வஞ்சகம் வாழ்கிறது – 4

ஜனவரி 01-15

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இரணியன் (அல்லது இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்)

– எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம்

காட்சி 6 காட்டின் ஒரு பகுதி

உறுப்பினர்கள்: கஜகேது, பிரகலாதன், சித்ரபானு

சூழ்நிலை: இருவரும் உரையாடல்.

கஜகேது: மாப்பிள்ளை, நாங்கள் ஆரிய ஜனங்கள் – பூதேவர்கள். எங்கள் வேதம் பஹுஉத்கிருஷ்டமா னவை. இதை அங்கீகரிக்காத எந்தத் தமிழனிடமும் நாங்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. எங்கள் கர்மானுஷ்டானங்கள், எங்கள் மதம், பழக்க வழக்கங்கள், ஜாதிக் கட்டுப்பாடு ஆகியவை ஏன் உத்கிருஷ்டமானவை என்றால் இவைகள் கேவலம் சிற்றறிவும் சிறு தொழிலும் உள்ள மனிதர்களால் ஏற்பட்டவை அல்ல. இவை கடவுளால் வகுக்கப்பட்டவை.

பிரக: அப்படியா மாமா?

கஜகே: அது மட்டுமில்ல மாப்பிள்ளை! இவை மனு முதலிய மகரிஷிகளால் ஒழுங்கு செய்யப்பட்டவை.

பிரக: இவ்வளவு ஆற்றலுள்ள நீங்கள் ஏன் நாடோடிகளாகத் திரிய வேண்டும்?

கஜகே: நாங்களா நாடோடிகள். இல்லை. நரர் என்றும், அசுரர் என்றும், ராக்ஷசர்கள் என்றும், தமிழர்கள் என்றும் சொல்லப்படும் இந்நாட்டு மக்கள் கடைத்தேறும்படியாக பூசுரர்களாகிய எங்களை பிரம்மா என்னும் கடவுள் அவரது முகத்திலிருந்து படைத்து அனுப்பியிருக்கிறார். அதனால்தான் நாடெங்கும் பிரயாணம் செய்து கடவுளால் படைக்கப்பட்ட வேதாதிகளைப் பரப்பி வருகிறோம். இந்நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதே எங்கள் வேலை. பிரக: சித்ரபானுவும் கொஞ்சம் சொல்லி இருக்கிறாள்.

கஜகே: நீர் பகு புத்திமான். சின்ன வயதுமுதல் ஆத்மீக ஞானம் பெற்றவராயிருக்கின்றீர். ஆனால், உமது பிதா இரண்ய சக்கரவர்த்தி எங்களுக்கு எதிராக இருக்கிறார். எங்கள் தெய்வ பலத்தால் அவரையும் எங்கள் வேதங்களை ஏற்கும்படிச் செய்யமுடியும்.

பிரக: மாமா! உங்கள் வேதங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

கஜகே: நீர் எமது மருமானான பிறகு வேதங்களைக் கற்றுத்தானே ஆகவேண்டும்.

பிரக: எங்கள் திருமணம் எப்போது மாமா?

கஜகே: நாளையே நல்ல நாள். ஆனால் உங்கள் விவாகம் சில நாட்களுக்கு வெளியே தெரியக்கூடாது. ரகசியமாகக் காப்பாற்றப்பட வேண்டும்.

பிரக: ஏன் மாமா!

கஜகே: தெரிந்தால் உன் தந்தை உனக்குப் பட்டாபிஷேகம் செய்ய மாட்டார். அதனால் என் மகளுக்குக் குறைவு ஏற்படும் அல்லவா?

பிரக: அஞ்சாதீர்கள் மாமா! சித்ரபானுவுக்குக் குறைவு ஏற்படுமானால் நான் உயிர் வாழ மாட்டேன்.

கஜகே: என்ன மாப்பிள்ளை இப்படிப் பேசுகிறீர்? உன் மனைவிக்குக் குறைவு ஏற்பட்டால் அதற்குக் காரணமானவரை எதிர்த்து வீழ்த்துவதை விட்டுவிட்டு கோழைபோல உயிர்விடுவேன் என்கிறீரே!

பிரக: அப்படியல்ல மாமா! எங்களுக்குத் தீங்கு செய்பவன் தந்தையாக இருந்தாலும் விடமாட்டேன். அப்போராட்டத்தில் உயிர்விட நேர்ந்தாலும் அஞ்சமாட்டேன் என்பதைத்தான் அப்படிச் சொன்னேன் மாமா!

கஜகே: பேஷ்! சபாஷ் மாப்பிள்ளை சபாஷ் இதல்லவோ வீரனுக்கழகு. ஒரு ஒப்பற்ற வீரனை – தியாகியை மருமானாய் பெற்றது எனது பாக்யம். பிரக: மாமா! எனக்குத் தக்க ஆதரவு கிடைக்கும் வரை எங்கள் திருமணத்தைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம் மாமா! அடடா மறந்துவிட்டேனே.

கஜகே: என்ன மாப்பிள்ளே?

பிரக: உங்களுக்குக் காங்கேயனைத் தெரியுமா மாமா? எனது நண்பன். கஜகே:

யாரவன்? காங்கேயன். அவனுக்கு என்ன?

பிரக: அவனும் ஆரியனாயிற்றே. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே.

கஜகே: தெரியாது. அவன் சரியான ஆரியனாக இருக்க மாட்டான். ஏன் அவனால் ஏதாவது தொந்தரவா?

பிரக: இல்லை மாமா! அவனுக்கு நான் சித்ரபானுவைக் காதலிப்பது தெரியும். அவன் மூலமாக என் தந்தைக்குச் செய்தி பரவிவிடுமோ என்ற அச்சம்.

கஜகே: இதுக்கா பயப்படுகிறீர். (ஏதோ முணுமுணுக்கிறார்) இந்த நேரமுதல் நீ சித்ரபானுவைக் காதலித்ததை மறந்துவிடுவான்.

பிரக: எப்படி? எப்படி மறந்துபோவார்?

கஜகே: அதுதான் ஆரியர்களின் ஆற்றல். வேண்டுமானால் நாளை அவனைச் சந்தித்தால் கேட்டுப்பார்.

பிரக: எனது மாமா வேதக்கடல், ஆரிய சாஸ்திரம் அனைத்தையும் அறிந்த அறிவுச் சுரங்கம்.

கஜகே: நாளை விவாகத்துக்கான வேலைகளைக் கவனிக்க வேண்டும். இன்று இரவு நீர் இங்கேயே தங்கலாம். சித்ரபானு, சித்ரபானு.

சித்ர: (வந்துகொண்டே) ஏன் தந்தையே!

கஜகே: மாப்பிள்ளை இன்று இரவு இங்கேயே தங்குகிறார். அவருக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்துகொடு. நாளை அதிகாலை கல்யாணம்.

சித்ர: வாருங்கள் இளவரசே!

காட்சி 7

காட்டின் ஒரு பகுதி

உறுப்பினர்: கஜகேது, காங்கேயன்.

சூழ்நிலை: கஜகேதுவும், காங்கேயனும் சந்தித்தல்.

காங்கே: தந்தையே! எப்படி இருக்கிறார் மைத்துனர் பிரகலாதன்?

கஜகே: மெச்சுகிறேன் மகனே! நன்றாக நம் வலையில் சிக்கிவிட்டான்.

சித்ரபானு கெட்டிக்காரி.

காங்கே: இளவரசனை நான்தான் சித்ரபானுவைச் சந்திக்க வைத்தேன். சந்தேகப்படாத வகையில் நடந்து கொண்டேன் அப்பா.

கஜகே: காங்கேயா! அவர்கள் காதல் விவகாரம் கல்யாண சமாச்சாரம் எதுவும் வெளியே யாருக்கும் தெரியக் கூடாது என்று அவன் வாயாலேயே சொல்ல வைத்துவிட்டேன்.

காங்கே: நீங்கள் அசகாய சூரராயிற்றே.

கஜகே: ஒரு விஷயம்! அவர்கள் காதல் விஷயம் உனக்குத் தெரியும். நீ எங்கேயாவது சொல்லி விடுவாயோ என்று அஞ்சினான்.

காங்: அப்புறம்?

கஜகே: நான் மந்திர சக்தியால் அதை மறக்கச் செய்கிறேன் என்று ஏதோ முணுமுணுத்தேன். அதனால் நீ அதை மறந்துவிட்டதாக நடிக்க வேண்டும்.

காங்: மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரணுமா?

கஜகே: நேரமாய்விட்டது. நீ உடனே போய்விடு. சித்ரபானுவின் தமயன் என்பதைக் காட்டிக் கொள்ளாதே.

காங்: சரி அப்பா! என் ஆசிர்வாதங்களை என் தங்கை சித்ரபானுவுக்குச் சொல்லிவிடுங்கள். வருகிறேன்.

காட்சி 8

வீட்டின் ஓர் புறம்

உறுப்பினர்கள்: கஜகேது, பிரகலாதன், சித்ரபானு

சூழ்நிலை: மலர் மாலை களுடன் பிரகலாதனும், சித்ரபானுவும், கஜகேது வின் பாதங்களில் பணிகின்றனர்.

கஜகே: தீர்க்க சுமங்கலி பவ! சிறீமந் நாராயணன் உங்களை ஆசிர்வதிப்பாராக. எழுந்திருங்கள்.

(இருவரும் எழுதல்)

சித்ர: அப்பா! ஒரு விஷயம்! நான் விரும்பும் கணவன் கிடைத்தால் மூன்று மாதம் அதாவது தொண்ணூறு நாள் கௌரி விரதம் இருப்பதாக வேண்டிக் கொண்டேனே! அதை அடுத்த ஆண்டு நிறைவேற்றிக் கொள்ளலாமா அப்பா!

கஜகே: என்ன சித்ரபானு! தெய்வ நிந்தனைக்கு ஆளாகணும்ணு பார்க்கிறயா?

சித்ர: இப்பதானேப்பா கல்யாணமே ஆச்சு! இதுக்குள்ள விரதம்ன்னா இவர் பொறுப்பாரா?

பிரக: வேண்டாம்! வேண்டாம்! தெய்வ நிந்தனைக்கு என்னை ஆளாக்காதே

சித்ரபானு. கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டு போய்விடும். மூணுமாதம்தானே! மூன்றே விநாடியில் ஓடிவிடும். கௌரி விரதத்தைக் கைவிடாதே. என்ன மாமா நான் சொல்வது?

கஜகே: கஜகேதுவின் மாப்பிள்ளை ஆயிற்றே. விவேகத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன? இந்த மூன்று மாதமும் உடலுறவு மட்டும் கூடாது. தெய்வ நிந்தனை பொல்லாதது.

பிரக: தெரியும் மாமா! சூலைநோய் வந்து விடும்.

சித்ர: வாருங்கள் அத்தான்! நந்தவனத்தைச் சுற்றி வருவோம்.

பிரக: மாமா! நான் நாடுகளைச் சுற்றிப் பார்க்கப் போகவேண்டும் மாமா!

சித்ரபானு: உங்களைப் பிரிந்து எப்படி இருப்பேன் அத்தான். நீங்கள் போகவேண்டாம் அத்தான். அப்படிப் போவதானால் நானும் கூட வருவேன்.

கஜகே: மாப்பிள்ளே! நீர் எங்கே சென்றாலும் ஆரிய தர்மம் கோலோச்சுவதைத்தான் காண்பீர்! தேச சஞ்சாரத்தை இங்கேயே முடித்து விடுங்கள். பிறகு உன் தந்தையிடம் தேச சஞ்சாரம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டால் போகிறது.

பிரக: சரி மாமா!

கஜ: இன்னொன்று. ஆரிய தர்மங்கள் அனைத்தையும் இம்மூன்று மாதங்களில் போதிக்கிறேன். சிறீமந் நாராயணனின் மந்திரத்தை உபதேசிக்கிறேன்.

பிரக: சரி மாமா! கூடாரத்தில் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை…

கஜகே: இங்கேயே அழைத்து வந்துவிடு. அவர்களையும் ஆர்ய தர்மத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்துவிடுவோம்.

பிரக: சித்ரபானு! நான் போய் வீரர்களை அழைத்து வருகிறேன்.

சித்ர: சீக்கிரம் வந்துவிடுங்கள் அத்தான். உங்கள் பிரிவை என்னால் தாங்க முடியாது.

பிரக: வருகிறேன் கண்ணே! (போதல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *