தந்தை பெரியார்
தோழர் டாக்டர் அம்பேத்கர் நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தலைமை வகித்துச் செய்த தலைமைப் பிரசங்கத்தில்,
“மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய் விட்டன.
இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது குறைகளும், இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்-பார்ப்பது ஏமாற்றத்தைத் தான் அளிக்கும்.
இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம் முடிவு என்னவென்றால், நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான். நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்பந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும். நாம் நம்மை இந்துக்கள் என்று இனி கூறிக்-கொள்வது கூடாது. அதனால் தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.
நாம் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர்களுக்குத் துணிவு இருக்காது. “எந்த மதத்தினர் உங்களுக்குச் சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப்-பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.
பிறக்கும் போதே நான் தீண்டப்-படாதவனாய்ப் பிறந்தேன் என்றாலும், அது நான் செய்த குற்றமல்ல. ஆனால், இறக்கும் போது நான் தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஓர் இந்துவாய் இறக்கப் போவதில்லை’’ என்று பேசி இருக்கிறார்.
இப்பேச்சுக்குப் பிறகு சுமார் 15000 பேர்கள் கூடியுள்ள அம்மகாநாட்டில் ஏகமனதாய் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.
அதாவது, “ஆதி இந்துக்கள் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகிவிட வேண்டும். சமத்துவ பாவிப்பு உள்ள வேறு எந்த மதத்திலாவது சேர்ந்து கொள்ள வேண்டும்” என்பதாகும்.
இதற்கு இந்துக்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள், “வருணாசிரமமும், கீதை உபதேசமும் எனது இரு சுவாசங்கள்” என்றும், “இந்து மதமே நானாய் இருக்கிறேன்’’ என்றும் சொல்லும் காந்தியாரும்,
மதத்தில் நாங்கள் பிரவேசிப்பதில்லை என்றும், பழைய கலைகளையும் பழைய பழக்க வழக்கம், தொழில்முறை ஆகியவைகளையும் வெகு பத்திரமாய் காப்பாற்றிக் கொடுப்போம் என்றும், இந்துக்களுக்கும் வருணாசிரம தர்மிகளுக்கும் வாக்குறுதியும் பாதுகாப்பும் அளித்திருக்கும் சமதர்ம காங்கிரஸ்காரர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
தோழர் அம்பேத்கர் அவர்கள் பேசியிருக்கும் பேச்சும், பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானமும் புதிதல்ல. அல்லது அவர்களே முதன் முதல் கண்டுபிடித்த சொந்தக் கருத்தல்ல.
ஏனெனில், இந்து மதத்தை பார்ப்பனரல்லாத மக்கள் விட்டு விட வேண்டுமென்றும், யாரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், சுயமரியாதை இயக்கமானது 1925 முதலே சங்கநாதம் செய்து வருகிறது.
சென்ற ஜன கணிதத்தில் அநேக ஜாதி இந்துக்கள் என்பவர்களே தங்களை இந்துக்கள் அல்ல என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தீண்டப்-படாத வகுப்பு என்பதைச் சேர்ந்தவரல்ல என்று சொல்லப்-படுபவரானாலும், தான் சாகும் போது இந்துவாய்ச் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருஷத்துக்கு முன்பே சொல்லி இருக்கிறார்.
அதுமாத்திரமல்லாமல் “இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், அது ஜாதி பாகுபாட்டின் பயனாய் பயன் அனுபவிக்கும் சோம்பேறிக் கூட்டத்தின் கற்பனை என்றும் சொல்லி, அந்தப்படி பல மகாநாடுகளில் பல தீர்மானங்களும் செய்யச் செய்து இருக்கிறார். இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் மனு நூலையும், இராமாயணத் தையும் சுட்டெரிக்க வேண்டும்” என்று, 1922இல் திருப்பூரில் கூடிய சென்னை மாகாண தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாய் இருக்கும்போதே கூறி இருக்கிறார்.
அந்தப்படியே பல சுயமரியாதை மகாநாட்டில் இராமாயணமும், மனுதர்ம சாஸ்திரங்களும் சுட்டெரிக்கப்பட்டும் இருக்கின்றன. மற்றும் கேரள தேசத்து அதாவது மலையாளம், கொச்சி, திருவாங்கூர் தேசத்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய தீயர், ஈழவர், நாடார், பில்லவா ஆகிய சுமார் 20 அல்லது 30 லட்சம் ஜனத்தொகை கொண்ட சமூகம் தங்களது மகாநாட்டிலும் தாங்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்றும், தங்களை இனி யாரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கையே இல்லை என்றும், பல தீர்மானங்கள் இந்த 6,7 வருஷகாலமாகவே 10000க்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.
கடைசியாக 1933இல் கூட்டப்பட்ட எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் அவர்களது சமூக மகாநாட்டில் மிதவாதி பத்திராதிபரும், பெரிய செல்வவானும், சென்னை சட்டசபை அங்கத்தினருமான தோழர்சி. கிருஷ்ணன், பி.ஏ., பி.எல்., அவர்களது தலைமையில், “ஈழவ சமூக மக்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. ஆதலால் ஈழவ சமூக மக்கள் தங்களை இனிமேல் இந்துக்கள் என்றும் யாரும் சொல்லிக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.
ஆகவே, பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டுத் தீர்மானமும் தலைவர் அம்பேத்கர் அவர்களது வீர கர்ஜனையும் எதுவும் புதிதல்ல.
இவற்றிற்கு இதுவரை காந்தியாரும், காங்கிரசாரும் வருணாசிரமிகளும், பார்ப்பனர் களும், இந்துமத பாதுகாப்பாளர்களும் என்ன பதில் சொல்லி வந்தார்களோ, எப்படிக் கருதினார்களோ அப்படியேதான் இதையும் கருதுவார்கள். இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
தீண்டப்படாதவர்கள் விஷயமாகவோ, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும், ஜாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.
கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் தெய்வத்தன்மையில் இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றது. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன. ராம் மோகன் ராய், மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன.
இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்-படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது. மேற்கண்ட பெரியார்களுக்கு, சிஷ்யர்களாக 100 பேர்களோ, பதினாயிரம் பேர்களோ, ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.
அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லட்சம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றபடி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழைய நிலைமையேதான் சட்டதிட்டங்கள் மூலம், வருணாசிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
ஆகவே, இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல் கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத்தக்கவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது, இவர்களைப் பண்டார சன்னதிகள், சங்கராச்சாரியார்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும், தூற்றப்படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக் கூடும்.
எனவே, தோழர் அம்பேத்கர் அவர்களின் கர்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவு-தான் வெறுக்கப்பட்ட போதிலும், அவர் எவ்வளவுதான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திர-மல்லாமல் இந்தியாவிலுள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாசாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவியாகப் போகிறது.
– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 20.10.1935