இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் அகில இந்திய தர வரிசையில் 63ஆம் இடம் பெற்றிருக்கும் தீனா தஸ்தகீருக்கு தமிழ்நாட்டின் தேங்காய்ப்பட்டணம்தான் பூர்வீகம். தேங்காய்ப்பட்டணம் என்றால்உடனே நினைவுக்கு வருவது நாவல் ஆசிரியர், தோப்பில் முகம்மது மீரான் தான். ஆம். தோப்பில் முகம்மது மீரானின் பேத்திதான் தீனா தஸ்தகீர். அவரின் வெற்றிப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில்,
“அப்பா முகம்மது தஸ்தகீர் சவுதி அரேபியாவில் பெட்ரோலியம் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி விஞ்ஞானியாக இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அதனால் எனது தொடக்கக் கல்வி முதல் பிளஸ்டூ வரை சவுதியில் உள் சர்வதேச இந்தியன் பள்ளியில்தான் படித்தேன். படிக்கும்போது அதிக மதிப்பெண்கள் எடுத்ததற்காக பதக்கங்களும் பெற்றுள்ளேன். பொறியியல் படிப்பை தேங்காய்ப்பட்டணத்திற்கு அருகில் பெரிய நகரமான திருவனந்தபுரத்தில் பெண்களுக்கான பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தேன்.
பிரபல கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. எப்படியாவது அய்.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று நான் கனவு கண்டு வந்ததால் வேலையில் சேரவில்லை.
பொறியியல் பட்டப்படிப்பு முடித்ததும் அய்.ஏ.எஸ் தேர்வினை எழுதத் தொடங்கினேன். முதல் முயற்சியில் தேர்வு பெற்றாலும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட-வில்லை. இரண்டாவது முயற்சியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால், தேர்வாகவில்லை. மூன்றாவது முயற்சியில்தான் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். நேர்முகத் தேர்வில் அய்ந்து பேர்கள்அடங்கிய குழுவினர் கேள்விகள் கேட்டார்கள். நான் அய்.ஏ.எஸ். தேர்வுக்காக விருப்பப் பாடமாக புவியியலைத் தேர்ந்தெடுத்தேன். இந்தப் பாடத்திற்காக டில்லியில் ஒரு பயிற்சி நிலையத்தில் ஆன்லைனில் பயிற்சி பெற்றேன். இதர பாடங்களுக்கு திருவனந்தபுரத்தில் பயிற்சியில் சேர்ந்திருந்தேன்.
நேர்முகத் தேர்வுக்கு முன், நமது படிப்பு, அய்.ஏ.எஸ். தேர்வுக்காக எடுத்த விருப்பப் பாடம், பொழுதுபோக்கு குறித்த தகவல்களை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் நேர்முகத் தேர்வு நடந்தது.
எனது அய்.ஏ.எஸ் கனவு நனவாக முறையான சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு இருந்தால் அய்.ஏ.எஸ். அதிகாரியாகலாம். நானும், அப்பா, அம்மா, தம்பி ஒரு குழுவாக ஒரே மனதுடன் அய்.ஏ.எஸ் லட்சியத்துடன் செயல்பட்டோம். அதன் பலன் கிடைத்துள்ளது’’ என்கிறார். 26 வயதில் இந்தச் சாதனையைச் சொந்தமாக்கிய இவரது உழைப்பிலிருந்து நாமும் பாடம் கற்போம்.
தகவல் : சந்தோஷ்