தகவல்கள்

ஜனவரி 1-15,2022

லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும்

இந்தியாவில் ஓட்டல்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொதுமக்களின் உபயோகத்திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ஒன்றிய அமைச்சகத்தின் விதியாகும்.

நாம், அந்த விற்பனை நிலையங்களில் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் கழிவறை பராமரிப்புச் செலவுக்காக 4 பைசாவும் நம் கையிலிருந்து கொடுக்கிறோம்.

அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகுள் மேப்பில் பக்கத்திலுள்ள பெட்ரோல் விற்பனையகங்களைக் கண்டுபிடியுங்கள்.

அங்கே இலவசமாக கழிவறை உபயோகப் படுத்தும் வசதி இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப்படுத்த விடாமல் தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி உரிமையாளரிடம் உள்ளது என்று பணியாளர்கள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லை யென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த நிலையம் மற்றும் கழிப்பறையின் ஒளிப்படத்தை எடுத்துக்கொண்டு, நிலையத்தின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) ல் உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப்  (Swachhta@PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India) மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கும் இந்தச் செய்தியைப் பகிர்ந்திடவும்.


 சஞ்சீவி மலையைக் காணோம்!

குரங்கு (1): கடவுள் இராமர் இராவணருடன் சண்டையிடும்போது மூர்ச்சையாகி விட்டாராமே!

அவரைக் குணப்படுத்த மூலிகையைத் தேடிப்போன நம்ம முப்பாட்டன் அனுமாரு சாரு மூலிகையை அடையாளம் கண்டுபிடிக்க முடியாம சஞ்சீவி மலையையே தூக்கிகிட்டு வந்தாரமே?

குரங்கு (2) : அதைத்தான் தேடுறேன். அவரு இலங்கையிலே வச்சாரோ? இந்தியாவுல வச்சாரோ? கண்டுபுடிச்சிட்டா இராணுவத்துக்குப் பயன்படுமே!


திருத்தணி கோவிலுக்குள் சிசிடிவி கேமரா மூடப்பட்டதா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவில் ஒன்றின் வளாகத்திற்குள் அமைக்கப் பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை துணி கொண்டு அர்ச்சகப் பார்ப்பனர் ஒருவர் மூடுவது போன்ற காணொளி சமூக ஊடகத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இக்காணொளி திருத்தணி முருகன் கோவிலுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள கேமராவில் எடுக்கப்பட்ட காணொளி என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் டேக் செய்து, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

திருத்தணி முருகன் கோவிலில் கண்காணிப்புக் கேமிராவில் பதிவாகாமல் இருக்க துணியால் மூடுகின்ற காட்சிப் பதிவு (5.11.2021) மாலை 7:38 மணி) சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு பரவி வருகிறது.

ஏன் மூடுகிறார்? அர்ச்சகப் பார்ப்பனர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை மறைக்கத்தானே?


 உயரமான பெண்ணும் ஆணும்!

உலகில் பெண்களில் அதிக உயரமானவர் என்ற கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கி யிருக்கிறார் ரூமேசா ஜெல்ஜி. துருக்கியைச் சேர்ந்த இப்பெண்ணின் உயரம் 7 அடி, 0.07 அங்குலம்.

ஆறு வருடங்களுக்கு முன்பு தனது 18வது வயதில் உலகிலேயே உயரமான பதின் பருவத்துப் பெண் என்ற கின்னஸ் சாதனையையும் தன்வசம் வைத்திருந்தார் ரூமேசா.

வீவர் சிண்ட்ரோம் என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ரூமேசா, சக்கர நாற்காலியின் மூலமாக வலம் வருகிறார். இந்தக் குறைபாடே அவரது உயரத்துக்குக் காரணம்.

ஆண்கள் பிரிவில் சுல்தான் கோஸன் என்பவர் உலகிலேயே உயரமான வாழும் ஆண் என்ற கின்னஸ் பட்டத்தை தட்டியிருக்கிறார். இவரது உயரம் 8 அடி, 2.8 அங்குலம். இவரும் துருக்கியைச் சேர்ந்தவர் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது.

கின்னஸ் வரலாற்றில் உலகிலேயே உயரமான ஆண், பெண் பட்டத்தை ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் பெறுவது இது இரண்டாம் முறை. இதற்கு முன்பு சீனாவைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் இச்சாதனையை நிகழ்த்தி யிருக்கிறார்கள்.


 ஒரு வரிச் செய்திகள்

ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

ஒரு சிசுவின் கைகளில் ரேகைகள் 3ஆம் மாதத்திலிருந்து உருவாகின்றன.

60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளில் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

¤ ¤ ¤

சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவை சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவிகிதமாகும்.


 பாசிசத்தின் ஆபத்து…

“பாசிசத்தின் முறைகளையும் கொள்கைகளையும் நினைத்துப் பார்க்கும்போது அவை மனிதநேயத்திற்கு இடமில்லாத வகையிலும், நினைத்துப் பார்க்கவே அவலட்சணமாகவும் தோற்றமளிக்கின்றன.

கருத்துச் சுதந்திரத்தையும், எழுத்துச் சுதந்திரத்தையும் அடக்கி ஆள நினைக்கும் அமைப்பை எதிர்ப்பவன் நான். மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படும் முறைகளைப் பார்க்கிறேன் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படத் தூண்டும் போக்குகளையும் பார்க்கிறேன். இரத்தம் தோய்ந்த பாதையில் செல்ல இத்தாலி ஆசைப்படுகிறது. மறைமுகமாகக் குற்றங்களைச் செய்து மூடி மறைக்கிறது.

அது மட்டுமல்லாமல், தேசப்பற்றின் பெயரால் உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் மத அடிப்படை யிலான மத வெறியைத் தூண்டி, தேசியத்தை வளர்ப்பதும், பிற நாடுகளை ஆக்கிரமிப்பதென்ற மனப்பான்மையை மக்களிடையே வளர்ப்பதும் கேவலமான ஏகாதிபத்திய மனம் கொண்டவர் களின் கீழான எண்ணங்களாகும். இதற்கு நான் விரோதி. இப்படி சுயதேசியம் பேசும் மனப்பாங்கு மேற்கத்திய நாடுகளில் நிறைய உள்ளது. இதனால் உலகம் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளது. இவர்கள் மனிதகுல அழிவை விரும்புகிறார்கள். தங்கள் தேசியத்தைப் பேசி சவக்குழிகளின் மீது தங்கள் சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்க விழைகிறார்கள்.’’

– மகாகவி ரவீந்திரநாத் தாகூர்

(1926 ஆகஸ்ட் 6ஆம் தேதிய “மான்செஸ்டர் கார்டியன்’’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் எழுதியது)            (நன்றி: ஜூனியர் விகடன்)


‘திராவிடன்’ என்று சொல்லவேண்டிய கட்டாயம் என்ன?

கேள்வி: எதற்காக தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் வைக்க வேண்டும்? ‘தமிழர்’ என்னும் பெயருடன் இருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.

நான் அவர்களுக்குச் சொன்ன விளக்கம் இதுதான்.

1. பார்ப்பனரை விலக்காத பெயர் ‘தமிழன்’, பார்ப்பனரை விலக்கிய பெயர் ‘திராவிடன்’ என்பதுதான்!

2. தமிழர் என்று கூறிக் கொள்ளுவதில் நான் பெருமைப்படுகிறேன். திராவிடர் என்பதால் நான் உரிமை பெறுகிறேன்.

3. உண்மையாகவே நாம், ‘தமிழர்’ என்று சொல்லும் பொழுது நமக்குக் கிடைக்காத உரிமையும், பெருமையும் ‘திராவிடர்’ என்று சொல்லுகிறபொழுது நமக்குக் கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

4. நான் திராவிடன் என்று சொல்கிறபொழுது நான் ஆரியத்தோடு ஒட்டாது, இன்னொரு இனத்தைச் சேர்ந்தவன் என்று பிரித்துக் காட்டுகிற அந்த ஆற்றல் தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழி பேசுகிற வேறு இனத்தவராகவும் இருக்கலாம்.

இங்கிலாந்து நாட்டுக்காரன்கூட இங்கு வந்து தமிழ் பேசலாம். டாக்டர் கால்டுவெல்கூட தமிழில் ஓரளவு எழுதக் கூடியவர். வீரமா முனிவர் என்ற மற்றொரு பாதிரியார் கான்ஸ்டன்டைன் பெஸ்கி அவர்கள் தமிழிலேயே நூல் இயற்றியிருக்கிறார். டாக்டர் ஜி.யு.போப் திருவாசகத்தை மொழி பெயர்த்தவர்; சைவ சித்தாந்தத்தைப் பற்றிப் பாராட்டிச் சொன்னவர்.

அவர் எழுதுகிறபொழுது சொல்கிறார்.

“தமிழ்நாட்டில் அறநூல்களைத், திருக்குறளையும், நாலடியாரையும் போன்ற நூல்களைத் தமிழர்கள் பெற்றிருக்கிற பொழுது – ஓர் உயர்ந்த அறநெறிக் கருத்துகளைப் பெற்றிருக்கிறபொழுது – நீதி நெறிக் கருத்துகளைப் பெற்றிருக்கிறபொழுது – அவர்கள் தங்களை வேறு எந்த மொழி பேசுகிறவர்களையும்விடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணித் தலைகுனியத் தேவையில்லை; யாருக்கும் தலைகுனியத் தேவையில்லை தமிழர்” என்று ஜி.யு.போப் அவர்கள் சொன்னார்கள்.

எனவே அந்த அடிப்படையில் திராவிடன் என்று சொல்கிறபொழுது, நம்முடைய தகுதி உயர்கிறது – நம்மை வீழ்த்துவதற்கான முயற்சிகள் உடைபடுகின்றன!

அந்த வகையிலே, தந்தைபெரியார் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ‘திராவிடன்’ என்று சொல்வதற்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தினார்.’’

– பேராசிரியர் க.அன்பழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *