புதுதில்லியில் சமூகநீதி மய்யக் கூட்டம்
கி.வீரமணி
மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.மருதப்பன் 27.9.1997 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன்.
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த அவர், பள்ளி ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கினார். பின்னர் ‘நவ இந்தியா’ என்னும் தமிழ் நாளேட்டின் செய்தியாளராகப் பொறுப்-பேற்றார். தொடக்கக் காலத்தில் திரைப்-படத்துறைச் செய்தியாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் ‘மாலை முரசு’, ‘அலை ஓசை’ ஆகிய தமிழ் நாளிதழ்களில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்றினார். பத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.
‘விடுதலை’ நாளிதழில் பகுதி நேரச் செய்தியாளராகப் பணியாற்றினார்.
சட்டப் பேரவை நடைபெறும் நாள்களில் வானொலிக்கும், தொலைக்காட்சிக்கும் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியை நீண்டகாலமாகச் செய்து வந்தார். வானொலியில் ‘மாவட்டச் செய்தி மடல்’ எழுதி வழங்கிவந்தார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை மறைந்த பத்திரிகையாளர் மருதப்பன் இல்லத்திற்கு கழகத் தோழர்களுடன் சென்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.
அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராக சீதாராம் கேசரி அவர்கள் பொறுப்பேற்ற பின் சென்னைக்கு 10.10.1997 அன்று வருகை புரிந்தார். விமான நிலையத்தில் அவர் தொண்டர்களுக்கிடையே உரையாற்று-கையில், “நான் இன்றைக்குத் தந்தை பெரியார் பூமிக்கு (Land of Periyar) வந்திருக்கின்றேன். முதற்கண் எனது மரியாதை கலந்த வீர வணக்கத்தைத் தந்தை பெரியார் அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் திகழ்ந்த காமராசர் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நான், தந்தை பெரியார் அவர்கள் வகுத்துத் தந்த கொள்கைப் பாதையில் செல்ல வேண்டும் என்ற கடமை உணர்வில் செயல்படுவேன்’’ என உணர்வுமிக்க உரையை நிகழ்த்தினார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் அன்றைய உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சால்வை அணிவித்து கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். வீ.அன்புராஜ் அவர்கள் மலர்க் கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்-படுத்தினார். அதன் பின் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து நான் தொலைபேசி மூலம் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். நேரில் வரவேற்க இயலாத நிலைக்கு வருந்துவதாகவும் கூறினேன். என் உடல் நலத்தை விசாரித்ததோடு, சமூகநீதிக்குக் குரல் கொடுக்கும் தாங்கள் நல்ல உடல்நலத்-தோடு பல்லாண்டு வாழ வேண்டுமென்ற விழைவையும் தெரிவித்துக் கொண்டு நன்றி கூறினார். தந்தை பெரியார் மீது அவர் கொண்டிருந்த பற்று கழகத்தினரை மிகவும் உற்சாகப்படுத்தியது.
புழல் திராவிடர் கழக முன்னாள் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டரும், கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்றவருமான கமலநாதன் அவர்கள் 10.10.1997 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து வருந்தினோம்.
அவரது மகன் இரணியன் கழக இளைஞரணித் தோழர் ஆவார். குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அவரது இறுதி ஊர்வலத்தில் கழகத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்தில், நீண்ட காலமாக திராவிடர் கழக செயல் வீரர்களில் ஒருவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பொதுக் குழு உறுப்பினரும், முகுந்தன் அச்சக உரிமை-யாளருமான தோழர் மானமிகு ரகுபதி அவர்கள் 12.10.1997 அன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் சொல்லொணாத் துன்பமும், துயரமும் அடைந்தேன். அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.
அவருக்கு நீண்ட நாளாக இருதய வலி உண்டு என்பதால், நான் அவரைப் பார்க்கும்-பொழுதெல்லாம் மிகவும் கவலையோடு நலம் விசாரிப்பேன். அதிகமாக வேலைகளில் ஈடுபடாமல் உடல் நலத்தில் விழிப்பாக இருங்கள் என்றே கூறுவேன்; அவரோ தன்னைவிட அதிகமாக என்னைப் பற்றியே கவலைப்படும் சீரிய பொதுநலத் தொண்டர்.
எவரிடத்திலும் அதிர்ந்து பேசமாட்டார். மிகவும் தன்னடக்கத்தோடு பழகும் அரிய சுயமரியாதைக் கொள்கை வீரர். எந்த நிலையிலும் சிறிதும் சபலத்திற்கு ஆளாகாத இலட்சிய வீரர்.
அவரது மறைவினால் மிகவும் இழப்புக்கு ஆளாகியுள்ள அவரது துணைவியார் அன்பு சகோதரியார் அவர்களுக்கும், குடும்பத்தவர்-களுக்கும், அவரது நெருங்கிய கழக நண்பர்களுக்கும் இயக்கச் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய அர்த்தமற்ற இந்துமதம் நூலின் முதல் பதிப்பை தந்தை பெரியாரின் நூற்றாண்டு நினைவு விழாவில் வெளியீடும் வகையில் அச்சிட்டு தந்து, இயக்கப் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருந்தவர். இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைமைக் கழகத்தின் சார்பில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த து.கோவிந்தசாமி_ கோமளா ஆகியோரின் செல்வனும், திராவிடர் கழக கோட்ட அமைப்புச் செயலாளர் கோ.தங்கமணி அவர்களுடைய சகோதரருமான கோ.சுந்தர-மூர்த்திக்கும், சென்னை கோட்டூர் ஆர்.கோவிந்தசாமி _ காந்தா ஆகியோரின் செல்வி கோ.பிரேமாவதிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தவிழா 20.10.1997 அன்று கொடுங்கையூர் கே.எஸ்.திருமண மாளிகையில் தலைமையேற்று மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில் சுயமரியாதைத் திருமணத்தின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினேன்.
இந்நிகழ்ச்சியில் பெருமளவில் கழக மகளிர் கலந்துகொண்டனர். மகளிரணியினரின் அமைப்பினை ஒவ்வொரு பகுதியிலும் மேலும் வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்-கொண்டனர். கலந்துகொண்ட மகளிரணிப் பொறுப்பாளர்கள் அன்புடன் உடல்நலன் பற்றியும் விசாரித்தனர். மணவிழாவுக்குச் சென்ற வழியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை ஒட்டி கடவுள் மறுப்புக் கல்வெட்டினை கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் திறந்து வைத்து உரையாற்றினேன்.
சென்னைக்கு வந்திருந்த மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் திருமதி. காந்தி சிங் அவர்கள் 21.10.1997 அன்று பெரியார் திடலுக்கு வந்திருந்தார். அவரது திடீர் வருகை பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தந்தை பெரியார் அருங்காட்சியத்தைச் சுற்றிப்பார்த்து பெரிதும் வியந்தார். அவருக்கு கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் மற்றும் தந்தை பெரியாரின் புகைப்படம் வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தோம். சிறிது நேரம் அன்றைய அரசியல் சூழல் குறித்தும் அவரிடம் பேசினேன். இந்தச் சந்திப்பின்போது கழகப் பொறுப்பாளர்கள் கோ.சாமிதுரை, கவிஞர் கலி.பூங்குன்றன், தேசிய ஜனதா தளத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சுயமரியாதை வீரர் குறிஞ்சிப்பாடி கு.த.பெ.பழனியப்பன் (வழக்குரைஞர் இளம்வழுதியின் சின்ன மாமனார்) முடிவெய்தினார் என்னும் செய்தியை 23.10.1997 அன்று கேட்டு மிகவும் வருந்தினோம். பிறர்நலனே தன் நலன் என்று வாழ்ந்தவரும், கருஞ்சட்டைப் படை மாநாடு நடத்தியவரும், தி.க., தி.மு.க., வளர்ச்சிக்கு குறிஞ்சிப்பாடி பகுதியில் வித்திட்டவரும், சுதந்திரப் போராட்டம் மற்றும் மொழிப் போர் தியாகியுமான அவரது மறைவு கழகத்திற்கு ஈடு இணையற்ற இழப்பாகும். அவரது உடலுக்கு கழகத்தின் சார்பில் துரை.சந்திரசேகரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
நாகை பெரியார் பெருந்தொண்டரும், திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவருமான மானமிகு தோழர் சண்முகம் அவர்கள் 30.10.1997 அன்று மறைந்தார் என்ற செய்த நமக்குப் பேரிடி போன்ற துன்பச் செய்தியாக வந்தடைந்தது.
கட்டுப்பாடு காக்கும் கழகத் தோழர்களில் அவர் எடுத்துக்காட்டான கொள்கை வீரர்! தனது குடும்பத்து உறுப்பினர்கள் பெரியார் கொள்கை வயப்பட்டவர்களாக வேண்டும் என்பதில் மிகவும் குறியாய் இருந்தவர்.
கழகப் பணிகளுக்குத் தனியான கவனஞ்-செலுத்தக் கூடிய கருஞ்சிறுத்தை அவர்!
அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, நமது இயக்கத்திற்கு -_ தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகப் பெரியதோர் ஈடு செய்ய இயலாத இழப்பு ஆகும்!
அவருக்கு நமது வீர வணக்கம் என இரங்கல் அறிக்கை வெளியிட்டு ஆற்றுப்படுத்தினோம்.
பெரியார் திடலுக்கு 1.11.1997 அன்று மேற்கு வங்க கூட்டுறவுத் துறை அமைச்சர் பக்தி பூஷண் மண்டல் அவர்கள் வருகை புரிந்தார். அவரை கழகத்தின் சார்பில் வரவேற்று, தந்தை பெரியாரின் சமூகப் பணிகளை பற்றி எடுத்துக் கூறினேன். பெரியார் திடலில் உள்ள நிறுவனங்களை எல்லாம் சுற்றிப் பார்த்து மனநிறைவான பாராட்டுகளைத் தெரிவித்தார். அவருக்கு சால்வை போர்த்தி, தந்தை பெரியாரின் நூல்களை வழங்கி சிறப்புச் செய்தோம்.
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 3.11.1997 அன்று நிறுவனர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜேம்ஸ் ஜெ.ஷார்ப், இணை முதன்மையர், மெமோரியல் பல்கலைக்-கழகம் கனடா, பேராசிரியர் டோரதி சி.ஷார்ப், மெமோரியல் பல்கலைக்கழகம் கனடா ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ _ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்-படுத்தினார். சிறப்பு அழைப்பாளர்களுக்கு கழகத்தின் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
மலேசிய திராவிடர் கழகத்தின் தூண்களில் ஒருவராகவும், பினாங்கு _ பட்டர்வொர்த் பகுதியில் முதுபெரும் பெரியார் பெருந்-தொண்டராகவும், லட்சியத்தில் சிறிதளவும் பின்வாங்காத கொள்கை வீரராகவும் வாழ்ந்த, ‘கழக முரசு’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவருமான தோழர் அ.மு.துரைசிங்கம் அவர்கள் 5.11.1997அன்று மறைவுற்றார் என்ற செய்தி கழகத்திற்கு மிகப் பெரும் துன்பத்தை அளித்த சோகச் செய்தியாக இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியா சென்று வரும்போதெல்லாம் அந்தப் பகுதியில் அவரைச் சந்தித்து அளவளாவும் அரிய வாய்ப்புகள் பலவற்றை நாம் பெற்று மகிழ்ந்ததுண்டு.
கொள்கையில் மிக உறுதியுடன் இறுதிவரை வாழ்ந்தவர். சில மாதங்களுக்கு முன்புகூட நமக்கு அவர் ஓர் உணர்ச்சி பொங்கும் மடல் தீட்டியிருந்தார்.
மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் மறைந்தும் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள “திருச்சுடர்’’ கே.ஆர்.ராமசாமி அவர்களைப் போலவே, அப்பகுதியில் கழகத்தினை வளர்த்த சீரிய செம்மல் அவர்! கருப்பு ஆடையுடன் நம்மை வரவேற்று தம் இல்லத்தில் அவர் உபசரிப்பார். அவரது குடும்பம் ஒரு கொள்கைக் குடும்பம்! அவரது இல்லமே கழக நிலையமாகவே காட்சி அளிப்பது இன்றும் நம் கண் முன்னே காட்சியாய், அவர் கொண்ட கொள்கைக்குச் சாட்சியாய் நிற்கிறது! அந்தோ, மலேசிய கழகத் தூண்கள் இப்படியா சாய்வது!
அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; மலேசிய திராவிடர் கழகத்திற்கு, தமிழக திராவிடர் கழகத்திற்கு, சுயமரியாதை உலகத்திற்கே பெரிய இழப்பு ஆகும்!
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மலேசிய திராவிடர் கழகத்தினர் _ குறிப்பாக அதன் தலைவர் மானமிகு ரெ.சு.முத்தய்யா அவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
அதே நாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் ஏ.கே.அப்துஸ் சமது அவர்களின் துணைவியார் மறைவுச் செய்தியை அறிந்து கழகப் பொறுப்பாளர்களுடன் நேரில் சென்று ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தோம்.
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவரான அறிவன் 8.11.1997 அன்று மறைந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் நேரடியாகக் கலந்துகொண்டேன். மறைந்த அறிவனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினேன். மகனை இழந்த தாயாருக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன். அப்போது உரையாற்றுகையில் அறிவனின் தாயாரைத் தலைமைக் கழகம், நன்னிலம் தோழர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாதுகாக்கும் என அறிவித்தேன். இறுதி ஊர்வலம் எந்தவிதமான மூடப்பழக்க வழக்கங்களும் இல்லாமல் பகுத்தறிவு வழியில் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்களும், கழகப் பொறுப்பாளர்களும், அனைத்துக் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை, சதிப் பின்னணி பற்றி ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயின் கமிஷன் முன் 13.11.1997 அன்று ஆஜராகி சாட்சியம் அளித்தேன். முன்னதாக நேரடியாக அழைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த விசாரணையின்போது முற்பகல் 11:00 மணிக்குத் தொடங்கிய இரகசிய (In Camera)விசாரணை பிற்பகல் 1:40 மணிக்கு முடிவுற்றது. நீதிபதி ஜெயின் கேட்ட கேள்விகளுக்கும், குறுக்கு விசாரணை செய்த மத்திய அரசு வழக்குரைஞர்கள், கமிஷன் வழக்குரைஞர், காங்கிரஸ் வழக்குரைஞர் ஆகியோரது கேள்விகளுக்கும் உரிய பதில்களை அளித்தேன்.
தி.மு.க.வைச் சார்ந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருமைச் சகோதரர் என்.வி.என்.சோமு விபத்தினால் 14.11.1997 அன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி _- அதிர்ச்சியும், துயரமும் மிகுந்த சோகச் செய்தியாகும்! அப்போது சமூகநீதி மய்யத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள புதுடில்லி சென்றிருந்தேன். அவரது மறைவை ஒட்டி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி வரிசையில், இளைய தலைமுறையாக வளர்ந்து வந்த அவர் அந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட நடத்தியவர் ஆவார்.
அய்யாவிடம் மிகுந்த அன்பு பூண்ட _ திராவிட இயக்க மூத்த தலைவர் என்.வி.நடராசன் அவர்களின் மூத்த மகனும் ஆவார். எல்லோரிடமும் அன்புடன் பழகும் பான்மையர்!
அவரது மறைவால் மிகப் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ள அவரது குடும்பத்தினர்க்கும், தி.மு.க. குடும்பத்துக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
புதுதில்லியில் சமூகநீதி மய்யத்தின் சார்பில் முக்கியத் தலைவர்களின் கூட்டம் 16.11.1997 அன்று இந்தியா இண்டர்நேஷனல் கருத்தரங்கு மன்றத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், சமூகநீதிக்குப் பாடுபடும் தலைவர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு மிக முக்கியமான பல கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கல்வியில் இடஒதுக்கீடு, தனியார் துறையில் இடஒதுக்கீடு, பெண்களுக்கு இடஒதுக்கீடு, நீதித்துறையில் இடஒதுக்கீடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி “சமூக நீதிக்கான இரண்டாவது கட்ட போரைத் துவக்குவோம்’’ என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அங்கு உரையாற்றுகையில், “சமூகநீதிப் போராட்டத்தில் நாம் பெற்றது கை மண்ணளவு, பெறாதது உலகளவு என்பதற்-கொப்ப, மண்டல் பரிந்துரை செயலாக்கத்தில்-கூட மத்திய அரசில் வேலைவாய்ப்பு என்ற இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16(4) செயல்பட்டுள்ளது. அதனால் முக்கியப் பதவிகள் தாழ்த்தப்பட்டோருக்கோ, பிற்படுத்தப்-பட்டோருக்கோ கிடைக்க முடியாத நிலை உள்ளது. கிடைத்துள்ள 27 சதவிகிதத்திலும் ‘கிரீமிலேயர்’ (Creamy Layer) என்கிற பெயரில் வடிகட்டல், மற்றும் மறைமுகமாக வருமான வரம்பு திணித்த அக்கிரமம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை ஏற்றுக் கொண்ட அனைவரையும் ஒன்றுதிரட்டி மக்கள் கருத்தினை ஓர் முனைப்படுத்தி அரசுகளைச் செயல்பட வைக்க வேண்டும். நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிப்படி, இடஒதுக்கீடு அமைந்தால் ஒழிய, மற்றபடி உண்மையான பலன் _ சட்டங்கள் வந்தால்கூட _ மக்களிடம் சென்றடைய முடியாது’’ என பல்வேறு கருத்துகளை கூட்டத்தில் விளக்கிக் கூறினேன்.
அந்த சமயத்தில் பேராசிரியர் சைனி அவர்கள், அமெரிக்காவிலிருந்து டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்களும், அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யமும் இணைந்து தரும் ‘திரு.வீரமணி சமூகநீதி விருது 1997’ஆம் ஆண்டுக்கான அவ்விருது திரு.சந்திரஜித் அவர்களுக்கு வழங்கப்படவிருப்பதாக அமெரிக்காவிலிருந்து தொலைபேசி மூலம் தெரிவித்ததை அறிவித்தவுடன் அவையோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து பாராட்டுத் தெரிவித்தனர். உடனே திரு.சந்திரஜித் அவர்களுக்கு சால்வையைப் போர்த்தி, எனது மகிழ்ச்சியையும், பாராட்டினையும் தெரிவித்தேன்.
இந்த சமூகநீதி மய்யத்தின் கூட்டத்தில் திரு.சந்திரஜித் யாதவ், சையத் சகாபுதீன், உத்தரப்பிரதேசப் பேராசிரியர் அசோக் சாஸ்திரி, மேற்கு வங்க சமூகநீதி மய்யச் செயலாளர் திரு.கே.சி.கபாஸ், உ.பி. முன்னாள் எம்.பி. அல்பாஃக் உசேன், ஆந்திராவின் தியாகிகள் சங்கத் தலைவர் திரு.பிரேம்ராஜ் யாதவ், பேராசிரியை பர்வீன் (தமிழ்நாடு), மத்தியப் பிரதேச ஆதிவாசிகள் சமூகத் தலைவர் திரு.அஜித் ஜோகி, பி.எஸ்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.பி.யாதவ் என அறுபதுக்கும் மேற்பட்ட சமூகநீதித் தலைவர்கள் கலந்து-கொண்டு உரையாற்றினார்கள்.
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் பொதுச்செயலாளர் திண்டுக்கல் கே.ஜி.சுப்பிரமணியம் _ எஸ்.அன்னபூரணி ஆகியோரின் செல்வி கே.ஜி.எஸ்.சாந்திக்கும், திண்டுக்கல் என்.வெள்ளைச்சாமி _ வி.காமாட்சி ஆகியோரின் செல்வன் என்.வி.செந்தில்-குமாரிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 27.11.1997 அன்று நத்தம் சாலை, மகாலிங்க நாடார் தெய்வானையம்மாள் திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்திவைத்தேன்.
மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியைக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் விழா நடைபெற்றது. மணமக்களைப் பாராட்டி பல்வேறு பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறினேன். விழாவினை ஒட்டிய சிறப்பான வரவேற்புப் பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த மண விழா கழகக் கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்களும், அனைத்துக் கட்சித் தோழர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
கோவையில் 30.11.1997 அன்று நடைபெற்ற மதக்கலவரத்தைக் குறித்து விடுதலையில் விரிவான அறிக்கை வெளியிட்டோம். அதில், தந்தை பெரியாரின் கருத்துகளைக் கோடிட்டுக்காட்டி, இரும்புக்கரம் கொண்டு ஜாதி வெறி, மதவெறிச் சக்திகளைஅவர்கள் எம்மதத்தவர், எந்த ஜாதியினர் என்று பாராமல் எக்கட்சியினராயினும் அடக்கி அமைதி காத்து, பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மேலும், இந்தக் கலவரங்களைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
சென்னை புதுவண்ணை கழகத் தோழர் க.நடராசன் அவர்கள் 1.12.1997 அன்று அதிகாலையில் இயற்கை எய்தினார் என்னும் செய்தி அறிந்து வருத்தத்துடன், கழகப் பொறுப்பாளர்களுடன் அவரது இல்லத்திற்குச் சென்றோம். அங்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். வடசென்னை மாவட்டச் செயலாளர் பா.தட்சிணாமூர்த்தி தலைமையில் இடுகாட்டில் இரங்கல் உரையும், இரண்டு நிமிடம் மவுனமும் அனுசரிக்கப்பட்டது. அப்பகுதியின் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
சென்னையில் கழகத்தின் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொறியாளர் சோ.ஞானசுந்தரம் -_ மீனா ஆகியோருடைய செல்வன் ஞா.இராவணனுக்கும், சென்னை வே.சுப்பையா _ ஜெயலட்சுமி ஆகியோருடைய செல்வி சு.கவிதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 4.12.1997 அன்று எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து முன்னிலை வகிக்க அப்போதைய சென்னை மேயர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இணையரோடு கலந்துகொண்டார். விழாவிற்கு தலைமையேற்று மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழி-யினைக் கூறச் செய்து, அவர்களிடம் மாலை எடுத்துக் கொடுத்து மணமக்களை மாலை மாற்றிக் கொள்ளச் செய்தேன். சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் மணமகன் வீட்டாரின் சார்பாக மாலை எடுத்துக் கொடுக்க மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். மணவிழா எளிய முறையில் பதினைந்து நிமிடங்களில் முடிவடைந்தது. விழாவில் கழகத்தின் பொறுப்பாளர்கள் அனைத்துக் கட்சி முக்கியத் தலைவர்கள், பொதுமக்கள் என பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(நினைவுகள் நீளும்…)