எனக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட தஞ்சை மாநாடு
கி.வீரமணி
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரிடம் பேரன்பு கொண்டவரான தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கே.டி.சுப்பிரமணியன் _ இராஜம்மாள் ஆகியோரின் பேத்தியும், சென்னை ஞா.சித்தரஞ்சன் _ தங்கம்மாள் ஆகியோரின் செல்வியுமான சி.விஜயகீதாவுக்கம்; இராஜபாளையம் இராமலிங்காபுரம் கா.இடும்பசாமி _ மனோரமா தேவி ஆகியோரின் மகன் இ.சிவகுமாருக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 18.1.1998 அன்று தண்டையார்பேட்டை இராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பழ.நெடுமாறன், அனைத்துக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி வாழ்த்தினேன்.
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா.ம.ஞானவதியின் மணவிழாவை 19.1.1998 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் தலைமையேற்று நடத்தி வைத்தேன். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் என்னால் வளர்க்கப்பட்ட செல்வி ஈ.வெ.ரா.ம.ஞானவதியையும், புதுக்கோட்டை காமராசபுரம் வெ.சுப்பிரமணியம், சங்கியம்மாள் ஆகியோரின் செல்வன் சு.ராசேந்திரனையும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் மணவிழாவை நடத்தி வைத்தேன்.
விழாவில் கல்வி நிறுவன ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த மணவிழா நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பெண்களில் 20ஆவது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவாகும்.
உரத்தநாட்டில் ஒக்கநாடு மேலையூர் லெ.பழனிவேல் _ அஞ்சம்மாள் ஆகியோரின் செல்வன் ப.துரைராசுக்கும், வடக்கூர் ஆறுமுகம்_ பூரணம் ஆகியோரின் செல்வி ஆ.அல்லிராணிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 23.1.1998 அன்று ரெங்கமணி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்று மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து சிறப்புடன் நடத்திவைத்தேன். விழாவில் உரையாற்றுகையில், “பெண்களுடைய அறிவு, மானம், வீரத்தை வலியுறுத்தி பகுத்தறிவு நெறியில் வாழவேண்டும் என்பதையும், பெண்ணடிமை புராணக் கதைகளைப் படிக்காமல், ராக்கெட்டில் விண்வெளிப் பயணம் செய்து கொண்டிருக்கின்ற கல்பனா சாவ்லாவைப் பற்றி படிக்கவும், பேசவும் வேண்டும். பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அறிவைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். அது உலக அளவில் அவர்களை உயர்வடையச் செய்யும்’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். மணவிழாவில் அனைத்துக் கட்சியின் முக்கியப் பிரமுகர்களும், கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சுயமரியாதை வீரர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் மானமிகு எஸ்.சரவணன் அவர்கள், அவரின் மகனது கல்லக்குடி (டால்மியாபுரம்) இல்லத்தில் காலமானார் என்ற செய்தியை 24.1.1998 அறிந்து மிகவும் வேதனையும் துயரமும் அடைந்தோம்.
தோழர் சரவணன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்திலேயே மிகவும் தீவிரமான திராவிடர் கழகப் பற்றாளர். நீடாமங்கலத்தில் திராவிட மாணவர் மாநாடு நடத்தப் பெரிதும் காரணமானவர்.
முதுபெரும் சுயமரியாதை வீரரான நீடாமங்கலம் மானமிகு அ.ஆறுமுகம் அவர்கள், முல்லைவாசல் அய்யா மானமிகு ரத்தினசபாபதி நீடாமங்கலம் விசுவநாதன் ஆகியவர்களுடன் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து அப்பகுதியில் இயக்கம் வளர்த்தவர். இளைஞர்களை ஈர்த்தவர்.
1957இல் ஜாதி ஒழிப்புப் போராட்டமான அரசியல் சட்டத்தாளை அய்யாவும், கழகத்தினரும் கொளுத்தி பல்லாயிரக்கணக்கில் சிறை புகுந்த நேரத்தில், தனது விற்பனை வரித்துறை அதிகாரி பதவியில் நீண்ட விடுமுறை போட்டு விட்டு, ‘விடுதலை’யின் மேலாளர் பொறுப்புப் பணிகளைச் செய்ய முன்வந்து, அதனால் காங்கிரஸ் அரசின் இடர்ப்பாடுகள், தொல்லைகளைச் சந்தித்து, பிறகு வெற்றியுடன் வெளியே வந்தவர். ‘இராவணன்’ என்ற புனை பெயரில் எழுதவும் செய்வார். பழைய திராவிட இயக்க நீதிக்கட்சி மற்றும் லண்டன் ஆர்.பி.ஏ. நூல்களை நம்மிடம் தந்து, பிரச்சாரத்திற்குப் பயன்-படுத்துங்கள் என்று கூறி ஊக்கமூட்டிய பெருந்தகை.
ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ‘விடுதலை’ குடும்பத்தில் மீண்டும் இணைந்து இருந்து பிறகு ஊருடன் சென்றவர்.
அவருக்கு வீரவணக்கத்தினை கழகம் செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டோம்.
திருவாரூர் மாவட்டம் கண்-கொடுத்தவனிதம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் கட்டடத் திறப்பு விழா 25.1.1998 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கட்டடத்தைத் திறந்து வைத்து கூடியிருந்த தோழர்கள் முன் சிறப்புரையாற்றினேன்.
மாவட்ட தி.க. தலைவர் எஸ்.எஸ்.மணியம் தலைமை வகித்தார். இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள இக்கட்டடத்தை பெரியார் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டது சிறப்புமிக்கதாகும். இப்பணியை முடிக்க உறுதுணை புரிந்த கழக இளைஞரணித் தோழர் சேதுராமனுக்கு விழாக்குழு சார்பாக சால்வை அணிவித்து கவுரவித்தோம். நிகழ்வில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ _ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதுரையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் பேராசிரியர் மு.இளமாறன் _ வைரமணி ஆகியோரின் செல்வி வாகை மலருக்கும், விருதுநகர் அ.சந்திரன்_பவளமணி ஆகியோரின் செல்வன் சிறீராமுவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை 1.2.1998 அன்று கே.எஸ்.புன்னைவனம் திருமண மன்றத்தில் தலைமையேற்று நடத்தினேன். அப்போது மணமக்களை மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும், உறுதிமொழி ஏற்கச் செய்தும், மணவிழா சிறப்புடன் நடத்தப்பட்டது. விழாவிற்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தஞ்சையில் நடக்கவிருக்கும் மனிதநேய மாநாட்டிற்குப் புறப்பட்டேன்.
தஞ்சையில் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மனிதநேய மாநாடு தஞ்சை மாநகரமே குலுங்கும் அளவுக்கு 1.2.1998 அன்று சிறப்பான திட்டமிடலுடனும், வரவேற்புடனும் நடைபெற்றது. மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் இரதத்தில் என்னை அமரவைத்து அழைத்து வந்தனர். சிறப்பான கலைநிகழ்ச்சி-யோடு நடைபெற்ற பேரணி எட்டு மணிக்கு திலகர் திடலை அடைந்தது.
மனிதநேய மாநாட்டுக்கு இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சேனல் இடமருகு (டில்லி), இங்கிலாந்து நாத்திகர் மால்கம் ஒவன்ரீஸ், சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் முருகு.சீனிவாசன் எஸ்.டி.-மூர்த்தி, தி.நாகரத்தினம், தமிழ்மறையான், மலேசிய தி.க. தேசியத் தலைவர் ரெ.சு.முத்தய்யா, திராவிடமணி நல்லதம்பி, டத்தோ பாலகிருஷ்ணன், திருச்சுடர் கே.ஆர்.-ராமசாமியின் குடும்பத்தினர், கருநாடக மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் உறுப்பினர் என்.வி.நரசிம்மையா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான பேராசிரியர் டாக்டர் இலட்சுமண் எஸ்.தமிழ் (இலக்குவன்தமிழ்), சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், இங்கிலாந்து நாட்டின் இணையற்ற பெரியார் பெருந்தொண்டர் செல்வநாயகம், பி.பி.சி. தமிழோசை புகழ் சங்கரமூர்த்தி இன்னும் பல வெளிநாட்டு தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு கழகத்தின் செயல்பாடுகளையும், கழகம் செய்துவரும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் வாழ்த்திப் பேசினார்கள்.
கழகப் பொறுப்பாளர்களின் அன்புக்கிணங்க மேடையிலே ஒரு பெரிய தராசினைக் கொண்டுவந்து ஒரு தட்டில் என்னையும், மற்றொரு தட்டில் ரூபாய் நோட்டுகளும், தங்கமும் வைக்கப்பட்டன. தராசு முள் நடுவில் நேராக நின்றதும், நான் இறக்கி விடப்பட்டேன். அவ்வாறு கொடுக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.9 கோடி ரூபாயாகும். முதன்முதலில் எடைக்கு எடை தங்கம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை அறிவித்தவர் பொருளாளர் கா.மா.குப்புசாமி ஆவார். அவருக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் கேட்டுக்கொள்ள வைரக்கல் பொறித்த தங்க மோதிரத்தை அணிவித்தேன். மாநாட்டில் நிறைவுரையில், “இந்த நிதி எனக்காக அளிக்கப்பட்டதல்ல! தந்தை பெரியாருக்கு நன்றிகாட்ட என் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மதவாத எதிர்ப்பு இளைஞர்களுக்குப் பயிற்சிப் பட்டறை, 100 புத்தக விற்பனை நிலையம், பல மொழிகளில் தந்தை பெரியாரின் நூல்கள், புதுடில்லியில் நமது இயக்கம் பற்றிய உலகத் தகவல் மய்யம் போன்ற ஆக்கரீதியான பணிகளுக்குப் பயன்படுத்துவோம் என்றேன். நாங்கள் ஏதோ தன்னந்தனியராக இல்லை. உலகக் குடும்பமே எங்களுக்குத் துணையாக இருக்கிறது என்பதைத்தான் இந்த மனிதநேய மாநாடு காட்டியிருக்கிறது’’ எனப் பல கருத்துகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.
மாநாட்டு மேடையில் நான்கு சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. ஊற்றங்கரை திருவாளர்கள் அப்பாவு _ பச்சியம்மாள் ஆகியோரின் செல்வன் இராசேந்திரன், சின்னக்கண்ணன் _ சந்திரா ஆகியோரின் செல்வி வேல்விழி; கோவில்தேவராயன் பேட்டை திருவாளர்கள் சங்கரலிங்கம் _ சகுந்தலா ஆகியோரின் செல்வன் சந்துரு, வல்லம் பிள்ளையார்பட்டி சிதம்பரநாதன் _ கலைமணி ஆகியோரின் செல்வி அஞ்சுகம்; தஞ்சாவூர் மாவட்டம் சாமிமுத்து _ அந்தோணியம்மாள் ஆகியோரின் செல்வன் லூர்துசாமி, அந்தோணிசாமி _ சவுரியம்மாள் ஆகியோரின் செல்வி தங்கமணி; கோவை மாவட்டம் சுந்தராபுரம் கே.எம்.சண்முகம் _ ருக்மணி ஆகியோரின் செல்வன் கதிரவன், கே.பழனிச்சாமி _ கவுசல்யா ஆகியோரின் செல்வி லாவண்யா ஆகிய நான்கு இணையரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.
பூதனூர் திராவிடர் கழகத் தலைவர் இரா.இலக்குமணன் அவர்களின் பேரக் குழந்தையும், கவுதமன் _ சுமதி ஆகியோரின் மகளுமான பெண் குழந்தைக்கு ‘தங்கமணி’ எனப் பெயர் சூட்டினேன்.
மாநாட்டில் நான் எழுதிய Why I do not believe in God?” என்னும் ஆங்கில நூலை பார்பரா சுமோக்கர் வெளியிட, ஜெர்மானிய நாத்திக அறிஞர் டாக்டர் வால்கர் முல்லா பெற்றுக் கொண்டு _ தமிழ்நாட்டில் உள்ள இதுபோன்ற இயக்கத்தை ஜெர்மனியில் மட்டுமல்ல _ உலகில் வேறு எங்குமே காண முடியாது என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
இந்த மாநாடு தஞ்சையில் அனைத்து தரப்பு மக்களையும் பகுத்தறிவுப் பாதையில் கொண்டுசெல்லும் வகையில், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு கழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது.
ஜெர்மனி நாத்திகக் குழுவினர் சென்னை பெரியார் திடலுக்கு 6.2.1998 அன்று இரவு ஏழு மணிக்கு வால்கர் முல்லருடன் இணைந்து நாத்திகச் சங்கத்தைச் சார்ந்த பத்து பேருடன் வருகை புரிந்தனர். அவர்களை பகுத்தறிவுக் கழகச் செயலாளர் கோ.அண்ணாவி வரவேற்றார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மந்திரமா? தந்திரமா? நிகழ்வை ஜெர்மன் குழுவினருக்கு மெருல்கம்தார் ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினார். இந்த நிகழ்ச்சி அவர்களை மிகுந்த வியப்புக்குள்ளாக்கியது. மலேசிய செல்வம் விழாக்குழு சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.
ஜெர்மனிய நாத்திகச் சங்க பிரதிநிதி வால்கர் முல்லருக்கு சால்வை அணிவித்து தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுச் சின்னத்தை வழங்கினேன். அந்த நிகழ்வில் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் அவர்கள் 1932ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார். இன்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாத்திகவாதிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு வந்திருக்-கின்றார்கள். ஜெர்மனி நாட்டைச் சார்ந்த மேக்ஸ் முல்லர் அவர்கள் சமஸ்கிருதத்தைப் பரப்ப இங்கு வந்தார். இன்றைக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வால்கர் முல்லரும் நாத்திகப் பிரதிநிதிகளும் தந்தை பெரியார் அவர்களது கருத்தை ஜெர்மனியில் பரப்ப இங்கு வந்திருக்கின்றனர். காலச் சக்கரம் சுழலுகின்றது! ஜாதி, மதம், கடவுள் ஒருபோதும் மக்களை இவை ஒன்றிணைக்காது. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையான மனிதநேயம் மட்டுமே மனித குலத்தை ஒன்றிணைக்கும்’’ என பல்வேறு கருத்துகளைக் கூறினேன். இந்த நிகழ்வுக்கு கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கோவையில் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்புத் தொடர்பாக 15.2.1998 அன்று விடுதலையில் கண்டித்தும், இரங்கலைத் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டோம். அதில்,
கோவையில் 14.2.1998 அன்று பற்பல இடங்களில் குண்டுகள் வெடித்தன என்றும், அதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட உயிர்கள் பலி என்றும், காயம் அடைந்தோர் எண்ணிக்கை 150அய்த் தாண்டும் என்றும் வந்துள்ள செய்தி, எவரையும் அதிர்ச்சிக்கும், ஆறாத் துயரத்துக்கும் உள்ளாக்கும் வேதனையான துயரச் செய்தியாகும்.
பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரான அத்வானி அவர்கள் கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தையொட்டி, அவருடைய உயிருக்குக் குறி வைக்கும் அசல் காட்டுமிராண்டிதனமான வெறிச் செயல்தான் இது என்று அறியும் எவரும், இதனை வன்மையாகக் கண்டிக்கவே செய்வர்.
இதன் பின்னணியில் வெளிநாட்டுப் பயங்கரவாதிகளோ, உள்நாட்டு மதவெறியர்களோ அல்லது வன்முறையை வாழ்வியலாக நம்பும் வன்னெஞ்சர்களோ, எவராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து, கடும் தண்டனைக்கு ஆளாக்க அரசு தயங்கவே கூடாது.
மறைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்! நிலைமை மற்ற இடங்களில் பரவாது தடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட வேண்டும். காப்பாற்றப்பட வேண்டியது உயிர்கள் மட்டுமல்ல; ஜனநாயகம், பொது அமைதி, சட்டம் _ ஒழுங்குகளும்தாம்’’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
தருமபுரி மாவட்ட மாணவரணி தலைவர் தீ.சிவாஜி அவர்களின் மணவிழாவை தலைமையேற்று 15.2.1998 அன்று அரூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தேன். மணமக்கள் தீ.சிவாஜி _ சி.சசிகலா ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை-நல ஒப்பந்த விழா உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன்.
அந்த உரையில், “சுயமரியாதைக் கொள்கை-களை, தந்தை பெரியார் அவர்களது கொள்கைகளை ஏற்றிருந்தால் இந்த நாட்டிலே மதவெறிப் பாம்பு தலை எடுத்து ஆடுமா? பெரியார் விரும்பிய கருத்துகள் இந்த மண்ணை முழுமையாக ஆண்டிருக்கு மேயானால் மதக் கலவரங்கள் வருமா? கடவுள் இல்லை என்பவன் எங்கேயாவது கோவிலை இடிக்கச் சென்றிருக்கின்றானா? நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்கின்றனவர்கள்தாம். ஆனால், இந்த நாட்டிலே கடவுளை நம்புவதாகச் சொல்லிக் கொண்டு அன்பே கடவுள் என்று சொல்லிக் கொண்டு வேலாயுதத்தையும், சூலாயுதத்தையும் தூக்கிக் கொண்டு போகின்றார்கள். அதனால், மதவெறி தோன்று-கின்றது. மனித உயிர்கள் பலி கொள்ளப்-படுகின்றன. எங்கெல்லாம் பெரியார் கொள்கை வளருகின்றதோ அங்கு மக்களுக்கு நன்மை ஏற்படும்’’ என நாட்டு நடப்புகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.
சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவு திரைப்படமான ‘புரட்சிக்காரன்’ திரைப்படம் தொடக்க விழா 18.2.1998 அன்று முக்கியப் பிரமுகர்களின் வருகையோடு துவக்கப்பட்டது. விழாவில் இயக்குநர் வேலு.பிரபாகரன், திரைப்பட நடிகர் கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், கழகப் பொறுப்பா£ளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் வந்திருந்த அனைவரும் சிறப்புரை-யாற்றினார்கள். அதில் நடிகர் கமல்ஹாசன் உரையாற்றுகையில், “மனித நேயத்தைக் கொள்கையாகவும், நாத்திகத்தைக் கருவியாகவும் கொண்டுள்ள இந்த இயக்கம் தோற்கவே முடியாது. அதில் நான் சேர்ந்திருக்கிறேன். நாடகங்களில் நடிக்க நான் இங்கு வந்திருந்தபோது இங்கு அமர்ந்திருக்கும் அய்யா கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அய்யா அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மற்றவர்கள் சொல்லுவார்கள் _ அந்தப் பெரியார் பேச்செல்லாம் எடுபடாதுங்க, காலம் மாறிப் போய் விட்டது என்று சொல்லும்பொழுது பெரியார் கருத்துகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் வெற்றி பெறுகின்றது என்பதை யோசித்துப் பார்க்கும்பொழுது அதற்கு நானே முன் உதாரணமாக நிற்கின்றேன்’’ என பல நினைவுகளை எடுத்துக் கூறி உரையாற்றினார். இறுதியாக விழாவில் சிறப்புரையாற்றி நிறைவு செய்தேன்.
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் _ செயல்வீரர் வீரபாண்டி செல்லப்பன் 21.2.1998 மாரடைப்பால் மறைவுற்றார் என்ற செயதியை அறிந்து வருந்தினோம்.
சேலம் மாநகரில், மறைந்த சேலம் விசுவும், செல்லப்பனும் இணைந்து ஆற்றிய இயக்கப் பணிகள் சாதாரணமானவையல்ல!
சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி பவள-விழா மாநாட்டில் அவர் ஆற்றிய பணி என்றென்றைக்கும் நெஞ்சில் நிலைத்து நிற்பவை!
தாசில்தாராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் பிரிவால் பெருந்துயரத்துக்கு ஆளாகி இருக்கும் அவரது குடும்பத்தினர்க்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் துணைவியாருக்கு இரங்கல்செய்தியை அனுப்பி ஆற்றுப் படுத்தினோம்.ஸீ
(நினைவுகள் நீளும்…)