பெரியாருடன் குற்றாலத்திலும், ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல் நிலை மிக்க பலவீனமாகவும், நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின், இயக்கக் காரியங்களைப் பார்க்க, தகுந்த முழு நேரக்காரரும், முழு கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா? என்கிற கவலையிலேயே இருக்கிறார். இயக்கத்துக்காக என்று தன் கைவசமிருக்கும் சொத்துகளை என்ன செய்வது என்பது அவருக்கு மற்றொரு பெருங் கவலையாய் இருப்பதையும் கண்டேன். அதோடு இயக்கத்துக்கு வேலை செய்ய சில பெண்கள் வேண்டுமென்றும் அதிக ஆசைப்படுகிறார். அப்பெண்களுக்கு ஜீவனத்துக்கு ஏதாவது வழி செய்து விட்டுப் போகவும் இஷ்டப்-படுகிறார். இந்தப்படி, பெரியாரை நான் ஒரு மாத காலமாக ஒரு பெருங்கவலை உருவாகவே கண்டேன். அவர் நோய் வளர, அவை எருப்போலவும் தண்ணீர் பாய்வது போலவுமே இருக்கிறது. நான் ஒரு பெண், என்ன செய்ய முடியும்?
இன்னும் சில பெண்கள் முன்வர வேண்டும். அவர்கள் பாமர மக்களால் கருதப்படும், “மானம், ஈனம்’’, ஊரார் பழிப்பு யாவற்றையும் துறந்த நல்ல கல்லுப் போன்ற உறுதியான மனதுடைய நாணயவாதி-களாகவும், வேறு தொல்லை இல்லாதவர்-களாகவும் இருக்க வேண்டும். அவர்களது முதல் வேலை, பெரியாரைப் பேணுதலும், பெரியார் செல்லுமிடங் களுக்கெல்லாம் சென்று இயக்க மக்களை அறிமுகம் செய்துகொள்ள வேண்டியதும், இயக்கப் புத்தகங்களைப் படிக்கவும், எழுதவும், நன்றாய்ப் பேசவும் தெரிந்து கொள்ள வேண்டும். வீடுகள் தோறும் இயக்கப் புத்தகங்களும், ‘குடிஅரசு’ம் இருக்கும்-படியாகச் செய்து அவற்றை நடத்தும் சக்தி பெற வேண்டும். இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் இருக்கிறது. பெண் மக்களே யோசியுங்கள்.
– வேலூர் அ.மணி என்ற பெயரில் அன்னை மணியம்மையார் எழுதியது – ‘குடிஅரசு’ 23.10.1943.