இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண், பெண் அனைவரும் எதிர்-கொள்ளும் முக்கிய பிரச்சினை உடல் பருமன்.
உடல் பருமன் ஆவதற்கு முதன்மையான காரணங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றமும் வாழ்க்கை முறை மாற்றமுமே என்றாலும் இன்னும் சில காரணங்களும் உண்டு.
சர்க்கரை நோய், வலிப்பு நோய், மன நோய் மற்றும் மனச் சோர்வுக்கான ஆங்கில மருந்துகள், ஹார்மோன் மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து எடுப்பதாலும் உடல் பருமன் வரக்கூடும். உடற்பருமன் சிலருக்கு மரபணுவின் காரணமாக பரம்பரையாகக் கூட வரலாம். இன்று பலருக்கு மன அழுத்தத்தினால் உடற்பருமன் வருவதைப் பார்க்கின்றோம்.
ஒருவரின் உடல் எடை மற்றும் உடல் உயரத்தை வைத்து BMI எனப்படும் Body Mass Index-இன் மூலம் அறிந்து கொள்ளலாம். பொதுவாக…
* 18.5க்கு கீழ் BMI இருந்தால் (Under Weight) உடல் எடைக் குறைவு என்றும்,
* 18.5 _ 25க்குள் இருந்தால் சரியான உடல் எடை என்றும்,
* 25 _ 30க்குள் இருந்தால் அதிக உடல் எடை என்றும்,
* 30க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்றும் அறிவியல் கூறுகிறது.
அறிகுறிகள்:
அதிக உடல் எடை, மூச்சு வாங்குதல், அதிக அளவில் வியர்த்தல், மந்தத்தன்மை, தாகம், பலவீனம், உடல் வலி, உடல் சோர்வு, உடல் துர்நாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்படலாம்.
இரவில் மூச்சு விடுவதில் சிரமம், குறட்டை, Sleep apnea (உறக்கச் சுவாசத்தடை), மூட்டுத் தேய்மானம், முதுகு வலி, குதிகால் வலி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தோல் நோய்கள், பித்தப்பை கற்கள், கல்லீரல் வீக்கம் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஆகியவை ஏற்படலாம்.
உடற்பருமனைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை
பொதுவாகவே மாவுச் சத்துள்ள உணவுகளாகிய அரிசி, கோதுமை மற்றும் பெரும்பாலான சிறுதானியங்களை நாம் குறைவாக எடுத்துக் கொண்டு அதற்கு சமமான அல்லது அதைவிட கூடுதலான அளவுக்கு காய்கறிகளை எடுத்துக்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
உணவில் அதிகப்படியான நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் உயிர்ச் சத்து உள்ள உணவுகளான கீரைகள், புடலங்காய், வெண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய், சுரைக்காய், பூசணிக்காய், சவ்சவ் ஆகிய காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளில் மாவுச் சத்து அதிகமாக உள்ள கிழங்கு வகைகள், வாழைக்காய் ஆகியவற்றை தவிர்த்து மற்ற காய்கறி, கீரைகளை மாற்றி மாற்றி தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்களில் அதிகப்படியான இனிப்பு உள்ள பழங்களான வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா, சீதா ஆகியவற்றை தவிர்த்து மாதுளம் பழம், ஆப்பிள், கொய்யாப்பழம், விதையுள்ள பப்பாளி ஆகியவற்றை முறையாக அவ்வப்போது உடல் பருமன் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக வெந்நீர் எப்போதும் குடிப்பதே நல்லது.
நம் செரிமான மண்டலத்தைச் சரிசெய்து கொழுப்பை உடம்பில் படிய விடாமல் தடுக்க பெரும் உதவியாக இருக்கும்.
எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவு-களைத் தவிர்க்க வேண்டும். மைதாமாவினால் செய்யப்பட்ட கேக் வகைகள், பப்ஸ் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஓட்டல் உணவுகள் மற்றும் துரித உணவுகளாக பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ் ஆகிய-வற்றைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது-போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.