அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (289)

மார்ச் 16-31,2022

இந்துத்வா எதிர்ப்பை மீறி கீதையின் மறுபக்கம் மலேசியாவில் வெளியீடு!

கி.வீரமணி

புதுதில்லி வித்தல்பாய் மண்டபத்தில் சமூகநீதி மய்யத்தின் கருத்தரங்கக் கலந்துரையாடல் கூட்டம் 9.7.1998 அன்று அதன் தேசியத் தலைவர் திரு.சந்திரஜித் யாதவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கழகத்தின் சார்பாகவும் இந்திய சமூகநீதி மய்யத்தின் (Center for Social Justice of India) துணைத் தலைவர் என்கிற முறையிலும் கலந்து கொண்டேன்.

கருத்தரங்கக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய திரு.சந்திரஜித் யாதவ் அவர்களின் உரையில், “தந்தை பெரியார் அவர்களது இயக்கம் தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதே தனது பணியாகக் கொண்டு தொடர்ந்து பாடுபட்டு வரும் ஓர் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகமாகும். மக்களுடன் இடையறாது, தொடர்புகொண்டு போராட்டம், பிரச்சாரம், கிளர்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை உருவாக்கி வரும் ஓர் இயக்கம் தந்தை பெரியாருக்குப் பின் சகோதரர் வீரமணி திறம்பட முன்னெடுத்துச் செல்கிறார். அவரை நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள், திட்டங்கள் பற்றிக் கூற வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டு உரை நிகழ்த்தினார்.

அங்கு எனது உரையில், “இங்கே வந்து சமூகநீதிப் போராட்டத்தில் ஏற்பட்ட தொய்வினை நீக்கிட வேண்டி முன்வந்துள்ள உங்கள் அனைவருக்கும் பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். மண்டல் பரிந்துரை மட்டுமே சமூகநீதி ஆகிவிடாது; அதில் செய்துள்ளது சிறிய அளவு; செய்யப்பட வேண்டியவை இன்னும் பெரும் அளவாகும்!

கிரிமிலேயரை ஒழித்தாக வேண்டும்!

தனியார் நிறுவனங்களிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கும் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு 9ஆவது அட்டவணைப் பாதுகாப்பினைப் பெற்று, அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அமலாகியும், உச்சசநீதிமன்ற உயர்ஜாதி நீதிபதிகளின் அடாவடித்தனப் போக்கு, அதைப் புறந்தள்ளி அரசியல் சட்ட விரோதமான ஆணைகளைப் போட்டு வருகிறது. இதனை மாற்றிட ஒரே வழி உயர்நீதிமன்ற _ உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் சமூகநீதியைக் கொண்டு வருவதேயாகும். மகளிர் மசோதாவில் 33 சதவிகித ஒதுக்கீடு சட்டம் நிறைவேறினால் போதாது; அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கும், கிறித்துவர்களுக்கும் ‘உள் ஒதுக்கீடு’ தேவை என்று கூறினேன்.

அப்போது அரியானா மாநிலம் கோரேகான் பகுதியிலிருந்து வந்து கலந்துகொண்ட பேராசிரியர் டாக்டர் ஜெய் நாராயணன் அவர்கள், கழகத்தின் தொண்டினைப் பாராட்டி, வாழ்த்தி, அன்போடு அரியானா மக்களின் வழக்கப்படி மரியாதை செய்ய – ஒரு நீண்ட தலைப்பாகையை எனது தலையில் கட்டி வாழ்த்துத் தெரிவித்தார்! இதனை அங்கிருந்த தலைவர்கள் குரல் எழுப்பி வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இக்கருத்தரங்கில் முக்கிய சமூகநீதி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கே.எம்.கான், டி.பி.யாதவ், ஆர்.எஸ்.கவாய், ராம்தாஸ் அத்வால், வாசிம் அகமது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் _ ரஷீத் மசூது, சையத் சகாபுதீன், கே.ஆர்.கணேஷ், திருமதி சத்யாபாகிம், சல்மான் குர்ஷீத், மகமது இலியாஸ், இம்ரான் கித்வாய், சந்திரபிரகாஷ் யாதவ், வழக்கறிஞர் ராம் இக்பால் யாதவ், பேராசிரியர் என்.இராமச்சந்திரன், பேராசிரியர் கே.சி.யாதவ், டாக்டர் ஜெய நாராயணன் யாதவ், டாக்டர் லால்ரத்னாக்கர், பேராசிரியர் எம்.கே.சைனி, டாக்டர் சோப்நாத் சிங், அமர்சிங் யாதவ், உமர் ஆலம், நக்ஸத் ஹமீது, வழக்கறிஞர் அருண் யாதவ், ஹீக்கும் சிங், திருமதி சுசீலா மேத்தா, சுசில் மேத்தா, ரமேஷ் யாதவ், மாஸ்டர் பால்ஜித் யாதவ், விஜய்சங்கர், அரவிந்த், ஹைதர், விஜய் லோச்சவ், சி.எல்.திவாரி உள்பட 80க்கும் மேற்பட்ட தலைவர்கள் கூட்டத்தில் தங்கள் கருத்தினை எடுத்துக் கூறி பதிவு செய்தனர். இந்தக் கருத்தரங்கம் சமூகநீதிச் செயல்பாட்டில் முக்கிய நிகழ்வாக அக்கால கட்டத்தில் அனைவராலும் பேசப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றிய தி.க. இளைஞர் அணித் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பி.சாமி அவர்களின் மகன் சாமி.மதியழகனுக்கும், செங்களூர் ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மணியின் மகள் ராதிகாவுக்கும் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த விழாவை 27.6.1998 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவிற்கு வந்திருந்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சு.அறிவுக்கரசு மற்றும் பலரும் வாழ்த்திப் பேசினார்கள்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நகர தி.மு.க. தலைவர் இரா.கருவேலம் _ க.இராமலட்சுமி ஆகியோரின் செல்வன் பி.ஆர்.கே.அருணுக்கும், கன்னிகாபுரம் ஜெகநாதன் _ பானுமதி ஆகியோரின் செல்வி ஜெ.சுபாவுக்கும், வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை 6.7.1998 அன்று எனது தலைமையில் நடந்தது. உறுதிமொழி கூறி மாலை மாற்றிக் கொண்டனர். மறுநாள் நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சீ.தங்கதுரை _ த.புஷ்பராணி ஆகியோரின் செல்வி த.தமிழரசிக்கும், பழனி மாவட்டம் அக்கரைப்பட்டி வஞ்சியப்பன் -_ மயிலாத்தாள் ஆகியோரின் செல்வன் வ.மாரிமுத்துக்கும், அதேபோல் சீ.தங்கதுரையின் மகன் த.மணிவண்ணனுக்கும், கீழப்பாவூர் ஆ.இலக்குவனார் _ வெள்ளையம்மாள் ஆகியோரின் செல்வி இல.தேன்மொழிக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை ஒரே மேடையில் நடத்திவைத்தேன்.

தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வில்வநாதனின் சகோதரரின் மணவிழா சென்னை அய்ஸ் அவுஸ் பகுதியில் 12.7.1998 அன்று நடைபெற்றது. அவ்விழாவிற்கு தலைமையேற்று, கு.இராமசாமி _ பவுனம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.பிரபாகரனையும், சூனாம்பேடு ஆ.சாரங்கன் _ மஞ்சளழகி ஆகியோரின் செல்வி சா.அஜந்தாவையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ள வைத்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயம், மதம், கடவுள் மூடநம்பிக்கைகளை பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தியும், வேலைவாய்ப்பில் ஆண்களும், பெண்களும் சமவிகிதத்தில் இருக்க வேண்டும்’’ என்பதை விளக்கியும் உரையாற்றினேன்.

வேலூரில் மாவூர் மா.சுப்பிரமணி _ சின்னக்கிளி ஆகியோரின் மகன் எஸ்.கார்வண்ணனுக்கும், வந்தவாசி எம்.இராதாகிருஷ்ணன் _ அலமேலு ஆகியோரின் செல்வி ஆர்.மாலாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா 13.7.1998 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்று மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த  உறுதிமொழியினை கூறச்செய்து, மாலை மாற்றிக்கொள்ள வைத்து மணவிழாவை நடத்திவைத்தேன். விழாவில் உரையாற்று-கையில், “மக்கள் ஜாதி, மதம், கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படாமல் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்’’ என்பதை வலியுறுத்தி உரையாற்றினேன்.

தஞ்சையில் திராவிடர் கழக மகளிரணி பிரச்சாரம் நாடு முழுக்க நடைபெறும் நோக்கத்துடன் 15.7.1998 அன்று தஞ்சை தெற்கு வீதியில் தொடங்கியது. கழக மகளிரணியைச் சேர்ந்த சரோஜா தங்கராசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இப்பிரச்சாரத் திட்டத்தினைத் துவக்கி வைத்து நான் உரையாற்றுகையில், “திராவிடர் கழகத்தின் சார்பில் முழுக்க, முழுக்க மகளிரே பிரச்சாரம் செய்யத் துவங்கியிருப்பதால் அவர்களுடைய ஆழமான கொள்கைப் பற்றையும், ஆர்வத்தையும் உணர முடிகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த இயக்கத்திலும், எந்தக் கட்சியிலும் இப்படி ஒரு பிரச்சார நிகழ்வு இதுவரை நடத்தப்படவில்லை. மக்களிடையே குறிப்பாகப் பெண்களிடையே பகுத்தறிவை வளர்ப்பது, ஜாதி மறுப்புத் திருமணம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், பெண் சிசு கொலை ஒழிப்பு, பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு பெறுதல் போன்றவற்றை மகளிரே மக்களிடம் கொண்டு சென்றால், மக்கள் தெளிவாகக் கேட்பார்கள். இயக்க வரலாற்றில் ஒரு மைல் கல் என்று குறிப்பிடலாம்’’ என பல கருத்துகளை விளக்கிக் கூறினேன். இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெருமளவில் மகளிர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உ.பி. மாநிலம் அலகாபாத் உயர்நீதி-மன்றத்தில் தாழ்த்தப்பட்ட நீதிபதி அமர்ந்த நாற்காலிக்குத் தீட்டுக் கழித்த உயர்ஜாதி நீதிபதி மீது நாடாளுமன்றத்தில் “இம்பீச்மெண்ட்’’ கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி 23.7.1998 அன்று அறிக்கை வெளியிட்டோம். அதில் அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது (Article 17) Civil Rights Act படி தீண்டாமையை அனுசரிப்பது கிரிமினல் குற்றம் _ தண்டனைக்குரியது. ஆனால், அரசியல் சட்டத்தினைக் காப்பதாக பிரமாணம் எடுத்துக் கொண்ட அலகாபாத் (உ.பி.) உயர்நீதிமன்ற உயர்ஜாதித் திமிர் பிடித்த நீதிபதி ஒருவர், சக நீதிபதியான தாழ்த்தப்பட்ட நீதிபதி ஒருவர் அமர்ந்த நாற்காலியை “புனித நீர்’’ விட்டு “கழுவிவிட்டு’’ அதற்குப் பிறகே அதில் அமர்ந்தார் என்ற செய்தி கேட்டு நம் நெஞ்சு வேகிறது _ இரத்தம் கொதிக்கிறது!

இதுதான் 50 ஆண்டு சுதந்திரப் பொன்-விழாவின் லட்சணமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் ஒருவர் குடியரசுத் தலைவராக இருக்கும்போதே எவ்வளவு துணிச்சல்? என  அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் தனிப்பட்ட முறையில், ம.நடராசன் அவர்களின் நிகழ்ச்சியில் நானும் கலந்து-கொள்ள வேண்டாம் என்று செங்கோட்டையன் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பி அழுத்தம் தந்தார். நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி அது. அவரது நிகழ்ச்சி நட்பு ரீதியானது; கொள்கை ரீதியானது. எனவே, மறுக்க இயலாதது எனக் கூறி, ஜெயலலிதாவின் கோபம் பற்றிக் கவலை கொள்ளாது முடிவு எடுத்து அறிவித்ததோடு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பது பதிய வேண்டிய  செய்தியாகும்! 

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘தமிழரசி’ ஆசிரியர் ம.நடராசன் எழுதிய ‘நெஞ்சம் சுமக்கும் நினைவுகள்’ மற்றும் ‘அண்ணா பேசுகிறார்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 30.7.1998 அன்று நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தலைமை வகித்தேன். விழாவில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். அண்ணா அவர்களின் மருமகள் சரோஜா பரிமளம் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக் கொண்டார். விழாவில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ம.நடராசன், பரிமளம், சரோஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சிறப்புரையில் அன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துகள் பேசப்பட்டன. விழாவில் ஏராளமான கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தஞ்சை மாவட்டம் உரத்தநாடு வட்டம் தும்பரித்கோட்டை வீ.பருதி (எ) தங்கமணி _ ப.தமிழரசி ஆகியோரின் செல்வன் ப.இராசேசு கண்ணனுக்கும், தஞ்சை ப.இராமமூர்த்தி _ விசாலாட்சி ஆகியோரின் செல்வி இரா.உலகேசுவரிக்கும் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா 3.8.1998 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். மணமகன் இராசேசு கண்ணன் ‘விடுதலை’ இயந்திரப் பிரிவில் துணை மேலாளராகப் பணிபுரிந்தவர். விழாவில் உரையாற்றுகையில், பகுத்தறிவுக் கருத்துகளையும், மூடநம்பிக்கைகளினால் ஏற்படும் பெருங்கேட்டையும் விளக்கிப் பேசினேன். கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, 5.8.1998 அன்று இரவு 12:30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம்,  என் வாழ்விணையர் மோகனா அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் கழக உதவிப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட கழகத் தோழர்கள்  வழியனுப்பி வைத்தனர். 6.8.1998 வியாழன் காலை 7:30 மணி அளவில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கிய எங்களுக்கு கழகத் தோழர்களும், நண்பர்களும் சிறப்பான வரவேற்புக் கொடுத்தனர்.

பிறகு கெய்லாங் பாரு பகுதியில் உள்ள பெரியார் பெருந்தொண்டர் திருவாளர் நாகரெத்தினம் அவர்கள் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்தோம். 9.8.1998 அன்று ஆடி மாதத்தில் முதுபெரும் பெரியார் பெருந்-தொண்டர் முருகு.சீனுவாசனின் மகள் மலையரசி _ அவரது துணைவர் கலைச்செல்வம் ஆகியோரது இல்லத்தினை வந்திருந்த சிறப்பு அழைப்பாளர் புடைசூழ பலத்த கைதட்டலுக்-கிடையே திறந்து வைத்தேன். தந்தை பெரியார் படத்தினை மோகனா அவர்கள் திறந்து வைத்தார். இரண்டு நாள் ஓய்வுக்குப் பின்னர் மலேசியாவிற்குப் பயணமானோம்.

பத்தாங்பெர்சுந்தைக்கு 13.8.1998 _பிற்பகல் 3:30 மணியளவில் நாங்கள் சென்றடைந்தபோது, தோழர் கந்தசாமி இல்லத்தின் முன் அவரும், அவரது துணைவியாரும், மலேசிய திராவிடர் கழகக் கொள்கை பரப்புக் குழுத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திராவிடமணி மு.நல்லதம்பி, அவர் குடும்பத்தினர் மற்றும் பத்தாங்பெர்சுந்தை கிளைக் கழகத் தோழர்கள் ஏராளம் பேர் வரவேற்றனர். சிறிது நேர ஓய்வுக்குப் பின், மாலை 5:00 மணிக்கு பத்தாங்பெர்சுந்தை மக்கள் வரவேற்பில் கலந்துகொண்டோம்.

வந்திருந்த ஏராளமான கழகத் தோழர்கள், பொதுமக்கள், மகளிர் உள்பட அனைவரையும் பத்தாங்பெர்சுந்தை கிளைக் கழகச் செயலாளர் தோழர் மானமிகு ஆர்.எஸ்.பரசுராமன் உரையாற்றி வரவேற்றார். துணைத் தலைவர் மானமிகு ஏ.சுப்பராயன் அவர்கள் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகி, தொகுத்தளித்தார். திராவிடமணி மு.நல்லதம்பி அவர்கள் தலைமையேற்று உரையாற்றுகையில், தமிழர் தலைவர் அவர்கள் இந்த ஊருக்கு முதன்-முதலாக 1968இல் வந்தார். அன்றுமுதல் எப்போது மலேசியாவிற்கு _எவ்வளவு குறுகிய காலப் பயணம் மேற்கொண்டாலும் வராமல் போகமாட்டார். நம் மீது அவ்வளவு பாசமும் உள்ளவர். இந்த ஊர் மக்களும் தோட்டத் தொழிலாளர் பெருமக்களான தமிழர்களும் அவர்மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர்கள். கந்தசாமி அவர்களை தனது சொந்தச் சகோதரராகவே கருதிப் பழகிடும் பாசம் கொண்டவர். எனவே, கழகக் குடும்பத்தினர் அளவிலாப் பற்றுடன், அய்யாவிடம் வைத்த அதே மரியாதையையும், அன்பையும் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்பாகத் தொடரும் ஆசிரியர் மீதும் வைத்திருக்கிறோம் என்று கூறி, 1938லேயே பழைய ‘குடிஅரசு’ ஏட்டில் -_ இந்தப் பகுதி பற்றி நிகழ்வுகள் வெளிவந்துள்ளன என்றால், இப்பகுதி கழக வளர்ச்சிக்கு எவ்வளவு தொண்டாற்றியது என்பதை எண்ணிப் பாருங்கள் என்று உரையாற்றினார்.

சிறப்புரை நிகழ்த்திய மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் மானமிகு ரெ.சு.முத்தய்யா அவர்கள், கழக வளர்ச்சியில் இப்பகுதி மிக முக்கியமான பகுதி என்றும், அய்யாவுக்குப் பின் அயராது பணியாற்றி, உலகளாவிய நிலையில் கழகத்தினையும், கழகக் கொள்கைகளை _ குறிப்பாக பெரியார் தத்துவங்-களைப் பரப்புவதற்கு அரும்பாடுபட்டு அதில் பெரும் அளவுக்கு வெற்றியும் கண்டுள்ளார் ஆசிரியர் என்று குறிப்பிட்டார்.

வரவேற்புக்குப் பதில் அளித்து ‘மனித நேயம்’ என்ற தலைப்பில் சுமார் 1 மணிநேரம் உரையாற்றினேன். “இவ்வூருக்கு வருவது 30ஆம் ஆண்டு விழாவாகும். தோழர் கந்தசாமி, திராவிடமணி, மு.நல்லதம்பி ஆகியோரது எல்லையற்ற கழகப்பற்றும், கொள்கைப் பணியும், தோழர்களது கடும் உழைப்பும் எடுத்துக்காட்டாக உள்ளனவென்று கூறி, ‘எனது குடும்பத்தினை ஒழித்துவிடுவேன்’ என்று எனக்கு தமிழ்நாட்டில் மிரட்டல் கடிதம் வந்தபோதெல்லாம்கூட நான் கூறிய பதில், என் குடும்பம் என்பது சென்னையில், அடையாறில் உள்ள சில உறுப்பினர்கள் மட்டும் அல்ல _ பைத்தியக்காரர்களே, புரிந்துகொள்ளுங்கள்’ என்றேன். அது நாடு முழுவதும் பரவியது. அதனை ஒழிக்க எவராலும் முடியாது என்று கூறுவதுண்டு. அதனை உண்மையென இந்த வரவேற்பு நிகழ்ச்சி நிரூபித்துக் கொண்டுள்ளது என்று கூறி, மூடநம்பிக்கை ஒழிந்து தன்னம்பிக்கையுடன் தமிழர்கள் முன்னேற பெரியாரின் தத்துவங்கள் எவ்வாறெல்லாம் கைகொடுக்கும் என்பதை விளக்கினேன்.

நிகழ்ச்சிக்கு தேசியப் பொதுச்செயலாளர் மானமிகு பர்லா, பொருளாளர், இளைஞர் பிரிவு தலைவர் பஞ்சு, முன்னாள் தேசியத் துணைத் தலைவர் பி.எஸ்.மணியம் மற்றும் கந்தசாமி, இளம்வழுதி மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும், முக்கிய பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். 7:00 மணியளவில் நிகழ்வு முடிவுற்றது. அனை-வருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. துணைச் செயலாளர் மானமிகு மு.சக்திவேல்  நன்றி கூறினார். அனைவருக்கும்  இரவு தோழர் கந்தசாமி இல்லத்தில் சிறப்பான முறையில் விருந்தளிக்கப்பட்டது. இரவு தங்கி, காலைச் சிற்றுண்டி முடித்து, ‘போர்ட் கிளாஸ்’ என்ற (கோலக் கிள்ளான்) மறைந்த தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி இல்லம் சென்றோம்.

14.8.1998 அன்று ‘கீதையின் மறுபக்கம்’ நூல் வெளியிடப்படுகிறது என்றவுடன் இந்து சங்கம் என்ற பெயரில் இயங்கும் சிலர் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டனர். தங்கள் கடை இனி போணி ஆகாதே என்ற அச்சம் அவர்களை உலுக்க ஆரம்பித்தது.

மலேசிய அரசின் உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்டு இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காவடி எடுத்தனர். ஏடுகளில் கண்டன அறிக்கையை வெளி-யிட்டனர். இதைப்பற்றி யாரும் பொருட்-படுத்தவில்லை. நூல் வெளியீட்டு விழா 14.8.1998 அன்று கோலாலம்பூரில் மலேசியத் திராவிடர் கழகத் தலைமையகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு தரப்பினரும் விழாவில் கலந்துகொண்டனர்.

நான் நூலை வெளியிட, பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் முத்தமிழ்ச் செல்வன் நூலைப் பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக கோலாலம்பூரில் எனது பேட்டியை ‘மலேசிய நண்பன்’ (15.8.1998 இதழ்) வெளியிட்டது.

பகவத் கீதை பற்றி விவேகானந்தர், டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஆகியோர் மாறுபட்ட கருத்துகளைக் கூறியிருக்கின்றனர். இந்து சமய வளர்ச்சிக்காக அமெரிக்காவில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர், பகவத் கீதை பற்றி மாறுபட்ட கருத்தைத்தான் கூறியிருக்கிறார்.

ஜெர்மனி அறிஞர்கள் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு பகவத் கீதையைப்பற்றி ஆய்வு செய்து நூல் எழுதி இருக்கின்றனர். இப்போது பகவத் கீதைபற்றி 300க்கும் அதிகமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் புத்தகத்தைப் பற்றி 75 அறிஞர்கள் கூறிய கருத்துகளையும், அவர்கள் எழுதிய பகவத் கீதை பற்றிய தொகுப்புகளையும் ஆய்வு செய்து நான் புத்தகம் எழுதி இருக்கிறேன். என்னுடைய கருத்துகள் இந்தப் புத்தகத்தில் கிடையவே கிடையாது. மற்றவர்களின் கருத்துகள்தான் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தை எதிர்ப்போர் முதலில் இதைப் படித்துவிட்டு கருத்துச் சொல்ல முற்பட வேண்டும். அதை விடுத்து புத்தகத்தைப் படிக்காமலேயே இந்து சமய புனித நூலை கொச்சைப்படுத்தி எழுதிவிட்டேன் என ஆவேசப்படக்கூடாது.

இந்தப் புத்தகத்தை ஆராயாமல் நான் எழுதவில்லை. நன்கு ஆராய்ச்சி செய்த பிறகே எழுதி இருக்கின்றேன். இந்து சமயத்தைப்பற்றி அதிகமாகப் பேசுபவர்கள்கூட பகவத் கீதையைப் படித்திருக்க மாட்டார்கள்.

இந்தப் புத்தகத்தை மலேசியாவில் வெளியிட  நான் இங்கு வரவில்லை. மலேசிய திராவிடர் கழகத் தோழர்கள் ‘பகவத் கீதையின் மறுபக்கம்’ என்ற புத்தகத்தை வெளியீடு செய்ய முன்பே தருவித்திருந்தனர். ஓய்வுக்காக நான் இங்கு வந்தபோது, இந்தப் புத்தகத்தை வெளியீடு செய்ய அவர்கள் முயற்சித்தார்கள்’’ என்று நான் கூறியவற்றை ‘மலேசிய நண்பன்’ செய்தி வெளியிட்டது.

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய தொண்டர்கள், தோழர்கள்பற்றிச் சொல்லும் பொழுது சொன்னார். என்னுடைய தோழர்கள் போல ஒரு பற்றற்றவர்கள் வேறு யாருமே கிடையாது. எங்களுக்கு எந்தப் பற்றும் கிடையாது. ஒரே ஒரு பற்றுதான் உண்டு. அதுதான் மனிதப் பற்று என்பதை மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லியிருக்கின்றோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிக்க வேண்டும். அதுதான் மனித குல வளர்ச்சிக்கு, உயர்வுக்கு மிக முக்கியமான ஒன்று. எனவே இந்தப் பணிகளுக்கு என்ன கூலி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள் அல்லர்.

மலேசிய திராவிடர் கழகம் இன்றைக்கு வரலாற்றுச் சுவடுகளிலே ஒரு பொன்விழா தாண்டிய அமைப்பு.

ஜாதியை எதிர்த்துப் போராடி அதை புதைகுழிக்கு அனுப்பிய பெருமை மலேசிய திராவிடர் கழகத்திற்கு உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது. வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். கலியன் வழக்கு என்றால் என்ன? இளைய தலைமுறையினருக்கு இந்தச் செய்தி தெரியாதே! இப்பொழுது மறுபடியும் பழைய மாதிரி கலியன்கள் தோன்றிவிடுவார்களோ என்கிற பயம் வந்திருக்கிறது. எனவே ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கலியன் வழக்கு மூலமாக ஜாதி இருக்கக் கூடாது என்று செய்தோம். இப்பொழுது அது வேறு ரூபத்தில் வந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

நண்பர்களே, கீதையின் மறுபக்கம் நூலை அறிமுகப்படுத்த இங்கு இடம்தர மறுத்தால் இன்னொரு இடத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுப் போகிறோம். புத்தகம் பரவுவதில் எங்களுக்கொன்றும் எந்த சங்கடமும் இல்லை. இடம் கொடுத்தவர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கக் கூடாது என்ற உணர்வோடு நாங்கள் நடக்க வேண்டுமென்று விரும்புகின்றோம். இதை ஒரு பெரிய குற்றமாகக் கூட கருத வேண்டிய அவசியமில்லை. ஆகா, இந்த இடத்தில்தான் உண்ண வேண்டும், அந்த இடத்தில்தான் பண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள்.

இன்னும் கேட்டால், கீதையின் மறுபக்கம் நூலுக்கு எதிர்ப்பு வந்ததினாலே ஒரு நல்ல விளம்பரம். நம்மவர்கள் சரியாக விளம்பரம் பண்ணினார்களோ இல்லையோ, மற்றவர்கள் விளம்பரம் செய்திருக்கின்றார்கள். அதற்காக நான் நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்-கின்றேன். எப்பொழுதுமே எங்களுடைய பிரச்சாரத்தை மற்றவர்கள்தான் அதிக அளவுக்கு விளம்பரப் படுத்தியிருக்கின்றார்கள் என்று கூறி, இந்து மதச் சீர்கேடுகளை விளக்கினேன்.

தாயைப் புணர்ந்த மதம், தாயை மனைவியாக்கிக் கொண்ட மதம், தந்தையைக் கொன்ற மதம், விதவைத் தாய் எதிரே வரக் கூடாதென்ற மதம், பெண்களை எரிக்கின்ற மதம், உன்னுடைய இந்து மதமல்லவா? என உரையில் இந்துமதம் குறித்து விரிவான ஆய்வுரையை வழங்கினேன்.

சிங்கப்பூரில் 22.8.1998 அன்று நடைபெற்ற விடைபெறு நிகழ்வில் நான் உரையாற்றுகையில்,

“சரியாக ஓர் ஆண்டுக்கு முன்னால் அதாவது 9.8.1997லே இ-_மெயில் மூலமாக சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதினார். அவர் சிங்கப்பூரில்தான் இருக்கின்றார். என்னால் அவரைக் கண்டு-பிடிக்க முடியவில்லை. அந்தக் கடிதத்தில் உள்ள வாசகத்தின் ஒரு பகுதியை மட்டும் நான் படிக்கின்றேன். ஏனென்றால் நான் சிங்கப்பூருக்கு வருவதில் மட்டும் உற்சாகத்தைப் பெறுவதில்லை. இங்கு நல்ல அறிஞர் பெருமக்கள் எல்லாம் இருக்கின்றார்கள். அவர் என்னைப் பாராட்டி எழுதியிருக்கின்றார். அவருடைய பெயர் கோவிந்தசாமி. எலக்ட்ரானிக் முகவரி மட்டும்தான் இருக்கின்றது. அவருடைய தெளிவான முகவரி தரப்படவில்லை.

அவர் எழுதியிருக்கின்றார் _ “நீங்கள் எழுதிய ‘செயின்ட் ஆர் செக்டேரியன்’’ என்ற நூலைப் படித்தேன். பல வருடங்களாக இருளில் இருந்த எனது கண்களுக்கு உங்களுடைய நூல் வெளிச்சத்தைக் காட்டியது. உங்களுடைய நூல் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. ஜாதியின் மூலம் ஏற்பட்ட கொடுமைகளை விளக்கியது. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை’’ என்று எழுதியிருந்தார் என்று கூறி, மேலும் பல நெஞ்சை விட்டு அகலா நிகழ்வுகளை கூறி உரையை நிறைவு செய்து, மலேசியா பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *