பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்
‘நீட்’டை வலிந்து திணிக்கின்றார் – தமிழர்
நெஞ்சில் நெருப்பைக் கொட்டுகிறார்!
வாட்டி வருத்த நினைக்கின்றார் – நல்
வாழ்வின் மேன்மை தடுக்கின்றார்!
முன்னர் நுழைந்த குலக்கல்வி – முக
மூடியை அணிந்து வருகிறது!
என்றும் நஞ்சாம் மனுதருமம் – நம்
இனத்தை அழிக்கப் பாய்கிறது!
இட ஒதுக் கீட்டை எதிர்க்கின்றார் – இங்கே
ஏழைகள் படிப்பதை வெறுக்கின்றார்!
மடமை நோயில் உழல்பவரோ – தமிழ்
மாண்பை மரபை அழிக்கின்றார் !
அனிதா தொடங்கி இருபதின்மர் – நீட்டால்
ஆருயிர் தன்னை இழந்திட்டார்!
துணிந்து பொய்யை விதைக்கின்றார் – நாட்டைத்
துயரக் கடலில் ஆழ்த்துகிறார் !
பொய்யும் புரட்டும் வெல்லாது – வட
புலத்தோர் சூழ்ச்சி பலிக்காது
மெய்யாய் அரசியல் சட்டத்தை – நாளும்
மிதித்தே வன்கொலை செய்கின்றார்!
குமரி தொடங்கிச் சென்னைவரை – அய்யா
கொள்கைப் பரப்புரை மேற்கொண்டார்!
நமது ஆசிரியர் முழக்கத்தால் – நாட்டில்
நாளை மலரும் பொன்விடியல்!
இறந்து விட்ட சமற்கிருதம் – என்றும்
எதற்கும் உதவா இந்தியினைக்
கரவாய் நுழைக்க முயல்கின்ற – தீய
கயமை நாடகம் அறிவோமே!
மாநில உரிமை பறிக்கின்றார் – இன
மான வாழ்வைத் தகர்க்கின்றார்!
யானெனும் செருக்கில் ஆடுகிறார் – நாம்
யாண்டும் ஏற்கோம்! வெல்வோமே!ஸீ
Leave a Reply