சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவின் பரிந்துரையையும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
இவ்வாறு, ஆணையம், நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட உத்தரவிட்ட நிலையிலும் இட ஒதுக்கீடு இல்லாமல் 31.12.2020 அன்று நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பட்டியலை ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு 1.3.2021 அன்று ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உரிய பதிலளிக்க தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் உத்தரவிட்டனர்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றம் 19.7.2021 அன்று ஒன்றிய அரசு 2021_-22 மருத்துவப் படிப்பிலும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்திடும் முடிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஒரு வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற நிலையில் தான், மோடி அரசு ஜூலை 29, 2021-இல் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித ஆணையை பிறப்பித்தது. கூடவே, இ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கும் (அவர்கள் எதுவும் கேட்காமலேயே) 10 சதவிகிதம் அளிக்கப்படும் என்பதையும் இணைத்து வெளியிட்டனர்.
இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க. தன்னையும் இணைத்து கொண்டு வாதாடி வெற்றி பெற்றுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் ஒரு துரும்பையும் எடுத்துப் போடாத பாஜக, தற்போது தங்களால்தான் இது சாத்தியமானது என்பது கேலிக்குரியது.