நூல்: ‘சொல்லாய்வுகள்’
ஆசிரியர்: குடந்தய் வய்.மு.கும்பலிங்கன்
பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108
தொலைபேசி: 2595428
‘கொள்கை வேள்’ குடந்தை வை.மு.கும்பலிங்கன் அவர்கள் எழுத்தாளர் _ கவிஞர் உலகிற்கு நன்கு அறிமுகமானவர். குறிப்பாக ‘விடுதலை’ நாளிதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் மொழிகுறித்த ஆய்வுகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளார். அந்த வகையில் இவர்தம் ‘சொல்லாய்வுகள்’ எனும் நூல் தற்போது குறிப்பிடத்தக்கவாறு அமையப் பெற்றமை பாராட்டுக்குரியது.
ஆய்வறிஞர்கள் பற்பலர் தத்தம் சிந்தனை _ கருத்துக் கண்ணோட்டத்துடன் சொற்களை ஆய்வு செய்து உலகுக்கு அளித்துள்ளனர். அவ்வழியில் கும்பலிங்கன் அவர்களும் இந்நூலின் வாயிலாக தமிழில் வழக்கிலுள்ள பல சொற்களை ஆய்வு செய்து, அவை உருவான விதம் _ ஒலிக்கும் தன்மை ஆகியவற்றை மிக நுட்பமாக, எளிதில் யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எவரும் இதுகாறும் புகாத புதிய கோணத்தில் விளக்கமளித்துக் கூறியிருப்பது எழுத்துலகில் தமிழ் ஆர்வலர்களுக்கு மிக்க பயனுடையதாக அமையும் என்பதில் அய்யமில்லை.
எடுத்துக்காட்டுகளாக:
துவக்கம் _ முதலில் துவங்குதல். தொடக்கம் _ துவக்கியது தொடர்தல் என்றும், 300 என்பதை, முன்னூறு எனக் குறிப்பது தவறு; முந்நூறு எனக் குறிப்பிட வேண்டும் என்றும்; ‘என்’ உயர்திணைக்கும், ‘எனது’ அஃறிணைக்கும் உரியன என்றும், கிருஷ்ணன் _ என்னும் பதத்திற்கு கிருட்டினன் என்பதே சரியென்றும், கடைப்பிடி _ கொள்கை கடைப்பிடித்தல் _ கொள்கைப்படி ஒழுகுதல் என்றும், கடைபிடி _ கடை ஒன்றை வாடகைக்குப் பிடித்தல் என்றும், இகம் _ ஆன்மிகம், நாகரிகம், இசம் _ ஆகிய சொற்களுக்கான சரியான விளக்கங்களும் கூறியதுடன் ஒற்றெழுத்துகளின் சிறப்புபற்றி உம்மைத்தொகை, வினைத்தொகை வேறுபாடுகளை விளக்கியும், இன்னபிற நூற்றுக்கணக்கான சொற்களை ஆய்வு செய்தும் ‘சொல் ஆய்வுச் செம்மல்’ என்பதை மெய்ப்பித்துள்ளார் _ இந்நூல் மூலமாக.
இந்நூல் எழுத்தாளர்களுக்கும், மாணவர்-களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மற்றெல்லார்க்குமே பயனுள்ள கையோடாகத் திகழுமாயின் தமிழ் செம்மையுறும் _ வளமையுறும் _ பெருமையுறும்.
– பெரு.இளங்கோ
நூல்: பொறுத்தது போதும் (காப்பியம்)
ஆசிரியர்: கவிஞர் கோ.கலைவேந்தன்
பதிப்பகம்: தேங்கனி பதிப்பகம், 17, புதுநகர், குத்தாலம் – 609801, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
தொலைபேசி: 04364 – 234208
பெரியாரின் சீரிய சிந்தைப் பேரொளி வாரிதிக் காப்பியம் “பொறுத்தது போதும்!’’
ஆண்ட பழந்தமிழ் அழகெல்லாம் ஒளிர ஈன்றார் காப்பியக் கவிஞர் கலைவேந்தர்.
கற்பனைக் கதைவளம், கற்கண்டாய் இனிக்கும் அருவியின் தூய தமிழ்நடை. கொள்கைப் போர்க் கருவி பலவற்றின் புதையலே என்போம்.
‘ஆரியப் போரிலே வெஞ்சமர் புரிந்த வீரரைப் பஞ்சமர் என்றே ஒதுக்கி வைத்தனர் இந்து மத ஜாதி வெறியர்கள். தீண்டத் தகாதவர் என ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டிப் பேரொளியாம் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்தார் பெரியார்.
அவ்விருவரையும் எழிலோடு எரிய விடுகிறார் கவிஞர் கலைவேந்தன்.
மதமாற்றம் ஏன் வேண்டும்? – மக்களுக்கு மனமாற்றம் தான்வேண்டும் மதம்பிடித்த யானைகளால் – மக்களினால் பேரழிவு தானே கண்டோம். (பக்கம் 157)
தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தோற்றுவித்த தமிழ் இயக்கம் புத்துயிர் பெறும் வண்ணம் கதைப் பாத்திரங்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் சூட்டி உள்ளார் கலைவேந்தர். ஒவ்வொரு திராவிட இயக்கத்தவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் இந்த செந்தமிழ்க் காப்பியம்.
– முனைவர் மலையமான்,
4, இரங்கா சாலை, சென்னை – 18
74182 97544