“புதிய பாதை”
கண்மணிராசா
தெருவில் நுழைந்ததுமே, மரங்களோடு கூடிய அந்த வீடு கண்ணில் பட்டது. பார்க்கவந்த வீடு அந்த வீடாக இருந்தால் நல்லது என நினைத்து …. வண்டியின் பின்புறமிருந்த பையனிடம் கேட்டேன்.
“எந்த வீடுப்பா?”
“அந்தா கொய்யா மரம் நிக்குதே… அந்த வீடுதாண்ணே …”
மகிழ்ச்சியில் மனம் துள்ளியது. மரம் வைத்த வீடென்றால் ஜோதிக்கு ரொம்ப பிடிக்கும். மரம் மட்டுமல்ல… பறவைகள் வந்து அடைய வேண்டும். அணில்கள் நிறைய இருக்க வேண்டும். மத்தியானப் பொழுதுகளில் மரத்தின் கீழ் கட்டில் போட்டுத் தூங்க வேண்டும். இப்படி நிறைய ஆசைகள் அவளுக்கு. இப்பதான் என்றில்லை. காதலிக்கும் போதே அப்படித்தான். ரசனையான பெண், கவிதை பிடிக்கும்; பாட்டு பிடிக்கும்… பாடுவேன் என்பதால் தானே என்னையே பிடித்தது அவளுக்கு. அப்போதே இந்தக் கனவுகளைக் கண்களில் காதல் பொங்க கைகளை இறுகப் பற்றிக்கொண்டே விவரிப்பாள்.
ஜாதி மீறிய காதலென்பதால் வீட்டை எதிர்த்து திருமணம். நண்பர்கள்தான் இதுவரை துணை. மணமான இந்த எட்டு ஆண்டுகளில் அவள் விரும்பியபடி வீடு அமைந்ததில்லை. ஆறு வீடுகள் மாறியிருக்கிறார்கள். இது ஏழாவது வீடு.
வீடு மாறும் ஒவ்வொரு முறையும் ஜோதி ஆசைப்படுவாள். மரம் வைத்த … பெரிய முற்றம் வைத்த ….. தனி வீடு. நண்பர்கள் வந்து கூடி பேச…. விசாலமான வீடு வேண்டுமென. அப்படியான வீடு கிடைத்ததில்லை . வரப்பெற்றதெல்லாம் புறாக் கூண்டுகளே.
“சார்… வாங்க…”
வாயிற் கதவைத் திறந்த படியே பையன் கூப்பிட்டான். கதவைத் திறந்ததுமே பெரிய முற்றம் கண்ணில் விரிந்தது. வெகு நாள்களாக யாரும் வரவில்லை போல்… இலைகள் நிறைந்து தரையை மூடியிருந்தன. கொய்யாக் கனிகள் யாரும் பறிக்காததால் பழுத்துக் கிடந்தன… அணில்கள் தலையைத் திருப்பி இவர்களைக் கவனித்தன… பறவைகளின் குரல் சலசலத்தன…
பக்கத்து வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
கதவின் பின்னிருந்து நீண்ட முகத்தைக் கண்டதும் சற்று பயந்துதான் போனேன். வெறித்த பார்வையுடன் அடர்ந்த தாடியுடன் பெரியவர் இவனை ஊடுருவினார். அவரைக் கண்டதும் பையன் பதறினான்.
“சார், இந்த வீடு உங்களுக்கு வேணாம் சார், இந்த வீட்டுல பேய் இருக்கு சார்.”
“என்னடா சொல்றா…?”
“இப்ப நம்மள முறைச்சபடி பார்த்தாரே பெரியவரு… அவரு பொண்ணு திடீர்னு ஒருநா அவங்க வீட்டுல தூக்கு மாட்டி செத்துப்போச்சு. அதுக்கப்புறம் தினமும் ராத்திரி அந்த வீட்டுல இருந்து ஏதேதோ சத்தம் கேக்கவும்… பயந்து போய் இந்த வீட்டுல இருந்தவங்க பயந்து போய் காலி பண்ணினாங்க… அதுக்கப்பறம் யாருமே குடிவரல….” எனக்குள் லேசாய் எழுந்த பயத்தை மறைத்தபடி கேட்டேன்,
“சரிடா, பெரியவரு ஏன் நம்மள முறைக்கணும்….”
“மக செத்ததுல இருந்து அவரு தனியாகிட்டாரு . யார்கிட்டயும் பேசறதில்ல சார். யாரைப் பாத்தாலும் இப்படித்தான் முறைப்பாரு….. வெளிய வருவதில்ல… பென்சன் பணத்துல வாழ்க்கைய ஓட்டுறாரு.. மாசம் ஒரு நாள், ஆட்டோவுல போவாரு அவ்வளவுதான்…. வாரம் வாரம் அந்த ஆட்டோக்காரரு, காய்கறிகள் வாங்கி வருவாரு…. அவரு கூட வீட்டுக்குள்ள போக மாட்டாரு. வெளிய வராண்டாவோட சரி…”
பையன் சொல்லி முடிக்கும் முன் முழுதாய் வேர்த்திருந்தான்.
“பரவாயில்ல மாமா முடிச்சிருங்க”
அப்படியானால் அந்த வீட்டை ரொம்ப விரும்பத் தொடங்கிவிட்டாளென அர்த்தம். அவள் கண்களுக்குள் அந்த வீட்டின் மரநிழலில் அமர்ந்தபடியே தேநீர் குடித்தபடி நாங்கள் பேசிக் களிக்கும் காட்சி விரிந்தது….. நானும் அவளின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன்.
முதலாளிக்கு மிகுந்த சந்தோசம். நான் சரி என்றதும் “நிசமா.. நிசமா…” என கேட்டுக் கொண்டார். சடசடவென வேலைகள் நடந்தன. வீடு காட்ட வந்த பையன் முகத்தில் சற்று கலக்கம்.
ஜோதிக்கு இன்னும் பயம் விலகவில்லை என்பது அவளின் கண்களில் தெரிந்தது. இரவு மெல்ல மெல்லத் தொடங்கிய மழை வலுத்தது….. என் கவிதையொன்றை ஜோதி பாடத் தொடங்கினாள்.
கூடவே, பெரியவன் பாட… நானும் மகளும் ஆட…. என கலகலத்தது வீடு. ஆடிய களைப்பில் பிள்ளைகள் உறங்கத் தொடங்க….. மழை தூறலாய்க் குறைந்திருந்தது.
இப்போது லேசாய் துவங்கியது…… அந்தக் கதவு திறந்து மூடும் சத்தம்… லேசாய் பெண்குரல் பாடும் சத்தம்…. தொடர்ந்து, திடீரென பெரியவரின் பலத்த அழுகுரல் சத்தம்.
நான் பதறி குழந்தைகளின் காதுகளை மூடுமாறு போர்வையை இழுத்து விட்டு, ஜோதியைப் பார்த்தேன்… மிகுந்த பயத்தோடு நடுங்குவது தெரிந்தது. எனக்குள்ளும் இருந்த பயத்தை மறைத்துக் கொண்டு, ஜோதியின் கைகளை ஆறுதலாய் இறுகப் பற்றினேன்.. கொஞ்ச நேரத்தில் பெரியவரின் அழுகுரல் நின்றது; பெண் குரலின் பாடலும் நின்றது… ஆனால் யாரோ நடந்து நடந்து கதவைத் திறந்து மூடும் சத்தம் மட்டும் ஓயவேயில்லை .
“மாமா, அந்தப் பொண்ணு செல்போன்ல பாட்டு கேட்டுக்கிட்டே… நைட்டு ரொம்ப நேரம் வீட்டுக்குள்ளயே நடக்குமாம். அதான் செத்ததுக்கு அப்புறமும் தினமும் இங்க வந்து நடக்குதாம். அவ வரக்கூடாதுன்னு பெரியவரு கதவை அடைப்பாராம். அந்தப் பேய் திறக்குமாம்…. விடிய விடிய இதுதான் நடக்குமாம்.. பயமாருக்கு மாமா…”
“யாரு சொன்னா…?”
“காலையில் செல்விய வரச்சொல்லிட்டு பால் வாங்க தெரு முக்குல இருக்கற கடைக்குப் போனேன், அங்க ஒரு அக்கா என்னய விசாரிச்சுட்டு இதை சொன்னாங்க…”
எனக்குள் பயம் கூடியது… விடியும் வரை, பேய் கதவை திறக்க… அவர் மூட… என சத்தம் கேட்டபடியே இருந்தது. விடிந்ததும் ஒரு முடிவெடுத்தேன். விடுப்பென ஆலைக்குத் தகவல் தெரிவித்து விட்டு எங்கும் போகாமல் வீட்டில் இருந்தேன். குழந்தைகள் பள்ளிக்குப் போனபின்பு யோசித்தபடியே அந்தப் பெரியவருக்காய்க் காத்திருந்தேன்.
“வணக்கம் அய்யா…. டீ குடிக்க வாங்களேன்…”
அவர் திடுக்கிட்டார். தன் பின்னால் யாரோ இருப்பதாக நினைத்து திரும்பி பார்த்துக் கொண்டு… அவரைத்தான் அழைத்தேனெனப் புரிந்து கொண்டார். “என்னையா தம்பி”
ஆமாங்கய்யா, வாங்க…..
கொஞ்ச நேரம் பார்த்தபடியே இருந்தார்… பின் தயங்கியபடி அவர் வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்தார். மரத்தடியில் நாற்காலி போட்டபடி அமர்ந்திருந்த நானும் ஜோதியும் அவரை எழுந்து வரவேற்றோம்…. அவர் கண்களில் வியப்பும் மகிழ்வும் மின்னின. தேநீரைக் கொடுத்தபடி நாங்கள் அறிமுகமானோம். மவுனமாக தேநீரைக் குடித்தவர், தயங்கி… தயங்கிப் பேசத் தொடங்கினார்….
“ரெண்டு வருசமாச்சு தம்பி, ஆளுக்கிட்ட பேசி…. யாரும் பேசறதில்ல உங்களுக்கு எப்படித் தோனுச்சு எங்கிட்ட பேசலாம்னு.
நான் பேசும் முன் ஜோதி ஆரம்பித்தாள். அவர் பேசத் தொடங்கியதும் அவளுக்குப் பயம் விட்டிருக்கும் போல.
“இல்லங்கய்யா…. நீங்க பாக்கறதுக்கு என் அப்பா போலவே இருந்தீங்க… அதான் மாமாகிட்ட சொன்னேன்…. உங்ககிட்ட பேசத் தோனுச்சு.”
அவர் கண்கள் கலங்குவது தெரிந்தது.
“சந்தோசம்மா சந்தோசம்…. ரொம்ப நாள் கழிச்சு மனசு நிறைவா இருக்கு. என் பொண்ணு உயிரோடு இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பா…. நீ நல்லாருப்பமா… ஒரு குறையும் வராது….”
கேட்டு விட வேண்டியதுதான் எனத் தொடங்கினேன்.
“அய்யா…. உங்க பொண்ணு…
எப்படி…?”
சற்று மவுனமானவர், பின் கண்களைத் துடைத்துக் கொண்டு பேசலானார்.
“தம்பி, என் பொண்ணு பேரு மாதவி. நானொரு தமிழாசிரியர். என் மனைவி சீக்கிரமாகவே இறந்துட்டா… அப்ப என் பொண்ணுக்கு 18 வயசு….. அப்பயிருந்து நானும், என் பொண்ணும் தனியாத்தான் வாழத் தொடங்குனோம்.”
உறவுக்காரங்க…?
“அது, தனிக் கதை தம்பி. நானும் என் மனைவியும் காதல் திருமணம் _ வேற வேற ஜாதி… அதுனால உறவுகள் அண்டறதில்ல..” ஜோதி அழுதுவிடுவாள் போலத் தோன்றியது. “இன்னொரு டீ வேணும் தாயி…!”
அவரே, கேட்கவும் உள்ளே போனாள்.
“உறவுகளை விட்டு இந்த ஊருக்குப் பணி மாற்றம் கேட்டு வந்து ஓய்வு பெற்றதும் வந்த பணத்துல இந்த வீட்டை வாங்கி இங்கவே தங்கிட்டோம். நல்லாதான் போய்கிட்டு இருந்தது வாழ்க்கை.”
ஜோதி மூன்று பேருக்குமே தேநீரோடு வந்தாள்.
“எம் பொண்ணுக்கு, இசைன்னா உயிர். நல்லா கவிதை எழுதுவா, பாடுவா….. இங்க வந்து கல்லூரில் படிச்சுக்கிட்டிருந்தா…. வெளியூர்க் கல்லூரியில் இடம் கிடைச்சதால் விடுதியில் தங்கி படிப்பைத் தொடர்ந்தா…… நிறைய தேர்வுகளில் முதலிடம் பிடிச்சா… அதான் அவளுக்கு வினையாச்சு……. எங்க ஜாதியைச் சொல்லிச் சொல்லி அவள் கேலியும் கிண்டலும் பண்ணியிருக்காங்க. தைரியமான பொண்ணுதான்… தொந்தரவு அதிகமாகவும் திடீர்னு …..”
மேலே சொல்லமுடியாமல் அழத் தொடங்கினார். உறைந்து போய் கேட்டுக் கொண்டிருந்த நான் எழுந்து அவரின் கைகளை ஆறுதலாகப் பிடித்தேன்.
“உங்ககிட்ட கூட சொல்லலயாப்பா மாதவி…..”
“இல்லம்மா. ஏற்கனவே என் மனைவி இறந்த சோகம். சொந்த ஊரைப் பிரிந்த துயரம்.. இதால நான் சங்கடப்படுறன்னு அவளுக்கு தோணிருக்கு ….. இதை வேற சொல்லணுமான்னு…”
நீங்க ஏன் போலிஸ்ல புகாரளிக்கல…
“கொடுத்துருக்கேன், தம்பி. பேப்பர்ல நீங்க பாத்திருப்பீங்கல்ல… அதுல என் பொண்ணு பேரை மாத்திப் போட்டுருப்பாங்க….”
அவர் சொல்லச் சொல்ல எனக்கு நினைவு வந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜாதியைச் சொல்லி கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி என மாநிலம் பரபரப்பானது. அத்துயரை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பேனென நினைக்கவில்லை.
மவுனமாய் இருந்து விட்டு….. “அய்யா, ஒன்னு கேட்கறேன், தப்பா நினைக்க மாட்டீங்கள்ள…”
“கேளுங்க தம்பி, யாருமே எதுவுமே கேட்காம….. பேசாம கிறுக்குப் புடிச்சுப் போயிருக்கேன்… யாராவது பேச மாட்டாங்களானு ஆதங்கத்தோட பாக்கறன். தப்பா புரிஞ்சுக்கிட்டு பயப்படுறாங்க…. கேளுங்க..”
“இல்ல…. வந்து….. இப்பவும் உங்க பொண்ணு ராத்திரில வர்றதாவும் நடக்கறதாவும்…..
“ஆமா, அது வேற சொல்றாங்களாம். ஆட்டோ டிரைவர் ஒருநாள் சொன்னார். அதுக்குப் பயந்துக்கிட்டு இந்த வீட்டுக்குக் கூட ஆளுக குடி வரலயாம் எல்லாம் தெரியும் தம்பி… யாராவது கேட்டாத்தானே நான் உண்மையச் சொல்ல முடியும்.”
“அப்படின்னா தினமும் ராத்திரி உங்க வீட்டுல கேட்கற சத்தம்….”
என்ன சத்தம்…?
“விடிய விடிய கதவை உங்க பொண்ணும் நீங்களும் திறந்து மூடுற சத்தம்… பெண் குரல் பாடுற சத்தம்….
மெல்ல புன்னகைக்கத் தொடங்கியவர்… பலத்து சிரிக்கத் தொடங்கினார். பின் எழுந்து.. ரெண்டு பேரும் என் கூட என் வீட்டுக்கு வாங்க….. என நடக்கத் தொடங்கினார்.
என்னதான் ஆகுதென பார்த்து விடலாமென நானும்….. என் கைகளைப் பற்றியபடி ஜோதியும் அவரின் வீட்டுக்குள் நுழைந்தோம்.
அவ்வளவு சுத்தமாக நேர்த்தியாக வீடிருந்தது. நிறைய இசைத்தட்டுகள். தமிழிலக்கிய நூல்கள்… நிறைந்திருந்தன. ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருந்த எங்களை ஒரு கதவின் அருகே நிறுத்தி விட்டு…. ஒரு எண்ணெய்ப் பாட்டிலோடு வந்தவர் அந்தக் கதவின் கொண்டி… இரும்புக் கம்பிகளில் எண்ணையை விட்டார்.
“இனி சத்தம் கேட்காது… என சிரித்தார்.” நாங்கள் புரியாமல் பார்க்க,
“தம்பி, இந்தக் கதவு மூட முடியாதபடி சேதமாயிருச்சு…. ஆசாரி யாரும் வர மறுக்குறாங்க….. நானும் விட்டுட்டேன். காத்துல கதவு ஆடி ஆடி… அந்த சத்தம்…. போதுமா….”
“அப்படின்னா அந்தப் பாடல் ……
அதுவா என் பொண்ணுதான்,”
என்றபடி, செல்பேசியொன்றை ஆன் செய்தார். பிசிறில்லாத, குரலில் மாதவி பாடுவது ஒலித்தது.
“அப்பப்ப இதைக் கேட்பேன். நேத்து சோகம் தாங்காம அழுதுகிட்டே…. மன்னிக்கணும் என்றார்.”
நாங்கள் திகைத்து நின்றிருந்தோம்.
இரண்டு நாள்கள் கழித்து… எங்கள் வீட்டு மரத்தடியில் குழுமியிருந்த நண்பர்களிடையே செல்வி பேசிக்கொண்டிருந்தார்.
“நண்பர்களே, மத … ஜாதிய… வர்க்க ஏற்றத் தாழ்வுகளை நீக்க எழுத்தின் வழியே போராடும் நம் மன்றத்தில், புதிதாக நமக்கெல்லாம் தந்தையாக தமிழாசிரியர் நல்லபெருமாள் இணைந்திருக்கிறார்.”
“உறவுகள் என்பது ரத்த உறவுகள் மட்டுமல்ல சக மனிதர்களை நேசிக்கிற யாவருமே உறவுகள்தான். அந்த வகையில், நம் ஜோதியின் தந்தையை அதாவது நல்லபெருமாள் அய்யாவை நாமும் தந்தையாக உணர்கிறோம். அது மட்டுமல்ல…. மறைந்த நம் சகோதரி மாதவி அவர்களின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை நாம் போராடுவோம். இத்தருணத்தில் இன்னொரு மகிழ்வான தகவலையும் தெரிவிக்கிறேன். நம் தந்தை நல்லபெருமாள் அவர்களின் வேண்டுகோளின்படி அவரது நிதியுதவியில் “மாதவி விருது” ஏற்படுத்தவுள்ளோம். சமூகப் போராளிகளில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் மாதவி விருதை வழங்குவோம்.”
செல்வி முடிக்க….
நல்லபெருமாள் அப்பாவை பேச நண்பர்கள் வேண்டினர்.
அப்பா எழுந்து …
“நம்ம கூட்டத்துல யாராவது மரவேலை செய்ற ஆசாரி இருக்கீங்களா….” என்க ….
கூட்டம் வெடித்துச் சிரித்தது.
நானும் ஜோதியும் வெட்கத்தில் முழிக்க….
அந்தக் கதவு, பேய்க் கதைய எல்லாருக்கும் சொல்லிட்டேன், என் அப்பாவும் சிரிப்பில் நிறைந்தார்.ஸீ