கே1: இந்துவுக்கும், இந்துத்துவாவிற்கும் உள்ள வேறுபாடு குறித்து இராகுல்காந்தி கூறியது பற்றி தங்கள் கருத்து என்ன?
– அ.மணிகண்டன், திருவண்ணாமலை
ப1: இந்து மதத்தவரின் வாக்கு வங்கியைக் குறிவைத்து பா.ஜ.க. விரிக்கும் அந்த வலையில் வீழக்கூடாது என்றும், நெறி வேறு; (மத) வெறி வேறு என்றும் _ பிரித்துக் கூறுகிறார் ராகுல் தன் பேச்சில். அங்குள்ள வடபுல அரசியல் சூழலில் இது தேவையான விளக்கமே!
பிள்ளையார் சதுர்த்தி என்ற மூடநம்பிக்கை விழாவின்போது, ஒரு 5 ரூபாய்க்கு களிமண் பிள்ளையார் உருவ பொம்மை வாங்கி வந்து கும்பிட்டுவிட்டு, 2 நாளில் கிணற்றிலோ குளத்திலோ போடுவது ஹிந்துமத நம்பிக்கை! பழக்கம். அதை ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க., அரசியலுக்கு ஏவுகணையாக்கி 20 அடி பிள்ளையார் தூக்கி, வேலையில்லாத பார்ப்பனர்களுக்கு பணமும் தந்து அதே பிள்ளையார் சிலையை கடலில் கரைக்க ஊர்வலம் நடத்தி, மசூதிப் பக்கம் சென்று தப்பான வீண் மதக் கலவரத்தை உருவாக்குவது -_ சிறுபான்மை சமூக வெறுப்பைப் பரப்புவதுதான் ‘ஹிந்துத்துவா’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதைத்தான் அரசியல் மொழியில் ராகுல் விளக்கியுள்ளார்.
கே2: நீலகிரி படுகர் இனமக்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு 6 வயது சிறுவர்களை பூசாரியாகக் கட்டாயப்படுத்துவதைச் சட்டப்படி தடுக்க முடியாதா?
– ச.குமார், சேலம்
ப2: நிச்சயம் தடுக்க சட்டத்தில் வழியுண்டு. அரசு செய்ய முன்வரவேண்டும்.
கே3: இயக்கத்தின் எதிர்காலத் திட்டங்களாக தாங்கள் அறிவித்துள்ள ‘அய்ம்பெரும்’ அறிவிப்புகளோடு, தமிழ்நாட்டின் வளமைக்கான ‘சேதுக்கால்வாய்’ திட்டத்தையும் கழகம் தம் போராட்டக் களத்தில் இணைத்துக் கொள்ளுமா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப3: நல்ல யோசனை. நிச்சயம் செய்வோம்! பிரச்சாரத்தைத் தொடருவோம்!!
கே4: தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராக இருந்த தங்களிடம் அய்யா அவர்கள் எப்போதாவது கோபப்பட்டது உண்டா?
– கு.பழநி, புதுவண்ணை
ப4: பெரிதும் இல்லை; கூட்டுப் பணிக்காக சிற்சில நேரங்களில் அய்யாவின் கோபம் இருக்கும். அதில் எனக்கும் பங்கு உண்டே! ஆனால், தனிப்பட்ட முறையில் என் மீது சினந்து கோபப்பட்டது இல்லை!
கே5: தேர்தல் சட்டத்திருத்த மசோதாவில் மனைவி என்பதற்கு இணையர் என்றும் குறிப்பிடலாம் என்று கூறப்பட்டிருப்பதைப் பற்றியும், அச்சட்டத் திருத்தத்தின் முதன்மைப் பாதிப்பு என்ன என்பது பற்றியும் தங்கள் கருத்து என்ன?
– மகிழ், சைதை
ப5: அது முழுமையான சட்டமாகி, சரியான வரைவு கிடைக்கட்டும். பிறகு விலாவாரியாக விளக்கலாம்!
கே6: ஆர்.எஸ்.எஸின் அஜண்டாப்படி அதன் அடிமைச் சேவகர்கள் ஆத்திரமூட்டும் வகையில் தி.மு.க.வினரை, அதன் தலைமையைக் கேவலப்படுத்தும் நிலையில், அரசும், தி.மு.க.வினரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
– மா.காமாட்சி, திருத்தணி
ப6: அலட்சியப்படுத்த வேண்டும். அன்றாடம் பொழியும் முதல்வரின் கருணை மழை, செயல்வேக வீச்சு முன் அவை, தானே பிசுபிசுத்துப் போவது உறுதி. அலட்சியப்படுத்துவோம். தனி முக்கியத்துவம் ஏதும் ஆட்சி தரவேண்டாம். கட்சியினர் பதில் அளிக்கட்டும். கட்சி வாளும் கேடயமுமாகச் சுழல வேண்டும்.
கே7: தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய நிதிப் பங்கீடு மற்றும் நிவாரணத் தொகைகளைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தீர்வு காண முடியுமா?
– இரா.சுப்பிரமணி, மதுராந்தகம்
ப7: மக்கள் மன்றத்தில் தீர்வு காணுவதே சிறந்த முறை.
கே8: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே சொல்லியும் பா.ஜ.க. அரசு செயல்படுத்த மறுக்கும் நிலையில் தீர்வுதான் என்ன?
– ஆ.சிவசாமி, வேலூர்
ப8: தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம்தான் ஜனநாயகத்தில் ஒரே வழி!
கே9: ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் மத அடிப்படையில் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதா? எல்லோருக்கும் பொது விதி என்பதுதானே சரியாக இருக்க முடியும்?
– சே.நீலாம்பிகை, வியாசர்பாடி
ப9: மத அடிப்படையில் பார்க்கக் கூடாது. கருணை வழங்குவதில் ஓரவஞ்சனை இருக்கலாமா? கூடவே கூடாது!