நாகையில் பெரியார் சிலைத் திறப்பு
கி.வீரமணி
நெல்லையில் சென்னை பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், திருச்சி_பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஆகியோரின் அண்ணன் ப.முத்துக்கிருஷ்ணன்_லோகநாயகி அவர்களின் மகன் மு.பாஸ்கரனுக்கும், வடகரை நா.சுப்பிரமணியன் _ செல்லம்மாள் ஆகியோரின் செல்வி சு.பிரேமாவுக்கும் 26.8.1998 அன்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தினேன்.
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு திருவெறும்பூரில் 29.8.1998 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. பேரணியும் நடந்தது. தொழிலாளர் கழகப் பேரவைப் பொதுச் செயலாளர் சோ.தங்கராசு தலைமை வகித்தார். மாநாட்டு மேடைக்கு பகுத்தறிவாளர் சி.வீராசாமி பெயர் சூட்டப்பட்டது.
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் சார்பில் எடைக்கு எடை ரூபாய் நாணயங்கள் வழங்கும் விழா மாநாட்டு மேடையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு சிறக்க ஒத்துழைத்த தோழர்களுக்கு ஆடை போர்த்தி, கழகத்தின் சார்பில் சிறப்புச் செய்தேன். தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான திருவெறும்பூர் மாநாட்டுக்கு பல்வேறு பகுதியிலிருந்து தொழிலாளர்கள் அணிவகுப்பாக வந்து கலந்துகொண்டனர்.
மாநாட்டில் சிறப்புரையாற்றிய பின், மறைந்த மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.வீராசாமி அவர்களின் நினைவுக் கல்வெட்டினை எழில் நகர் பகுதியில் திறந்து வைத்து, உரையாற்றினேன்.
சேலத்தில், தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் திராவிடர்கழக உறுப்பினராக, செயல் வீரராகத் தன்னை இணைத்துக்கொண்டு, பிறகு நகராட்சி உறுப்பினராகப் பொதுத் தொண்டு ஆற்றியவரும், வாணிபத்தில் வெற்றி பெற்று கடுமையான உழைப்பாளியாகத் திகழ்ந்தவரும், அன்னை மணியம்மையார் அவர்களிடமும், நம்மிடமும் மாறாத அன்பு கொண்டவரும், கழகத்தின் செயல்பாடுகளுக்கு சிறந்த ஊக்கமூட்டிய பண்பாளரும், தொண்டறம் என்பதை மிகவும் சிறப்பாக எண்ணி, சேலம் பகுதியில் ஓர் அறக்கட்டளை நிறுவி, அதன்மூலம் நல்லுதவிகள் செய்து ஆண்டுதோறும் விழாவைச் சிறப்பாக நடத்தி வந்தவருமான பெருமதிப்பிற்குரிய மானமிகு தோழர் கே.ஆர்.ஜி.நாகப்பன் அவர்கள் 2.9.1998 அன்று சென்னை மருத்துவமனையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.
அவரது தொண்டறத்தின் மூலம் அவர் என்றும் வாழ்பவராகவே இருப்பார் என்றாலும், சேலத்தில் கழகப் புரவலர் மறைவு ஓர் நிரந்தரப் பள்ளத்தை ஏற்படுத்திவிட்டது!
திராவிடர் கழகச் சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களின் உறவினர் மணவிழாக்களை தஞ்சையில் 4.9.1998 அன்று தலைமையேற்று நடத்திவைத்தேன். சாலியமங்கலம் வை.வரதராஜன் _ வசந்தா ஆகியோரின் மகன் செல்வன் வீரமணிக்கும், தஞ்சை மாவட்டம் குளிச்சப்பட்டு வெங்கடாசலம் _ காத்தாயி அம்மாள் ஆகியோரின் மகள் அமுதாவுக்கும் மற்றும் சாலியமங்கலம் கு.கருப்பையா _ சண்முகத்தம்மாள் ஆகியோரின் மகன் பிரகாஷ்க்கும், சாலியமங்கலம் வை.வரதராஜனின் மகள் தமிழ்ச்செல்விக்கும் என இரு இணையேற்பு நிகழ்ந்தன.
கழகத்தின் சார்பில் வடூவூரில் தந்தை பெரியார் அவர்கள் முழு உருவச் சிலைத் திறப்பு விழா 4.9.1998 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு சிலையினை இரவு 8:00 மணியளவில் திறந்துவைத்தேன். இவ்விழா வினையொட்டி மாலை சுயமரியாதைச் சுடரொளி மன்னை நாராயணசாமி நினைவாக மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது. உலகத் தலைவர் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவில் உரையாற்றுகையில், “பகவான் ரமணரிஷி தன்னுடைய சொத்துகளையெல்லாம் தன் தம்பிக்கே உயில் எழுதிவைத்தார். பெரியார் சொத்துகளோ பல வகைகளில் மீண்டும் பொது மக்களுக்கே பயன்படுகின்றன. தந்தை பெரியார் அவர்கள், தான் உருவாக்கிய அறக்கட்டளைக்கு தனது சொந்தக்காரர்களைப் போடாமல், தனது ஜாதிக்காரர்களைப் போடாமல் தன்னுடைய ஆசாபாசங்களுக்கு இடமில்லாமல் கொள்கைக் காரர்களை மட்டுமே தேடிப் பிடித்து வைத்தார்கள்’’ என்று கூறினேன்.
தஞ்சையில் இரயில்வே திருமண மண்டபத்தில் 11.9.1998 அன்று காலை நகர இளைஞரணி தலைவர் பெ.கணேசன் _ சுதா ஆகியோருக்கு வாழ்க்கை இணை ஒப்பந்த ஏற்பு விழாவை நடத்தினேன். அதனைத் தொடர்ந்து மாலை தஞ்சை நகர பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மு.செந்தில்வேலன் _நா.ஜெயந்தி ஆகியோருக்கும் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். இவ்விரு மணவிழாவிலும் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
நமது கழகத்தின் இரு முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் 16.9.1998 அன்று நாகைக்கு வந்தார். அவரை அன்போடு வரவேற்று, கழகத்தினரை அறிமுகப்படுத்தினேன். முதல் நிகழ்வாக பெரியார் _ மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். அவருக்கு கல்லூரி சார்பில் நினைவுப் பரிசும் கொடுத்தோம். அங்கு நடைபெற்ற பெரியார் _ “மிலேனியம் குடிலுக்கு’ (Millennium Cottage) அடிக்கல் நாட்டினார். பெரியார் இணையத்தைத் தொடங்கி வைத்து, பேராசிரியர்களுடனும் மாணவிகளுடனும் உரையாடினார். பட்டமளிப்பு விழா சிறப்புரையில் பெரியாரின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
மறுநாள் கழகத்தின் சார்பில் 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் 120ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாகப்பட்டினத்தில் தன் உச்சநிலை சிறப்பை எய்தியது _ புதிய காவியம் படைத்தது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் _ சமூகநீதியின் சின்னம் _ மூடநம்பிக்கையின் வைரி _ பெண்ணுரிமையின் பேரிகை _ சமதர்மச் சிற்பி தந்தை பெரியாரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்துவைத்தார்.
அன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன் நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தந்தை பெரியார் உருவப் படத்தைத் திறந்து வைத்தார். இந்தச் சிலை மேலக்கோட்டை வாசல் பகுதியில் முக்கோண வடிவத்தில் உள்ள நிலப்பரப்பில் சுற்றிலும் மதிற்சுவர் _ எழுப்பப்பட்டு அதன் நடுநாயகமாக அய்யா சிலை நிறுவப்பட்டு இருந்தது. விரைவில் பூங்காவும், பெரியார் படிப்பகமும் உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம்.
சரியாக இரவு 7:00 மணிக்கு சிறப்புரையாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுடன் விழா மேடைக்கு வருகை தந்தோம். முதல் நிகழ்வாக மேடைக்கு அருகில் உள்ள கொடிக் கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்தேன். நான் எழுதிய ஆங்கில நூலான “The History of the struggle for social justice in TamilNadu”என்னும் நூலை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வெளியிட, சட்டப்பேரவை உறுப்பினர் நிஜாமுதின் பெற்றுக்கொண்டார். “விடுதலை மலரை’’ நான் வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் மஞ்சை வசந்தன் எழுதிய “ஆவிகள் உண்மையா?’’, “சம்பிரதாயங்கள் சரியா?’’ என்னும் இரு நூல்களையும் நான் வெளியிட, திருவாரூர் எஸ்.எஸ்.மணியம் பெற்றுக்கொண்டார்.
அதற்கு அடுத்து எனது உரையில், “தஞ்சாவூர் – நாகூருக்கு இடையே உள்ள இரயில்வே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றிக் கொடுக்குமாறு கோரிக்கை ஒன்றையும் வைத்தேன். டெல்லியில் தந்தை பெரியார் சிலை திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் அப்போது வெளியிட்டு உரையாற்றினேன். அதனை அடுத்து அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உரையில், “சமூகநீதிக்கு உழைத்தவர்களிலேயே தலைசிறந்து மிகவும் உயர்ந்து நிற்பவர் பெரியார் ஆவார். அவருடைய கொள்கையை உலகில் பல இடங்களில் பரப்பிய வருபவர் நண்பர் வீரமணி என்று பாராட்டினார். மேலும், டெல்லியில் பெரியார் விழா கொண்டாட நான் பொறுப்பேற்கிறேன். அவ்விழா சிறப்பாக நடப்பதற்கு உங்கள் ஆதரவையும் கோருகின்றேன். அந்த விழா அவரின் கொள்கைகளை உள்ளத்தில் ஏந்தி அவரின் கொள்கைக்காக உழைக்கின்ற உறுதியினை ஏற்படுத்தும் வகையிலே இருக்க வேண்டும் என தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். விழா குழுத் தலைவர் எஸ்.எம்.ரெங்கசாமி நன்றி கூறினார். இந்தச் சிலை திறப்பு நிகழ்வு நாகை சுயமரியாதைக் கோட்டைதான் என்று மீண்டும் வரலாற்றுக்கு நிரூபணம் செய்தது. விழாவில் அனைத்துக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்ட தி.க. தலைவர் எஸ்.எஸ்.மணியம் இல்ல மணவிழா 20.9.1998 அன்று நடைபெற்றது. மணவிழாவினை தலைமையேற்று நடத்தினேன். மணமகள் எஸ்.எஸ்.மணியம் _ இராசலட்சுமி மணியம் ஆகியோரின் பேத்தி ஆவார். ஜி.கிருஷ்ணமூர்த்தி _கே.தமிழ்ச்செல்வி ஆகியோரின் செல்வன் சுகுமாருக்கும், எஸ்.கிருஷ்ணமூர்த்தி _அமிர்தகவுரி ஆகியோரின் செல்வி அன்பு கீதாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். விழாவையொட்டி இலவச கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது.
அமெரிக்கா _ சிகாகோவில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 27.9.1998 அன்று ரிச்போர்ட் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் பெரியார் பன்னாட்டமைப்பு மூலம் ‘கீதையின் மறுபக்கம்’ நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. விழாவில் மானமிகு வ.ச.பாபு (அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஒருங்கிணைப்பாளர்), உலகத் தமிழ்மொழி அறக்கட்டளைத் தலைவர் அழ.இராம்மோகன், அமெரிக்க வாழ் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர். மானமிகு பேராசிரியர் சோம.வேலாயுதம் அவர்கள், “கீதையின் மறுபக்கம்’ நூலை அறிமுகப்படுத்தி, அந்த நூல் எழுதப்பட்டதன் நோக்கம், பரப்பப்படுவதன் நோக்கம் மற்றும் ஆதாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட பகுதிகளை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார். பேராசிரியர் சோம.இளங்கோவன் நன்றி கூறி நிகழ்வினை நிறைவு செய்தார்.
தமிழறிஞர் முனைவர் சாலை இளந்திரையன் 4.10.1998 அன்று மறைவுற்றார். செய்தி அறிந்து வருந்தி இரங்கல் தெரிவித்தோம். தில்லிப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து அரும் பணியாற்றியவர். சிறந்த பகுத்தறிவாளர், இனவுணர்வாளர்!
அவரது மறைவு முற்போக்கு எண்ணங் கொண்டவர்களுக்குக் குறிப்பிடத்தகுந்த இழப்பாகும்.
அவரது பிரிவால் வருந்தும் அவரின் குடும்பத்தினர்க்கும் _ குறிப்பாக வாழ்நாள் எல்லாம் அவரோடு தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இணை பிரியாதிருந்த அவரின் துணை
வியார் திருமதி சாலினி இளந்திரையன் அவர்களுக்கும், தமிழன்பர்களுக்கும், கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினேன். கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழறிஞர்கள் பலரும் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்திய _ சீன நட்புறவுக் கழக மாநிலக் கூட்டம் 4.10.1998 அன்று காலை 10:00 மணியளவில் சென்னை _ பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான் தலைமை உரை நிகழ்த்தினேன். நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சங்க தலைவர் ரவீந்திரதாஸ், சி.பி.அய். கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியோர் உரையாற்றினர்.
மேற்கு வங்கக் கூட்டுறவுத் துறை அமைச்சர் பி.பி.மண்டல் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், இந்திய _ சீன நட்புறவுக் கழகத்தை தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதற்கான காரண காரியத்தை விளக்கிப் பேசினார்.
இந்திய _ சீன நட்புறவுக் கழகத்தின் மாநில அமைப்புக் கூட்டத்தில் புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
இறுதியாக இந்திய _ சீன நட்புறவுக் கழக செயலாளர் தினகரன் நன்றி கூறினார்.
புதுடில்லியில் நடக்க இருக்கும் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள நூறு கழகத் தோழர்கள் 5.10.1998 சென்னையிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் டில்லி பயணமானார்கள்.
தனி இரயில் பெட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் கழகத் தோழர்கள் பயணமானார்கள். கழகக் கொடியும், டில்லி விழா பற்றிய பதாகையும் அப்பெட்டியில் கட்டப்பட்டிருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்று தோழர்களை வழியனுப்பி வைத்தேன்.
திராவிடர் கழக உதவிப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம் ஆகியோரும் வழியனுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
(நினைவுகள் நீளும்…)