ஆளுநர் பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருப்பது என்பது Ex-officio என்ற தகுதியின் மூலம்தான். அதன்படி அவரது அதிகாரம் அமைந்ததால்தான் அதற்கு முன்பு, கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த காலம்வரை, தமிழ்நாடு அரசு கருத்துப்படியே அதன் அதிகாரத்திற்குட்பட்டே துணை வேந்தர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது.
இந்த நடைமுறை மாற்றத்தினால் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள்கூட பல்கலைக் கழகங்களின் மாண்புகளைக் குலைக்கும் வகையில் நடைபெற்று அவமரியாதையும், அவற்றிற்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிலையும் உள்ளது!
ஆளுநரால் அப்படி நியமிக்கப்பட்ட பல துணைவேந்தர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளும், ஒழுங்கீனங்களும் நடைபெற்றன என்பதும் கடந்தகால மறுக்க முடியாத வரலாறு.
இந்த நடைமுறை மாற்றத்தினை – அதாவது ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், கல்வியைக் காவிமயமாக்கிட இப்படி ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துவது மிகவும் தவறான நடவடிக்கையாகும்!
கடந்த 4 ஆண்டுகளாக முன்பிருந்த ஆட்சி (அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்ட மடியில் கனம் காரணமாக) ஆளுநரின் இந்த அதீத நடவடிக்கையை எதிர்த்து மூச்சு விடக்கூட அஞ்சியது அகிலம் அறிந்த ஒன்று. இவை ஏதோ ஒரு சில நியமனங்கள்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது; கூடாது. காரணம், இரண்டு வகை ஆபத்துகள் இதன்மூலம் ஏற்படுகின்றன.
1. மாநில அரசின் உரிமை பறிக்கப்படும் கொடுமை
2. உயர்கல்வியைக் காவி மயமாக்கும் உபாயம்.
ஆகவேதான் நாடு தழுவிய எதிர்ப்பு மலைபோல் கிளம்பியுள்ளது!
கேரளாவில், மேற்கு வங்கத்தில் மட்டும் எதிர்ப்பல்ல; நமது உயர்கல்வித் துறை அமைச்சர் 6.1.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூறியபடி, இன்றைய பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோதுகூட, ஆளுநர், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் – நடைமுறை கூடாது; அது மாநில முதலமைச்சர்களின் அதிகாரம் என்ற நிலைப்பாட்டினை எடுத்ததுபற்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு – ‘’மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தை அந்தந்த மாநில அரசுகளே மேற்கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை அடுத்து வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்’’ என்ற அறிவிப்பு வரவேற்கவேண்டிய காலத்தின் கட்டாய அறிவிப்பாகும்!
‘’உறவுக்குக் கை கொடுத்தாலும் – உரிமைக்கு என்றும் குரல் கொடுக்க தி.மு.க. தயங்காது’’ என்பதைப் பலருக்குப் பிரகடனப்படுத்தும் நல்ல அறிவிப்பாகும். விரைந்து செய்க – இந்த நிறைவான செயலுக்குப் பாராட்டும், வாழ்த்தும்!
– கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்