தகவல்கள்

ஜனவரி 16-31,2022

சமத்துவமற்ற நாடு

World Inequality Report 2022இன் முடிவுகளின்படி, இந்தியாவின் மொத்த வருமானத்தில் 22 சதவிகித தொகை 1 சதவிகித செல்வந்தர்களிடம் உள்ளதாகவும், 57 சதவிகித வருமானம் 10 சதவிகித மக்களிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாட்டின் 50 சதவிகித வருமானம் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அதிகரித்திருப்பது தெரிகிறது. ஒருபுறம் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில், பணக்காரர்களின் செல்வமும் அதிகரித்து தனித்துவமாகத் தெரிவதாக இந்த அறிக்கை கூறுகிறது.


 மோசடிகளைப் பாரீர்!

திராவிட நாகரிகத்திலிருந்து பெயர் அறியாத நாகரிகம் வரை

பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா தொடர்பான அகழ்வாராய்ச்சிப் பொருள்கள் வைக்கப் பட்டிருந்தன. இப்பொருள்களைக் கொண்டு அங்கு வாழ்ந்த மனித நாகரிகம் குறித்து மாதிரி ஒன்று அமைக்கப்பட்டது, அந்த இடத்திற்கு 1960 முதல் 1962ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த யஸ்வந்தராவ் சவான் காலகட்டத்தில் திராவிட நாகரிகம் (Dravidian Civilization) என்று பெயர் சூட்டப்பட்டது, அன்றிலிருந்து 1995ஆம் ஆண்டு சிவசேனா கட்சி மகாராட்டிரா மாநில அரசைக் கைப்பற்றும் வரை நீடித்தது, 1995ஆம் ஆண்டு சிவசேனா மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மனோகர் ஜோஷி தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் ஏறிய உடன் 1996ஆம் ஆண்டு பம்பாய் நகரம் மும்பாயாக மாறியது. இதுமட்டும் தான் உலகிற்குத் தெரியும் வேல்ஸ் மியூசியம் சத்திரபதி சிவாஜி மியூசியமாக மாற்றப்பட்டது, அதுமட்டுமல்ல; நுழைவாயிலில் இருந்த சிந்துவெளி மாதிரியில் இருந்த திராவிட நாகரிகம் (Dravidian civilization) என்பதை அகற்றி விட்டு பெயர் தெரியாத நாகரிகம் (Unknown civilization) என்று மாற்றிவிட்டார்கள். இன்று வரை அது அப்படியே தொடர்கிறது.

யூப்ரடீஸ் டைக்ரீஸ் நாகரிகத்தை சுமேரிய நாகரிகம் என்றும், நைல் நதிக்கரை நாகரிகத்தை எகிப்திய நாகரிகம் என்றும் பெயர் இட்டு அழைத்த வரலாற்று அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று அழைத்தனர். ஆனால், அது முற்றிலும் மாற்றப்பட்டு தற்போது அடையாளம் இழந்து அடையாளம் தெரியாத நாகரிகம் என்று ஆகிவிட்டது.

நாட்டுப்பண்ணில் திராவிடத்தை நீக்கிவிடலாமே?

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரான டாக்டர் வி.அய். சுப்பிரமணியம். மத்தியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து “திராவிடர் என்சைக்ளோப்பீடியா’’ என்ற நூலை வி.அய்.சுப்பிரமணியம் அன்பளிப்பாக வழங்கினார். அந்நூலைப் பெற்றுக் கொண்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கிவிடலாமே என்றார்.

வி.அய்.சுப்பிரமணியன் திராவிட மொழி ஆய்வுக்கென குப்பத்தில் அதற்கான பல்கலைக் கழகம் உருவாக்கப்பட உந்து சக்தியாக விளங்கியவர் ஆயிற்றே! திருவனந்தபுரத்தில் உலகளாவிய திராவிட மொழியியற் பள்ளி (International School of Dravidian linguistics)யின் மூலவித்து போன்றவர் டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம். “அப்படியா? இந்திய நாட்டின் நாட்டுப் பண்ணிலிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கிவிடுங்கள், நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கி விடுகிறேன்’’ என்றார். சுருங்கி விட்டதே முரளி மனோகரின் முகம். (ஆதாரம் – DLA NEWS -மார்ச் 2003)

காளையிலிருந்து குதிரையாக மாறியது

முரளி மனோகர் ஜோஷி வாஜ்பேயி தலைமையிலான அரசில் மனிதவளத்துறை அமைச்சராக இருந்தபோது அமெரிக்காவில் இருந்த அவரது உறவினர் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்க வாழ் பார்ப்பனரான இராஜாராம் என்ற கணினிப் பொறியாளர், சிந்துவெளியில் இருந்தது காளை அல்ல குதிரைதான்! என்று கூறி, அதற்காக சிந்துவெளி ஒன்றைக் கொம்புக் காளை இலட்சினையை எடுத்து, அதன் வாலை குதிரைவால் போன்று கணினியில் கிராபிக்ஸ் மூலம் திரிபாக சித்தரித்தது, ஒன்றைக் கொம்பு காளையின் முகத்தை குதிரை முகம் போல் மாற்றி, சிந்துவெளியில் இருந்தது குதிரை – குதிரை என்பது ஆரியர்களின் வளர்ப்புக் கால்நடை. எனவே, சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் ஆரியர்களே எனக் கட்டுக்கதைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதை மேற்கொள் கட்டி முரளி மனோகர் ஜோஷி அதை குதிரைதான் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன என்று கூறிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதை உலகம் முழுவதும் இருக்கிற ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகள் வழியாக பரப்பினர். “தி இந்து’’ குழுமத்தின் “ஃப்ரண்ட்லைன்’’ 30, செப்டம்பர் 2000 இதழ் இந்த மோசடியை வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

அநேகமாக போட்டோஷாப் மோசடிகளில் முன்னோடியாக இந்தக் காளையை குதிரையாக மாற்றியதைக் கூறலாம். அதன் உச்ச பட்சமாகத்தான் இன்று மோடி போட்டோஷாப்பில் அரசியல் செய்கிறார்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *