மஞ்சை வசந்தன்
இந்து மத சாஸ்திரப்படியும் தை முதல் நாளே புத்தாண்டு!
ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள் என்ற தமிழரின் கணக்கீட்டை இந்து மத சாஸ்திரமே ஏற்கிறது. நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவை 60 வருடங்கள் என்பதும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது.
நாரதரும் கிருஷ்ணனும் சேர்ந்து (புணர்ந்து) 60 பிள்ளைகளைப் பெற்றனர். “பிரபவ’’ தொடங்கி 60 ஆண்டுகள்தான் அந்தப் பிள்ளைகள் என்று அறிவுக்கும், நடைமுறைக்கும் ஒவ்வாத ஒரு புராணக் கதையைப் புனைந்து, ஆணும் ஆணும் பெற்ற 60 பிள்ளைகளே 60 தமிழ் வருடங்கள் என்றனர் ஆரியப் பார்ப்பனர்கள்.
பிரபவ தொடங்கி 60 ஆண்டுகளும் சமஸ்கிருதப் பெயர் கொண்டவை. சமஸ்கிருத ஆண்டு எப்படி தமிழாண்டாகும்? ஆக, தமிழர் சிறப்பைக் கெடுக்க வந்த, மறைக்க வந்த அப்பட்டமான மோசடி கதை இது என்பதும் உறுதியாகிறது. இந்து மத சாஸ்திரமான மனுதர்மமே இதை எற்கவில்லை. அதை கீழே காண்போம்:
உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது?
தமிழர்களின் காலக் கணக்கீடு அனைத்தும் இயற்கை நிகழ்வுகளை ஒட்டி, அறிவுபூர்வமாகச் செய்யப்பட்டவை என்பதையும், அதை இந்து மத சாஸ்திரமே ஏற்கிறது என்பதையும் கீழே அறியலாம்.
ஒரு நாள் என்பது என்ன? சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.
ஒருமாதம் என்பது என்ன? ஒரு முழு நிலவு தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். நிலவை வைத்து மாதம் கணக்கிடப்பட்டதால் மாதத்திற்குத் திங்கள் என்ற பெயர் வந்தது. நிலவுக்குத் திங்கள் என்று வேறு பெயர் உண்டு என்பதால்.
அதேபோல் ஆண்டு என்பது என்ன? சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.
அதாவது, சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும். சித்திரையில் தலைஉச்சியில் இருக்கும். பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும். பின் மார்கழி இறுதியில் தென்கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு. சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு ஆண்டு கணித்தனர்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொள்ளப்பட்டது. சித்திரையில் சூரியன் தலை உச்சியில் இருக்கும். ஒரு கோடியிலிருந்துதான் கணக்குத் தொடங்குவார்களே தவிர, தலை உச்சியிலிருந்து கணக்குத் தொடங்க மாட்டார்கள். எனவே, சித்திரையில் ஆண்டுத் தொடக்கம் என்பது தப்பு. எனவே, தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பதே சரி.
ஆரியர்கள் உள்பட எந்தவொரு இனமும் இவ்வுலகில் மொழி, நாகரிகம், பண்பாடு, கலை, வணிகம், கட்டுமானம், வானியல், கணிதம், இசை என்று எதையும் அறிந்திராத நிலையில் அனைத்திலும் உயர்ந்து நின்ற இனம் தமிழினம். அதை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்ய முடியும். உறுதியும் செய்யப்பட்டுள்ளது.
அப்படி காலக் கணக்கீட்டிலும் உலகில் முன்னோடி தமிழர்களே இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் மொழி உள்பட எல்லாவற்றையும் தமிழர்களிடமிருந்தே பெற்றனர். அவர்களுக்கென்று எதுவும் இல்லை. எல்லாமும் தமிழரிடம் பெறப்பட்டவையே.
நாம் மேலே விளக்கியபடி சூரியன், நிலவை வைத்து தமிழர்கள் செய்த காலக் கணக்கீட்டை அவர்களும் ஏற்று அவர்களின் முதன்மைச் சாஸ்திரமான மனுதர்ம சாஸ்திரத்தில் எழுதிக் கொண்டனர். மனுதர்மம் முதல் அத்தியாயத்தில் 65 முதல் 67 வரையிலான ஸ்லோகங்களில் இதைக் காணலாம். சுலோகம் 65 நாள் பற்றியும், சுலோகம் 66 மாதம் பற்றியும் சுலோகம் 67 ஆண்டு பற்றியும் கூறுகிறது.
சுலோகம் 65: பகல் இரவு சேர்ந்தது நாள். அதாவது காலை முதல் இரவு விடியும் வரை ஒரு நாள் என்கிறது மனுஸ்மிருதி. தமிழர்கள் கூறிய சூரிய தோற்றம் முதல் இரவு விடியும் வரை ஒரு நாள் என்பதை மனுஸ்மிருதி ஏற்கிறது.
சுலோகம் 66: முழு நிலவு (பவுர்ணமி) தொடங்கி அமாவாசை வரை 15 நாள்கள் (கிருஷ்ண பட்சம்) அதன் பின் முழு நிலவு வரை 15 நாள்கள் (சுக்கில பட்சம்) இரண்டும் சேர்ந்து 30 நாள் ஒரு மாதம் என்கிறது மனுஸ்மிருதி.
தமிழர்கள் கூறிய ஒரு முழு நிலவு தொடங்கி மீண்டும் முழு நிலவு வரும் வரை ஒரு மாதம் என்பதை மனுஸ்மிருதி ஏற்கிறது.
சுலோகம் 67: தை மாதம் முதல் ஆனி மாதம் வரை ஆறு மாதம் உத்ராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சணாயனம். உத்ராயணம் தொடங்கி தட்சணாயணம் முடிய ஓராண்டு.
சூரியன் வடக்கு நோக்கல் தொடங்கி வடக்கே சென்று மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து தெற்கை அடையும் வரையிலான காலம் ஓராண்டு என்ற தமிழர் ஆண்டுக் கணக்கை மனுஸ்மிருதி ஏற்கிறது. இதில் முக்கியமான கருத்து – ஆண்டு தொடக்கம் தை மாதம் என்பதை மனுதர்மம் 67ஆவது ஸ்லோகம் ஏற்கிறது என்பதே.
எனவே, தை முதல் நாளே ஆண்டின் தொடக்கம் என்பது தமிழர் மரபுப்படியும், மனுதர்ம சாஸ்திரப்படியும் உறுதியாகிறது.
எனவே, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம். அதுவே தமிழர்க்கும், அவர்தம் மரபுக்கும் சரியானது.
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவதன் மூலம், சமஸ்கிருத வருடத்தைத் திணித்த ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்க்க முடியும்.
மழைத் திருநாள் போகிப் பண்டிகை ஆக்கப்பட்டது
தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.
அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்-பட்டது.
அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.
இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துக்-களை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.
பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரண-மானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.
மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.
மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளை யிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையைப் பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்ற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.
போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருள்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உள்பட எல்லா வற்றையும் தெருவிலிட்டுத் தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அவையெல்லாம் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.
ஆக, ஆரியப் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி, கேடு விளைவிக்கிறது.
சூரியத் திருநாளை மகர சங்கராந்தியாக மாற்றிய சதி:
பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும்.
காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது.
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன் படுகின்றன என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.
ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப் பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.
காணும் பொங்கலையும் கதை எழுதி திரித்தனர்!
அடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப் படுவதாகும்.
அன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்திப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.
இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறிப் புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.
கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதுவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.
ஆண்_பெண் உறுப்பு வழிபாட்டை சிவ வழிபாடாக்க லிங்க புராணம் புனைந்ததுபோல, உற்பத்திக் காரணிகளான மழை, சூரியன், மாடு, உழைப்பாளர் என்ற நான்கு காரணிகளுக்கு நன்றி கூறி, அவற்றைச் சிறப்பிக்கக் கொண்டாடப்பட்ட பகுத்தறிவின் பாற்பட்ட தமிழரின் பண்பாட்டு விழாவை, புராணக் கதைகளைக் கூறி தங்கள் பண்பாட்டுப் பண்டிகையாகத் திரித்து, தமிழர் பண்பாட்டைச் சீரழித்தனர்.
எனவே, மூடநம்பிக்கையற்ற தொன்மைத் தமிழர்களின் பகுத்தறிவுத் (நாத்திகத்) திருவிழா பொங்கல் விழா என்பதை நன்கு புரிந்துகொண்டு, அதில் மூடநம்பிக்கை, ஜாதி, மதம், நுழைவதை விலக்கி உலகுக்கு உகந்த மனிதநேய விழாவாகக் கொண்டாட வேண்டியது நமது கடமையாகும். அதுவே ஆரிய பண்பாட்டு ஊடுருவலை வெளியேற்றும் வழியுமாகும்.
குறிப்பு: திராவிடர் திருநாள் என்று அழைப்பது ஏன்? இதற்கான விளக்கத்தை சென்ற இதழின் ஆசிரியரின் தலையங்கத்தைப் படித்து அறியவும்.