முனைவர் வா.நேரு
மார்ச் 20, 2022 தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒருநாள். தமிழ்நாடு முழுவதும் அரசு நடத்தும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. திருமணத்திற்கு அழைப்பிதழ் அடித்து வாருங்கள் என அழைப்பதுபோல, நம் பள்ளி நம் பெருமை அழைப்பிதழ் என அச்சிட்டு வழங்கி, பெற்றோர் அனைவரும் அழைக்கப்-பட்டனர்.
“நம் ஊரில் உங்கள் பிள்ளை பயிலும் அரசுப் பள்ளிக்கு உங்களை வரவேற்கிறோம். இது உங்கள் பள்ளி. நாம் இணைந்துதான் பள்ளியை மேம்படுத்த வேண்டும். பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெற்றோராகிய உங்கள் பங்கு இருப்பது அவசியம். உங்களுடைய சிறப்பான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்காகவே பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உள்ளன என்று ஆரம்பிக்கும் அந்த அழைப்பிதழ் பல செய்திகளைக் குறிப்பிட்டு, பெற்றோர் அனைவரையும் பள்ளி மேலாண்மைக் கூட்டத்திற்கு வரச் சொன்னது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அதிலும் குறிப்பாக பெண்கள் எல்லா ஊர்களிலும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானது. சில பத்தாண்டுகளுக்கு முன்னால் கிராமங்களில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர் பெரும் பங்கு வகித்தார்கள். நன்கொடை கொடுத்தார்கள். பள்ளிக் கட்டடம் கட்ட இடம் மனம் உவந்து அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். மிகச் சுமுகமான உறவு இருந்தது.
இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் பெற்றோரின் பங்களிப்பு என்பதில் அலட்சியம் காட்டப்பட்டது. ஆனால், இந்தியாவில் நிருவாகத் திறமையால் முதலிடத்தில் இருக்கும் இன்றைய முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் அரசுப் பள்ளிகள் மேல் காட்டப்படும் அக்கறையும் கவனிப்பும் நம்மைப் போன்றவர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது.
தமிழ்நாட்டில் +2 முடித்த பிறகு உயர்கல்வி படிப்பவர்கள் சதவிகிதம் (GER Ratio) = 50%. அதாவது, +2 தேர்வு எழுதிய 8.5 லட்சம் மாணவர்களில், சுமார் 4.25 லட்சம் மாணவர்கள் (50%) உயர்கல்வி பயில்கின்றனர்.
தமிழ்நாட்டில் 8.5 லட்சம் மாணவர்களில் (ஆண்டுதோறும் +2 தேர்வு எழுதுவதில்), அரசு பள்ளியில் மட்டும் 3.4 லட்சம் மாணவர்கள் (40%) படிக்கின்றனர். அவர்களில் 1.7 லட்சம் மாணவிகள்(50%). தற்போது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உயர்கல்வி படிக்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்ற திட்டம் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெற வாய்ப்புண்டு. மேற்படிப்பு என்பது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை உள்ளது. சராசரியாக 4 ஆண்டு மாணவிகளுக்கு அரசு கட்டப்போகிறது என கணக்கிட்டால், ஆண்டுக்கு ஒரு மாணவிக்கு ரூ.12000 வரை அரசுக்கு நிதி தேவைப்படும். ஒவ்வோர் ஆண்டிலும் 1.5 லட்சம் மாணவிகள் ஜ் ரூ.12000 என கணக்கிட்டால், 4 ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.720 கோடி தேவைப்படும்.
ஆண்டுக்கு ரூ.720 கோடி ஒதுக்குவதால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகும் பயன்கள்.
¨ +2 முடித்த பிறகு உயர்கல்வி படிப்பவர்கள் சதவிகிதம் என்பது 50%இல் இருந்து 60% வரை உயர்ந்து விடும்.
¨ மேற்படிப்பு படிப்பவர்களில் பெண்களின் சதவிகிதம் கணிசமாக உயரும்.
¨ உயர்கல்வி படித்த பெண்கள் சுயமாக வேலைக்குச் செல்லவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
¨ நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டண-மின்றிப் பயணம் செய்யலாம் என்பதால், பெண்களின் முழுமையான சம்பளப் பணம் குடும்பத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
¨ “பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்” என்கிற கூற்றை விரைவில் எட்டிப் பிடிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழும். தந்தை பெரியாரின் பெண் விடுதலை என்னும் தத்துவத்திற்கு அடிப்படையான பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு ஏற்படும்.
கர்மவீரர் காமராஜர் காலத்தில் நிறைய பள்ளிக் கூடங்களை திறந்தாலும், ஏழ்மை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தனர். அதனை அறிந்த காமராஜர் மாணவர்களுக்கு இலவச மத்திய உணவுத் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானவர்கள், முந்தைய தலைமுறையினர் படித்தனர்; பதவி பெற்றனர்.
“அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் பட்டப் படிப்பில் தேர்வாகிடுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்வது தடுக்கப்பட, அத் தொழிற்படிப்புப் படிக்கும் பெண்களுக்கு _ -மாணவிகளுக்கு- மாதம் ரூபாய் ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த அடிக்கட்டுமான ஆக்கம் ஆகும்” என்று திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் அமையும் பள்ளி மேலாண்மைக் குழு சமூக நீதி அடிப்படையில், பட்டியல் இனத்தைச் சார்ந்த, மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்கள் என அனைவரும் பங்கு பெறும் குழுக்களாக அமைக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் குழுவில் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் பெண்ணாக இருப்பார் என்று ‘நம் பள்ளி, நம் பெருமை’ அழைப்பிதழ் குறிப்பிடுகிறது.
களைகளைக் களைந்தால்தான் பயிர் வளர முடியும். ஒழுங்கீனமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் அரசுப் பள்ளிகள் வளர முடியும். அது மாணவ, மாணவிகள் என்றாலும் சரி, ஆசிரியர்கள் என்றாலும் சரி. ஜாதிய சமூகமான இந்தியச் சூழலில் நடவடிக்கை எடுப்பதற்கும் களைகளைக் களைவதற்கும் பெற்றோரின் ஒத்துழைப்பு என்பது மிகத் தேவை. கழிவறை, குடி தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதோடு நல்ல படிப்பு நிலை உருவாக பெற்றோரின் பங்களிப்பும், கவனிப்பும் மிக அவசியம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கு ஒரே வழி கல்விதான். கல்வியின் வழியாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பும், தொழிலும், வாய்ப்புகளும்-தான். பள்ளிக் கல்வி செலவின்றிப் படிக்கலாம். பள்ளிப் பேருந்தில் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம். பள்ளிப் பாட நூல்கள், கற்றல் கருவிகள் அரசால் கொடுக்கப்படுகிறது. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் இல்லை. சைக்கிள், லேப்டாப் என்று மாணவ, மாணவிகள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டு, “திராவிட மாடல்’’ என்பதை, இந்தியாவிற்கே மாடல் என்ற வகையில் வழி காட்டுகிறது.
‘பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!!’
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்தத் திசையில் மிக அழுத்தமாக அடியெடுத்து வைக்கும் தமிழ்நாட்டு அரசின் ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டத்திற்குத் துணை நிற்போம். இது ‘அடிக்கட்டுமான ஆக்கத் திட்டம்’. படிக்காதே என்று சொன்ன வர்ணாசிரமத் தத்துவத்தைத் தகர்க்கும் திட்டம். ஒன்றிணைவோம்; செயல்படுத்துவோம். ஊர் கூடி அரசு பள்ளிக் கூடத்தை மேலும் நல்ல வழிக்கு வர இழுப்போம்.