேன். நான் டெல்லி பயணத்தில் இருந்ததால், கழகத்தின் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
(நினைவுகள் நீளும்…)