பெண்கள் மன வலிமையும் உடல் வலிமையும் அற்றவர்கள் என்று ஆணாதிக்கச் சமுதாயம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்-கிறது. ஆனால், உண்மையில், நோய்களை எதிர்கொண்டு அதிக நாள் வாழ்வதில் (Longivity) பெண்களுக்கே முதலிடம், ஆண்களுக்கு இரண்டாம் இடம் என்று பல ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. அதேபோல, ஆண்களைவிட பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்பதையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகம் முழுக்கப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
பெண்களின் உடற்கூறிலேயே வலியைத் தாங்கக்கூடிய சக்தி அதிகமாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள். பிரசவ வலி ஒன்றே அதற்குரிய எடுத்துக்காட்டு. பெண்களுக்கு காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டால், அவர்களால் அதையும் எதிர்கொண்டு வீட்டு வேலை, குழந்தைகள் என தங்களது பிற கடமைகளையும் கவனிக்க முடியும்.
ஆனால், ஆண்கள் நோய்வாய்ப்பட்டால், தங்கள் உடல் வலியைப் பற்றி மட்டுமே பிரதானமாக யோசிப்பார்கள். மேலும், அது போன்ற சூழல்களில் பெண்களை அதிகம் சார்ந்திருப்பார்கள்.
பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலை-களைச் செய்வதில் திறன்மிக்கவர்கள். தன்னம்பிக்கை ஆண்களைவிட பெண்களுக்கே விரைவாகப் பிறக்கும்.
குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், பழக்கவழக்கங்கள், கல்வி எனப் பல கூறுகளிலும் கவனம் கொடுத்துப் பிள்ளைகளை வளர்த்-தெடுக்கும் பொறுப்பில், பெண்கள் தளர்வடை-வதே இல்லை. கணவனால் கைவிடப்-பட்ட கடினமான சூழலில்கூட, குழந்தைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வதில் பெண்களே உறுதி உடையவர்கள்.
தடைகள், இடர்கள், நெருக்கடிகளை எதிர்கொண்டு, அவற்றைக் கடந்து அல்லது தகர்த்துச் சாதிக்கும் திறன் பெண்ணுக்கு அதிகம். காதல் தோல்வி போன்ற ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளில் பெண்கள் நிதர்சனத்தை ஏற்றுக் கடப்பார்கள். ஆண்கள், உடைந்து-போன புள்ளியிலேயே நிற்பார்கள். அதற்கான ஏற்புத்தன்மை ஏற்பட அவர்களுக்குக் காலம் ஆகும். கலந்தாய்வுக்கு (Councelling) வருபவர்களில் இதுபோன்ற ஆண்களை அதிகம் பார்க்க முடியும்.
முதுமைக் காலத்தில் ஆண் துணையை இழந்த பெண்ணால் தன்னைத் தொடர்ந்து பார்த்துக்கொள்ள முடியும். அதுவே, ஆயுள் முழுக்க பெண்ணையே சார்ந்திருக்கும் வாழ்வை வாழும் ஆண்களுக்கு, தன் துணையை இழந்ததுக்குப் பின்னான வாழ்வு சிக்கலானதாக ஆகிவிடும்.
மேலே கூறியவை பெரும்பாலான பெண்கள், ஆண்கள் நிலை. சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஆய்வுகள் அறிவிக்கும் உண்மை நிலை இதுதான்.
பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டும், அவள் தன்னிச்சையாய் செயல்பட இயலாது என்பவை, மரபுவழி திணிக்கப்படும் மடமைகள் ஆகும்.
இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் (மண்ணிலும் விண்ணிலும்) ஆண்களையும் விஞ்சும் அளவில் சாதித்து வருகின்றனர்.
ஆட்சித் துறையிலும் பெண்கள் தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு பெண்கள் பெரும் எண்ணிக்கை-யில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், பெண்ணால் முடியும், என்னால் முடியும் என்ற துணிவுடன், உறுதியுடன், நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கணவன் பின்னணியில் இயக்குகிறார் என்ற அவல நிலைக்கு எந்தப் பெண்ணும் இடம் தரக்கூடாது. தானே திறம்பட ஆட்சி நிருவாகத்தை நடத்த வேண்டும். அதுதான் அடுத்த நிலைக்குச் செல்வதற்கான தன்னம்பிக்கையை _ மனவுறுதியைத் தந்து பெண்களை முன்னேற்றும்.