பதினெட்டாம் படி பூசை
அன்பைத் தேடி
அழகாய் படி
அறிவைத் தேடி
ஆழமாய் படி
இன்மாய் வாழ
இளமையில் படி
இருக்கின்ற வரை
இயன்றவரை படி
இல்லாதோருக்கு
உதவிட படி
ஈன்றவர்களின் பெருமையைக்
காத்திட படி
இதிகாசங்களை முற்றிலும்
ஒழித்திட படி
தெரியாதோருக்கு தெளிவுபடுத்திட படி
இயலாமையிலும்
கொடுத்து உதவிட படி
ஒற்றுமையாய் வாழ
அமைதியைப் படி
உழைப்பைச் சுரண்டும்
ஆதிக்கத்தைப் படி
உண்மையா, வேதமா?
உணர்ந்து படி
கண்ணுக்குத் தெரிந்த
உண்மைகளைப் படி
காட்டில் வாழும்
உயிர்களைப் படி
மொழியைக் காக்க
தெளிவாய்ப் படி
மண்ணைக் காக்க
மாண்புடன் படி
இனத்தைக் காக்க
வீரத்தைப் படி
மனிதனாய் வாழ
உலகைப் படி!
பக்திமான்
குளிக்கின்றான்
குளிக்காதவன் எல்லாம்
சரணம் சரணம்
*******
குழந்தை சாத்தியமே
ஓரினச் சேர்க்கையில்
மணிகண்டன்
*******
என்ன செய்ய முடியும்
அறிவியல்
அய்யப்பா அய்யப்பா
*******
தினம் வேண்டும்
மகர ஜோதி
மின் பற்றாக்குறை
*******
தேவை
தலைக்கு
மூளையா, இருமுடியா?
புனிதமடைகிறது
டாஸ்மார்க்
சாமிகள்
*******
குடிக்கக் கஞ்சியில்லை
வட்டிக்குப் பணம்
பக்திமான்
– புதுவை ஈழன்
கோரிக்கை
ஒன்றுகூடி உரக்க
கோரிக்கை வைக்கின்றன
அண்ணா நூற்றாண்டு
நூலகத்துப் புத்தகங்கள்
வேண்டும் மனமாற்றம்!
வேண்டாம் இடமாற்றம்!
இவர்கள்
கோவில் வாசல்களில்
திருவோடு ஏந்தி
சில்லறை சேர்க்கிறார்கள்
காவியுடை அணிந்த
ஆசாமிகள்
கஞ்சாச் சுருட்டுகளே
கடவுளென தியானித்து!
மகாநிர்வாணம் எய்த வேண்டிய
அவர்கள்,
அரை நிர்வாணமாய் கிடக்கிறார்கள்
சிவபானம் உறிஞ்சி
பூலோகம் மறந்து
– அ.சீறீதர் பாரதி, மதுரை
சிந்தை சிறுபான்மையினர்
தொலைத்ததைத் தேடுபவர்கள்
அல்ல அவர்கள்
இருப்பதைத் தொலைக்கிறவர்கள்
என்னவோ கிடைப்பதாக
புனையப்பட்டிருக்கிறது இக்கதை
கதைமாந்தர்களை நம்பி
சதை மாந்தர்கள் சிதைமாந்தர்கள்
ஆகிறார்கள்…
விடையளிக்கப்படா வியாக்யானங்களுக்கு
வினா எழுப்புவதில்லை இவர்கள்
நம்பினார்கள்
நம்பிக்கைதான் கடவுள்
நம்பிக்கைதான் வாழ்க்கை
எனச் சொல்லப்பட்டதால்
உளறல்கள் உவமையாகவும்
உருவகமாகவும் எனக் கொள்ளப்பட்டதால்…
– பூ.இராமச்சந்திரன்