Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கல்வி : இந்தியாவில் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் உருவாக்கம்

-இந்தியாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

கல்வித்துறை அறிஞர்கள், அனைத்து பல்கலைக்கழகங்கள் சேர்ந்து உருவாக்குவது-தான் டிஜிட்டல் பல்கலைக்கழகம். இது செயல்பாட்டுக்கு வந்தால் கல்லூரி மற்றும் பல்கலைகளில் இடம் கிடைக்கவில்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை. மாணவர் சேர்க்கைக்கு எந்த வரம்பும் இல்லை என்று குறிப்பிட்டு டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் வடிவத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் உயர்கல்வித் துறை நிருவாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கூடி, டிஜிட்டல் பல்கலைக்கழகத் திட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர். அதில் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகளை டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற யார் வேண்டு-மானாலும் டிஜிட்டல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற முடியும். மாணவர் சேர்க்கை இடங்களுக்கு எந்த வரையறையும் இல்லை. எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அனைவருக்கும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் பட்டம் வழங்க முடியும். தற்போதுள்ள நடைமுறையில் மாணவர்களைக் கழித்து வெளியேற்றும் சேர்க்கை முறையே பின்பற்றப்-படுகிறது. இதில் பல மாணவர்கள் உயர்கல்வி மய்யங்களில் இடம் கிடைக்காமல் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு டிஜிட்டல் பல்கலைக்கழகம் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டிஜிட்டல் பல்கலைக்கழகம், இணையத் தொடர்புடன் கூடிய ‘ஹப்-ஸ்போக் மாடல்’ மூலம் இயங்கும். அதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் அங்கங்களாக இருக்கும். அவை அனைத்திலும் இருந்தும் பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் குறித்த வீடியோ விவரங்களைப் பெற்று அவற்றை மாணவர்களுக்கு வழங்கும் மய்யமாக டிஜிட்டல் பல்கலைக்கழகம் செயல்படும்.

இந்தப் புரட்சிகரமான முயற்சிக்கு நிலையான இணையத்தொடர்பு, அவசியமான மின்னணு சாதனங்கள், மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கும் காலவரையறை, ஆன்லைன் மூலம் பாடங்களை மாணவர்-களுக்குக் கொண்டு சேர்க்கும் முறை ஆகியவை சவால்களாக இருக்கும் என்று கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் பைஜுஸ் போன்ற கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் அமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள தொழில்நுட்ப உதவிகளை டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்குப் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 8ஆ-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 84 லட்சத்து 65 ஆயிரம் பேர் மட்டுமே கல்லூரிகளில் சேருகின்றனர். இன்னும் 15 ஆண்டுகளில் 18 முதல் 23 வயதுடைய இளைஞர்களில் 50 சதவிகிதம் பேரை உயர்கல்விக்குக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கோடு டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக, படித்தவர்கள் நிறைந்த மாநிலமாகக் கருதப்படும் கேரளாவில் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் கேரள நிருவாகவியல் அய்அய்டி-யை தரம் உயர்த்தி அம்மாநில அரசு டிஜிட்டல் பல்கலைக்கழகமாக மாற்றியுள்ளது.