முனைவர் வா.நேரு
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய 69ஆம் பிறந்த நாளான மார்ச் 1, 2022 அன்று அறிவித்து, தொடங்கி வைத்த திட்டமான ‘நான் முதல்வன்’ என்னும் திட்டம் நம்மைப் போன்றவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னுடைய ‘கனவுத் திட்டம்’ என்று இந்தத் திட்டத்தை, நமது முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்தம் கனவுத் திட்டம், தமிழ்நாட்டினை வளமாக்கும் ஒளிமயமான திட்டம். நீண்ட காலப் பலனைக் கொடுக்கப் போகும் திட்டம். இத்திட்டம் நல்விளைச்-சலைக் கொடுக்கவிருக்கும் திட்டம். ‘திராவிட மாடல்’ அடிப்படையில் அமைந்த திட்டம். ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் அடிப்படையில் அமையும் திட்டம் இது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கிராமங்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட வீட்டுப் பிள்ளைகளுக்கு படிக்கும்போது என்ன பாடம் படிக்க வேண்டும், நம்மிடம் இருக்கும் திறமை என்ன? அதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்பதற்கான பயிற்சி தேவைப்படுகிறது. அந்தப் பயிற்சியை சிறிய அளவில் தனி மனிதர்கள், தனி அமைப்புகள் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அந்த வழிகாட்டலை அரசாங்கம் செய்யப் போகிறது. பொருளாதார நிலையில், சமூக அடிப்படையில் கடைக்கோடியில் இருக்கும் மாணவ, மாணவியருக்கும் இந்த வழிகாட்டல் கிடைக்கப்போகிறது.
‘நான் முதல்வன்’ என்னும் இந்தத் திட்டம் பற்றி “தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றி-யாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்” என்று குறிப்பிட்டிருக்-கிறார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் தனித்திறமை உள்ளது. அந்தத் திறமையை தங்களது இளமைப் பருவத்திலேயே அடையாளம் கண்டு கொள்பவர்கள் மேலும் மேலும் அதில் ஈடுபட்டுத் தங்களை மேம்-படுத்திக் கொள்வதோடு, அந்தத் திறமையில் முதல்வர்களாய் ஆகிறார்கள். நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிகப் பெரிய பலனைக் கொடுக்கிறார்கள்.
கணினி, இணைய வளர்ச்சிக்குப் பின்பு வாய்ப்பு என்பது உலக அளவில் கிடைக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் நிறுவனத்திற்கு தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்துகொண்டு இணையத்தின் மூலமாக மென்பொருள் செய்து கொடுக்க முடிகிறது; பாடம் எடுக்க முடிகிறது. ஆனால், இதில் பார்ப்பனர்கள் எப்போதும் போல பெரிய நிறுவனங்களில் அமர்ந்து கொண்டு, தங்கள் பார்ப்பன இனத்தாரை தங்கள் நிறுவனங்களுக்குள் கொண்டு வருவதிலும், அதிகப் பண பலன் அளிக்கும் வேலைகளை அவர்களுக்குக் கொடுப்பதுமாக இருக்கிறார்கள். சமூகநீதி ஆட்சியான இந்த ஆட்சி, பார்ப்பனர் அல்லாத, திராவிட இனத்து மாணவ, மாணவிகள், இளைஞர்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகவும், எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்-பதையும் இணைத்து 20 வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் “மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்” என்று குறிப்பிட்டிருக்-கிறார்கள். அதனைப் போல “தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்” என்றும் குறிப்பிட்டிருக்-கிறார்கள். கிராமப் புறத்திலிருந்து வரும் மாணவர்கள் தடுமாறும் இடம் ஆங்கிலமே. அதனைப் போக்க பயிற்சி அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
அண்மையில் ஒரு யூ டியூப் பேட்டியில் முந்நாளைய காவல்துறை உயர் அதிகாரி, எழுத்தாளர் திலகவதி அய்.பி.எஸ். அவர்கள் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் “டாக்டர் கலைஞர் அவர்கள், முதன்முதலாக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், 1970களில் ஒன்றிய அரசு நடத்துகின்ற அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பரீட்சை எழுது-வதற்கான வழிகாட்டி மய்யம் அமைத்தார். நான் அப்படிப்பட்ட வழிகாட்டி மய்யத்தால் வழிகாட்டப்பட்டதால், யு.பி.எஸ்.ஸி. தேர்வு எழுதி அய்.பி.எஸ். ஆனேன். அதற்கு முன்னால் எனக்கு அந்தத் தேர்வு பற்றித் தெரியாது. பிற்பட்ட நிலைமையில் இருந்து வந்தவள் நான்’’ என்று குறிப்பிட்டார். டாக்டர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, இன்றைய முதல்வர் ஆட்சியில் இன்னும் விரிவடைகிறது.
ஆற்றலோடு பிறக்கும் குழந்தையை, அந்த ஆற்றலைச் சிந்தாமல், சிதறாமல் நாம் எப்படி எடுத்துச் செல்வது என்பதைத் தீர்மானிப்-பதற்காகவும், அவர்கள் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் ‘நான் முதல்வன்’ என்னும் இந்தத் திட்டம். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள், அதனை முடித்த பிறகு, வேலையைத் தேடும் இளைஞர்களுக்கு அவர்கள் எந்தத் திசையிலே தேட வேண்டும் என்பதைப் புரிய வைப்பதற்காகவும், அவர்கள் முயற்சியோடு தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்காகவும் பணிகளைப் பெறுவதற்-காகவும் திறன்களைச் செதுக்குவதற்காகவும் நல்ல பணியில் அமர்ந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல எதிர்காலத் தமிழ்நாட்டைச் செப்பனிடுவதற் காகவுமேதான் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டிருக்கிறது.”
“தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்-கேற்ப பள்ளி மாணவ, மாணவியருக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்-படும்” என்று இந்தத் திட்டத்தில் குறிப்பிட்டிருக்-கிறார்கள். டாக்டர் கலைஞர் அவர்கள் கணினியின் பயன்பாட்டை முன்னமே புரிந்துகொண்டு, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரி மாநிலமாக கணினிக் கல்வியைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தியவர்.
இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அரசுப் பள்ளிகளுக்கு, அரசுக் கல்லூரிகளுக்கு கொடுக்க வேண்டும். நன்றாகப் படிக்கக்கூடிய குழந்தை-களைக் கூட ‘ஜாதகப் பலன்’ பார்த்து, படிப்பை நிறுத்தும் கொடுமையெல்லாம் இருக்கிறது. அவற்றையெல்லாம் வெல்லும் மன உறுதியை, தர்க்கம் செய்து பெற்றோரின் அறியாமையைப் போக்கி, குழந்தைகள் மேல் படிப்பு படிப்பதை உறுதி செய்ய வேண்டும். பகுத்தறிவு என்பது தன்னம்பிக்கை. எனவே, பகுத்தறிவு அடிப்படை-யிலான தன்னம்பிக்கை ஏற்பட மாணவ, மாணவிகளுக்கு வழி செய்ய வேண்டும்.
ஆசிரியர்களின் பணிச்சுமை மிக அதிகம். அவர்களை மட்டுமே நம்பி இராமல், இதற்கென ஒரு தனி வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது போல், தனித் துறையாக இது ஆக்கப்பட வேண்டும். மாணவ, மாணவியரின் தனித்திறனை அறிந்து, அவர்களின் மதிப்பெண் பட்டியலிலேயே அவர்களின் தனித்திறனும் இணைத்து அச்சிடப்படும் முறையைக் கொண்டு வரலாம். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை முறைப்படுத்தி, பெற்றோர், பழைய மாணவர்கள் என ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குழுவின் மூலமாக இத்திட்டத்தை இன்னும் செம்மையுறச் செய்யலாம். அனைத்துத் தரப்பினரையும் இணைத்து மக்கள் இயக்கமாக இந்தத் திட்டம் மாறவேண்டும்.