இன்றைய கரோனா கால சூழலில் வாழ்க்கை முறையில் நமது உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகிறது. நாள்தோறும் புதிய வகை கரோனா வைரஸ் மாற்றம் அடைந்து ‘ஒமைக்ரான்’ என்னும் வைரஸ் தொற்-று பரவும் என உலக சுகாதாரத் துறையும் எச்சரித்துள்ளது.
¨ சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருப்பவர்-களுக்கு சுவாச நோய்த் தொற்றுகள் 25% குறைவாகவே ஏற்படுகின்றன. வாக்கிங், ஜாகிங், உடற்பயிற்சி என தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வியர்வை சிந்துவது நல்லது. உடல் இப்படி இயங்கும்போது ரத்த வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
¨ காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை தவிர்க்கக் கூடாது. மதிய உணவு ஆரோக்கியமானதாக இருப்பது அவசியம். குறிப்பாக உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறைச்சி, முட்டை, பருப்பு போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும். புரதம் இல்லாத உணவைச் சாப்பிடுகிறவர்களுக்கு, ஜலதோசம், சளி போன்ற பிரச்னை ஏற்படும்.
¨ மாலையில் காபியோ, டீயோ குடிப்பதையும் கூடவே நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். கிரீன் டீ குடிப்பது இதமும், நலமும் தரும். கிரீன் டீ போன்ற தேயிலைகளில் காணப்படும் ஈ.ஜி.சி.ஜி என்ற வேதிப் பொருள் வைரஸ்கள் உடலில் வளர்வதைத் தடுக்கிறது.
¨ மழை மற்றும் பனிக்காலத்தில் ஒரே கைக்குட்டையை நீண்ட நேரம் பயன்-படுத்தக் கூடாது. சாப்பிட்டு விட்டு கை துடைத்து அதே ஈரத்தோடு வைக்கும் கைக்குட்டை, நோய்க் கிருமிகளையும் சேர்த்தே வைத்திருக்கும். திரும்பவும் அதை எடுத்து முகம் துடைக்கும்போது சுலபமாக நோய் தொற்றிக் கொள்ளும். ஜலதோஷ வைரஸ் தாக்கிய மனிதர்களில் மூன்றில் இரண்டு பேருக்கு அந்த நோய் அறிகுறியே தெரியாது. அதனால் உங்களைச் சுற்றியுள்ளவர்களில் யாரிடமிருந்து வைரஸ் பரவும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது. எனவே, குளிர்காலத்தில் கர்சீப்பை அடிக்கடி மாற்றவும். துவைக்கும்போது கிருமி நாசினியில் ஊற வைத்து உலர்த்துவது நோய்களிலிருந்து காக்கும்.