தமிழவேள் உமாமகேசுவரனார்
(7.5.1883 – 9.5.1941)
தமிழவேள் வேம்பப்பிள்ளை உமாமகேசுவரனார் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தஞ்சை – கரந்தைத் தமிழ்ச் சங்கமும் தமிழ்க் கல்லூரியும் நினைவுக்கு வந்தே தீரும்.
தஞ்சை கரந்தட்டான்குடியில் (கரந்தை) பிறந்தவர் இவர் (7.5.1883). அந்தக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் சட்டம் படிப்பது என்பதே அரிதினும் அரிது. இவரோ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதனைச் சாதித்துக் காட்டிய தலைநிமிர் தமிழராவார்.
அந்தக் காலத்திலேயே பார்-_அட்_-லா படித்த ஏ.டி.பன்னீர்செல்வமும், வழக்குரைஞர் உமாமகேசுவரனாரும் தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சியின் உரமிக்க நிமிர்ந்த தூண்களாக ஒளிவீசினர்.
காந்தியார் அவர்கள் தஞ்சாவூரில் ‘உக்கடை ஹவுசில்’ தங்கி இருந்தார். (16.9.1927) அப்பொழுது காந்தியாரை நீதிக்கட்சி சார்பில் சந்தித்தவர்களில் ஒருவர் உமாமகேசுவரனார் ஆவார்.
பிராமணர் _ – பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும் என்று காந்தியாரிடம் கோரிக்கை வைத்தார்.
‘தமிழ்ப் பொழில்’ என்னும் இதழையும் நடத்தினார். ஸ்ரீமான், ஸ்ரீமதி என்ற வட சொற்களுக்குப் பதில் திருமகன், திருவாட்டி என்னும் சொற்களை அதில் கையாண்டார்.
இராபர்ட் கால்டுவெல்
பிறந்த நாள்: 7.5.1814
தமிழ் மொழி ‘செம்மொழி’ என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் ஆவார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற உயர் பெரும் நூலில் அறிஞர் கால்டுவெல் அவர்கள், திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒதுக்கிவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வருவதும் இயலும் என்று நிறுவிக் காட்டியவர்.
நெல்லை மாவட்டத்து இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்த இல்லம், 20 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அவரது சிலையும் தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் அவற்றைத் திறந்து வைத்தார். (17-.2.-2011).
தெலுங்கு, மலையாளம், துளு, கன்னடம், குடகு ஆகிய மொழிகள் தமிழிலிருந்தே பிறந்திருப்பது மட்டுமல்லாமல், நீலகிரி, ஒடிசா, மற்றும் நாகபுரி ஆகிய மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மொழிகளும் மற்றும் வடக்கே பலுசிஸ்தானத்தில் பேசப்படும் பிராய்கூ ஆகிய மொழிகளும் தமிழ் மொழியிலிருந்தே பிறந்த திராவிட மொழிகள் என்பதை நிறுவியவர் அறிஞர் கால்டுவெல்.
1838 ஜனவரி 8ஆம் தேதி சென்னைக்கு வந்த இந்த அறிஞர் இறுதி மூச்சு அடங்கும்வரை (1891) தமிழ் மொழி ஆய்வுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர்.
தமிழ் செம்மொழி என்ற நிலை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டதற்குக் காரண மானவர்களில் இந்த அயர்லாந்து நாட்டு அறிஞரும் அடக்கமாகும்.
Leave a Reply