Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கட்டுரை : சூழியல் சவாலை பகுத்தறிவால் எதிர்கொள்வோம்!

பேராசிரியர் அரசு செல்லையா

இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

தற்போது மனித இனம் சந்திக்கும் சூழியல் சவால்கள் பற்றியும், அவற்றைச் சரிசெய்வது பற்றியும் இக்கட்டுரையில் சற்று அலசுவோம்.

பொங்கல் என்பது இயற்கை விழாவே!

பொங்கல் விழா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது – எந்த சமயச் சடங்கோ, கடவுளோ தொடர்பில்லாத விழா என்பதுதான். தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் இந்தப் பொங்கல் விழாவினை இயற்கைத் திருநாள் என்றும் அழைக்கலாம்.

உலகம் இயங்க அடிப்படையான சூரியனுக்கு, மழைக்கு, கால்நடைகளுக்கு, தாவரங்களுக்கு நன்றி கூறும் விழாவாக அமைந்திருப்பதால், இதனை இயற்கைத் திருவிழா (Nature Festival) அல்லது சூழியல் திருவிழா (Climate festival)  என்று அழைப்பது சரியாகத்தானே இருக்கும்!

பொங்கல் விழா தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வைப் பறைசாற்றுகிறது. நாடு, மதம், மொழி, இனம் என பல்வேறு வகையில் பிரிவுபட்டிருக்கும் உலகமாந்தர், இயற்கை முன் ஒரே மனித இனம் தான் என்பதை இலக்கியங்களில் சொல்லியது மட்டுமல்ல, வாழ்ந்தும் காட்டியிருக்கிறது நம் தமிழினம்.

பெரியார் போற்றிய தமிழர் திருநாள்

பொங்கல் விழாவினை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள் என தமிழ் மக்களுக்கு தந்தை பெரியார் கூறியதன் அடிப்படைக் காரணம்- இந்த விழா பகுத்தறிவுக்குப் பொருந்தி வருவதால் தானே? 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் ‘மதம் பிடிக்காத’ சிறந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் மட்டுமல்ல, கீழடி போன்ற அகழ்வாய்வுகளும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. இதற்காக, உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழர்கள் பெருமைப்படுவதும் சரியானது தானே? நாடு, மதம், இனம், மொழி தாண்டிய பகுத்தறிவும் மனிதநேயமும் அவசியம் என்று தந்தை பெரியார் சொன்னதும் இங்கு பொருந்துகிறது. உலக மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும் பகுத்தறிவும் மனிதநேயமும் தமிழர் வாழ்வின் தொன்மையிலும், தொடர்ச்சியிலும் பிணைந்திருப்பது பெருமைக்குரியது. பகுத்தறிவும் மனிதநேயமும் அடிப்படையாகக் கொண்ட உலகப் பார்வை தமிழரின் முக்கிய அடையாளமாகவே ஆகிறது.

“யாதானும் நாடாமால் ஊராமால்’’ என்று குறளிலும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்று புறநானூற்றிலும் சொல்லப்பட்டதை எண்ணினால், தந்தை பெரியாரின் தத்துவங்களின் ஆழம் புரியும். உலக மக்கள் அனைவருமே கொண்டாடத் தகுதி படைத்த பெருவிழா நம் பொங்கல் திருவிழா.

தமிழருக்கு வந்திருக்கும் புதிய பொறுப்பு

பகுத்தறிவுடனும் இயற்கையைப் புரிதலுடனும், மனித நேயத்துடன் பல்வேறு இன மக்களுடன் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்த வாழ்கிற தமிழினத்திற்கு இப்போது ஒரு முக்கிய பொறுப்பும் வந்திருக்கிறது.

தொழில் புரட்சிக்குப் பின்னர் தெரிந்தோ தெரியாமலோ மானுட வளர்ச்சி, வசதி என்ற பெயரில் இயற்கைச் சூழல் சிதைவுற்றிருப்பதை பகுத்தறிவாளர்கள் முற்றிலும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய சிக்கல்? இதனைச் சரியாகப் புரிந்து முற்றிலும் தீர்வுகாண என்ன செய்யப்பட வேண்டும்? என்ற கேள்விகள் உலகெங்கும் எழுந்திருக்கின்றன. இயற்கைக்கு நன்றிகூறி, இயற்கையைக் கொண்டாடி மகிழும் இந்தப் பொங்கல் விழாவில் இந்தக் கேள்விகள் பற்றியும், தீர்வுகள் பற்றியும் சற்று சிந்திப்போம்.

நம்பிக்கையும் பொங்கட்டும்!

ஓரளவுக்கேனும் சூழியல் சிக்கல்களை அறிந்தவர்கள் அனைவருக்குமே, நாளுக்குநாள் வரும் செய்திகள் மிகுந்த கவலையைக் கொடுக்கின்றன. என்ன செய்தால் சரியாகும் என்றும் யோசிப்பதும், பேசுவதும், எழுதுவதும், திட்டமிடுவதும், செயல்படுவதும் உலகெங்கும் நடந்து கொண்டு தானிருக்கிறது.

“அறிவுடையார் ஆவதறிவார்”

“அறிவு அற்றம் காக்கும் கருவி”

“உலகத்தோடு ஒட்டஒழுகல்”

என்றெல்லாம் இரண்டாயிரம் ஆண்டு-களுக்கு முன்பே சிந்தித்த தமிழினம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் சூழியல் சிக்கல்களை சரியாகப் புரிந்து, அதற்கான தீர்வும் காண பங்காற்ற முடியும். உலக மக்களுக்கு முன்னுதாரணமாகவும் அமையும். உலகளாவிய சூழியல் அறிஞர்களும், தன்னார்வலர்களும், அரசுகளும், தலைவர்களும் தீர்வுகாண அரும்பாடுபட்டுக் கொண்டிருக்-கிறார்கள். ஏராளமாக சரியான தகவல்களும், புரிதல்களும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.‘External Optimist’ ஆன தந்தை பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கிறார். அவர் வாழ்வே தொண்டறத்தின் இலக்கணமாகத் திகழ்கிறது. அவர் வழியில் அறிவுப் பணியாற்றும் தமிழர் தலைவர் சொல்லும் “வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்’’ என்ற வாசகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, 2022ஆம் ஆண்டில் அடியெடுத்து, தமிழர் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழர்கள் – இயற்கைப் பேரிடர்களை, சூழியல் சிக்கல்களை நன்கு புரிந்து நம்பிக்கையுடன் தீர்வு காண்பதிலும் முன்னிற்க வேண்டும்.

அண்மையில் உணர்ந்த அவசரமும், அவசியமும்

சூழியல் பேரிடர்கள் பற்றி ‘விடுதலை’ ஞாயிறு மலரில் எனது கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இதுபற்றி தொடர்ந்து செய்திகளும் கட்டுரைகளும் ‘விடுதலை’, ‘உண்மை’,‘Modern Rationalist’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இச்செய்திகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்குக்கூட இந்த ஆண்டு முதல் வாரத்திலேயே (சனவரி 2022) நடந்த சில இயற்கை நிகழ்வுகள் பேரதிர்ச்சி தருகின்றன. ஒரே வாரத்தில் அமெரிக்காவில் கொலொராடோ மாநிலத்தில் ஆயிரக்-கணக்கான வீடுகள் தீக்கிரையானதும், வர்ஜினியா மாநிலத்தில் பனிப்பொழிவால் 2 மணி நேர நெடுஞ்சாலைப் பயணம் 27 மணி நேரமாக நீட்டித்ததும், சென்னையில் வானிலை அறிக்கை சொல்லியபடி மிதமாக இல்லாமல்; கடும் மழை கொட்டித் தீர்த்து கட்டடங்-களுக்குள் புகுந்த பெருவெள்ளமும் நமக்கு சூழியல் சிக்கலுக்கு அவசரமாகத் தீர்வு காண்பதன் அவசியத்தை உணர்த்துகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டியபடி, வானிலை முன்னறிவிப்பு சென்னை மழையில் தவறானது போலவே; அமெரிக்காவில் கொலொராடோ மாநில காட்டுத்தீயிலும், வர்ஜினியா பனிப்புயலிலும் தவறாகியிருக்கிறது.

தாமதமின்றி தீர்வுகள்  காண்போம்!

இந்த ஆண்டு பொங்கல் விழாவினை இயற்கையறிவுப் பொங்கலாகவும், பகுத்தறிவுப் பொங்கலாகவும் கொண்டாடுவோம். “தடங்கல்கள் உண்டெனினும் தடந்தோளும் உண்டுந்தானே’’ என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளையும் நினைவில் கொள்வோம். தன் வாழ்நாளிலேயே தன் தத்துவங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றி கண்ட தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்! அரசியல், வணிகம், சமுதாயத் தொண்டு, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை-  எனத் தான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் பெருவெற்றி கண்டவர் தந்தை பெரியார்.

அவரால் அடையாளம் காணப்பட்டு அவரது தத்துவங்கள் உலகெங்கும் பரவ முன்னின்று பாடுபடும் தமிழர் தலைவர் 89 வயதிலும் 29 வயது இளைஞராக ஊக்கமுடன் வழி காட்டுகிறார். பெரியார் புகட்டிய பகுத்தறிவுக் கொள்கைகளை உள்வாங்கியவர்கள் இன்று இந்தியாவில் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் பரந்துபட்டு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். இந்தப் பின்புலத்தைக் கொண்ட நாம், நம்பிக்கையுடன் சூழியல் சிக்கல்களைக் கையாள வேண்டும்.

உலகளாவிய அளவில் அனைத்து பகுத்தறிவாளர்களுக்கும் தலைமை தாங்கும் தகுதியுடையவர் நம் ஆசிரியர் என எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கூறுவார். அப்பெருமை பெற்ற தமிழர் தலைவர் வழிகாட்டலில், சூழியல் சிக்கல்களைத் தீர்க்க, தமிழ்நாட்டு முதலமைச்சர் வையத் தலைமை கொள்ள வேண்டும் என்பதே நம் அவாவும் வேண்டுகோளும்.

சூழியல் பேரிடர்களைச் சரியாக அறிவோம், அவற்றைத் தீர்க்க- சரியான பரப்புரை, திட்டமிடல், செயல்பாடு என நம்பிக்கையுடன் முன் செல்வோம். உலகளாவிய இம் முயற்சிகளால், மானுடத்தைப் பிரிக்கும் அத்தனை கோட்பாடுகளும்  உடைந்து நொறுங்கும். மானுடம் ஒன்றுபட்டு  அன்புடனும் அறிவுடனும் வாழ வழியேற்படும். ஒருவகையில் அதற்காக நாம் சூழியல் சிக்கல்களுக்கு நன்றி சொல்லலாம். இந்த கட்டுரையை இதுவரை படித்தமைக்கு நன்றி. இந்தப் பொங்கலிலிருந்து சூழியல் அறிஞர்கள், ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், பொறுப்-பாளர்கள், தலைவர்கள் ஒருங்கிணைந்தார்கள் என்ற நிலை எய்த வேண்டும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவும் மனிதநேயமும் ஓங்குக வையகம்!ஸீ