டாக்டர் T.M. நாயர் (தரவாட் மாதவன் நாயர்) அவர்கள் இங்கிலாந்தில் காது, மூக்கு, தொண்டை (E.N.T) துறையில் மிகப் பெரிய மருத்துவப் படிப்பு முடித்து திரும்பிய அறிஞர்.
நீதிக்கட்சி என்று மக்களால் அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (S.I.L.F) சார்பில் துவக்கப்பட்ட ‘Justice’ ஆங்கில நாளேட்டிற்கு அதன் முதல் ஆசிரியப் பொறுப்பை ஏற்ற பெருமகனார். (26.2.1917)
டாக்டர் நாயர், துவக்கத்தில் காங்கிரஸ்காரராகவே, சர். பிட்டி தியாகராயர் போன்றே இருந்தவர்.
டாக்டர் சி. நடேசனார் திராவிடர் சங்கத்தை 1912 முதலே உருவாக்கி நடத்திய நிலையில், இம்மூவரும் முப்பெரும் தலைவர்களாகி முன்னெடுத்துச் சென்றனர் – திராவிடர் இயக்கத்தை!
டாக்டர் டி.எம். நாயர், 1918 ஜூனில் லண்டன் போய்ச் சேர்ந்தபோது, அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது, மருத்துவம் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும் என்று வாய்ப்பூட்டை இங்கிலாந்து அரசு போட்டது. திருமதி அன்னிபெசன்ட், திலகர், அவரது கூட்டமே இதற்கு மூல காரணம். பிறகு இங்கு பணியாற்றிச் சென்று நாடாளுமன்றத்தில் இருந்த லார்ட் சைடன்ஹாம், லார்ட் கார்மைக்கேல் போன்றவர்கள் வாதாடி, நாயருக்குப் போடப்பட்ட வாய்ப்பூட்டை உடைத்தனர்.
பிறகு நாயர் தெளிவாக வாதிட்டார் – பிரிட்டிஷ் அரசியல்வாதிகளிடையே இரு அவைகளைச் சேர்ந்து கொண்ட கூட்டத்தில் பேசினார் (2.8.1918) உடல் நிலை மிகவும் கெட்டு, லண்டனில் தமது 51ஆம் வயதில், 1919 ஜூலை 17-இல் அங்கேயே டாக்டர் நாயர் மறைந்து, அடக்கம் செய்யப்பட்டார்! அவரை திராவிட லெனின் என்று வர்ணித்தார் தந்தை பெரியார் அவர்கள்! காலம் என்ற மணல்மேட்டில் அந்தப் பெருமான்களின் காலடிச் சுவடுகளே – நமக்குச் செல்லவேண்டிய பாதைக்கு ஒளியூட்டும் கலங்கரை வெளிச்சங்களாகும்