கே1: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வடமாநிலங்களில் இருப்பதால், அங்கும் மதச் சார்பற்ற அணியை வலுவுடன் அமைக்காமல், தமிழ்நாட்டை பாசிசப் பிடியிலிருந்து எப்படிக் காக்க முடியும்?
– குமரன், நெய்வேலி
ப1: வடமாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அரசியலுக்கும் பதவிப் போட்டிக்கும் தன்முனைப்புக்கும் கொடுக்கும் முன்னுரிமை, லட்சியங்களில் _- கொள்கைகள் அடிப்படையில் இல்லையே!
மதச்சார்புக்கு மேலும் போட்டிபோட்டு ஓட்டு வேட்டை ஆட நினைக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கொள்கை அடிப்படையிலான அரசியல் பார்வை வந்தால்தான் அது சாத்தியப்படும்.
கே2: அ.தி.மு.க.வை பா.ஜ.க. பிடியிலிருந்து மீட்டு, பா.ஜ.க. சதியை முறியடித்து தமிழ்நாட்டில் அது வளரவிடாமல் தடுக்க வேண்டியதும் உங்களைப் போன்றோர் கடமையல்லவா?
– அருள்முருகன், ஆவடி
ப2: பந்தயங்கட்டி பா.ஜ.க.விடம் அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுக்கத் துடிக்கும் “தலைவர்கள்’’ அங்கே அரசியல் நடத்தும் காரணத்தாலும், இவர்கள் குடுமி, வருமானவரி மற்றும் மடியில் ஏற்பட்ட கணத்தாலும் அவர்கள் பிடியில் சிக்கி உருவான பயமும் இருக்கும்போது, என்ன செய்ய முடியும்?
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ‘அகில இந்தியாவை’த் தவிர அண்ணாவோ, திராவிடமோ, முன்னேற்றமோ எதுவும் இல்லாதபோது, கொள்கை வழி நிற்கும் நமக்கு அந்த வேலையை எடுப்பது வீண் அல்லவா?
டெல்லி பா.ஜ.க.விடம் அடகு வைத்ததை மீட்க அவர்களே தயாராக இல்லையே!
கே3: மம்தா, அகிலேஷ், சோனியா, சரத்பவார், நிதிஷ்குமார் போன்ற ஒத்த கொள்கை உடையவர்கள் தனித்து நின்று தோல்வியடைவதைவிட, பகிர்ந்து நின்று அதிக இடங்களில் வெல்லலாமே? கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், தாங்களும் சேர்ந்து அனைவரையும் ஓரணியாய் திரட்ட முயற்சி மேற்கொள்வீர்களா?
— – சமர், சென்னை
ப3: மேலே சொன்ன முதல் கேள்விக்குரிய பதிலே இதற்கும் பொருந்தும்.
கே4: தந்தை பெரியாரை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்லவேண்டும் என்று அன்னை மணியம்மையார் வலியுறுத்தியதை நிறைவேற்ற திட்டம் உருவாக்குவீர்களா?
– இளங்கோ, சேலம்
ப4: அனைத்திந்தியா மட்டுமல்ல; அகில உலகமும் கொண்டு செல்ல அனைத்தையும் செய்வோம் _ செய்து வருகிறோம்!
கே5: இஸ்லாமிய ஆயுள் கைதிகளை தி.மு.க. அரசு விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சரியா?
– முத்துவேலன், தாம்பரம்
ப5: இது குற்றச்சாட்டு என்பதைவிட, நியாயமான ஆதங்கம் என்பதே பொருத்தம் ஆகும். தி.மு.க. அரசும் முதல்அமைச்சரும் இப்பிரச்சினையில் தேவையின்றி, குற்றம் செய்யாது பழிவாங்குதலுக்கு ஆளானவர்கள் எம்மதத்தினராக இருந்தாலும் வெளியே வரவேண்டியவர்கள் என்னும்போது, இஸ்லாமியர்களை தனித்துப் பிரிப்பது நியாயமில்லையே!
நீதி நிச்சயம் கிடைக்கும் _ கிடைக்க வேண்டும். நாம் அனுதாபத்துடன் அக்கோரிக்கையை ஆதரிக்கிறோம்.
கே6: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, சுயமரியாதைப் பண்பு போன்ற எண்ணங்களை வளர்க்க சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்தால் என்ன?
– மோகன், சென்னை
ப6: பகுத்தறிவாளர் ஊடக அணியும் பகுத்தறிவு ஆசிரியரணியும் பாடநூல் குழுவும் நிச்சயம் இப்பணியில் கவனம் செலுத்துவார்கள். அதற்கான திட்டங்கள் உருவாகி வருகின்றன.
கே7: பெரியார் சிந்தனைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு அதிக அளவில் செய்யப்பட்டு, எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டியது கட்டாயம் என்று பொருளியல் அறிஞர் ஜெயரஞ்சன் கூறியதை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டுமா? இயக்கம் செய்ய வேண்டுமா? இரண்டும் செய்ய வேண்டுமா?
– மீனாட்சி, விழுப்புரம்
ப7: இரண்டு பேர்களும் செய்ய வேண்டும். அரசு செய்வதைவிட, இயக்கமே அப்பணியில் தீவிரமாக ஈடுபடும்.
கே8: உச்சநீதிமன்றக் கண்டனத்திற்குப் பின்னும் ஆளுநர் ஏழு பேர் விடுதலையைக் கிடப்பில் போட்டால் உச்சநீதி மன்றமே ஆணையிடுமா?
– சுந்தரமூர்த்தி, செஞ்சி
ப8: ஜனவரி 2022இல் புது வழி பிறக்கும் என்று எதிர்பார்ப்போம் _ நம்பிக்கையோடு.
கே9: தந்தை பெரியார் அவர்கள் பிறந்த மாவட்டமான ஈரோட்டில் இதுவரை அம்பேத்கர் சிலை இல்லை என்ற நிலை இன்றும் தொடர்கிறது. இனியாவது இந்த நிலை மாறுமா?
– மு. சண்முகப்பிரியன், சென்னை
ப9: பொது இடங்களில் சிலை வைப்பதைத் தடுக்கும் திட்டமான பார்ப்பன சனாதன திட்டத்தை முறியடிக்க நிச்சயம் செய்வோம்.
இது அதிர்ச்சிக்-குரிய தகவலாய் உள்ளது!