காஞ்சி மடாதிபதியான விஜயேந்திரர் காணொலி மூலம் ஹிந்து எண்டோமென்ட் போர்டு, ஹிந்து சென்டர், தி சிங்கப்பூர் தட்சண பாரத பிராமண சபா (சிங்கப்பூர் நாட்டில் குடியேறிய பார்ப்பனர்கள் இப்படி தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளுகின்றனர் போலும்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் பேசியுள்ளார்.
“ஹிந்து சமயத்தின் பிறப்பு குறித்து ஆராய்ந்து பார்த்தால், பிரமதேவர் தனது சிருஷ்டியைத் தொடங்கிய காலத்திலேயே இந்த சனாதன தர்மம் தொடங்கியிருக்க வேண்டும்.
பிற்காலத்தில் அதற்கொரு பெயர் தேவைப்பட்டதால் ஹிந்து மதம் என்று பெயர் சூட்டப்பட்டது.
“… ஹிந்து சமயம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கில், தன்னலம் கருதாமல் வளர்ச்சியின் பங்கு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற பொதுநலச் சிந்தனையைத் தூண்டுகிறது’’ என்று பேசியிருக்கிறார்.
இன்னும் இதுபோல் பல, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார்.
ஹிந்து சமயம் எல்லோருக்கும் சமவாய்ப்பை – _ இன்பத்தைப் பொதுமையாக்கும் மதமா?
பிறவியிலேயே உயர்வு தாழ்வு கூறும் வர்ணாசிரம ஜாதிமுறை வேறு எந்த மதத்தின் அடிப்படையில் உள்ளது? _ விளக்குவாரா காஞ்சி மடத் தலைவர்?
எல்லோருக்கும் இன்பம் அளிப்பதான மதமா இந்து மதம்? மிகப் பெரும்பாலோருக்கும் கல்வி வாய்ப்புகளை தரக் கூடாது என்று கட்டளை பிறப்பித்துள்ள மதம் ஹிந்து மதம் தவிர, வேறு எந்த மதம்? கூறுவாரா, காஞ்சி விஜயேந்திரர்?
மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள பெண்களுக்கு படிப்புரிமையோ, சொத்துரிமையோ கூடாது என்பது இந்த சனாதன மதம் தவிர, வேறு உலகில் எந்த மதம் என்ற கேள்விக்கு விடையளிப்பாரா?
சூத்திரன், பஞ்சமன், தொடக்-கூடாதவன், நெருங்கக் கூடாதவன், பார்க்கக் கூடாதவன் என்று உழைக்கும் மக்களை இழிவுபடுத்தி படிக்கட்டு ஜாதி பேதத்தை (Graded Inequality)யை உண்டாக்கி, அதை சுடுகாடு _ இடுகாடு வரையில் கொண்டு செலுத்துவது எந்த மதம்? _ ஹிந்து சனாதன மதம் தவிர!
கணவனை இழந்த பெண்களை சதி அல்லது உடன்கட்டை என்று, உயிருடன் கொளுத்தி மகிழும் சனாதனக் காப்பு மதம் ஹிந்து மதம் தானே? சதி மாதா கோவில் கட்டிக் கும்பிட வைத்துள்ளது வேறு எந்த மதம்?
இதுதான் எல்லோருக்கும் இன்பம் தரும் மதமா?
காஞ்சி சங்கரமடத்தில் சாப்பிட்டு எஞ்சிய எச்சிலிலைகளில் உள்ளதைக் கூட பிறர் சாப்பிட்டால் தீட்டு என்று பள்ளந்தோண்டிப் புதைத்துவிடக் கூறுவது வேறு எந்த மதம்?
தன் ஜாதிக்காரர்களை மட்டும் சமமாக அருகில் நாற்காலியில் சரிசமமாய் அமர்த்துவதும், மற்றவர்களை _ குடியரசுத் தலைவராக ஆனாலும்கூட _ கீழே அமர வைத்துப் பேதப்படுத்துவதும்தான் “வாசுதேவக் குடும்பமா?’’ இதுதான் பொதுநலமா?
சங்கர மடத்தின் அறக்கட்டளைகளால் பயனடைந்த ‘சூத்திர, பஞ்சம ஜாதி’யினரின் பட்டியலைத் தந்து, ஜாதிபேதமின்றி அனைத்து ஹிந்து மக்களுக்கும் எப்படி பயனளிக்கிறது என்று பட்டியல் தரத் தயாரா?
‘மஹா மஹா பெரியவா’ தனது ‘தெய்வத்தின் குரலில்’– _ நாத்திகனுக்கு ஒருபோதும் வைத்தியம் செய்யக் கூடாது என்று அருளுபதேசம் செய்துள்ளாரே, அதுதான் யாவருக்கும் இன்பத்தை அள்ளி அள்ளித் தருவதா?
கோணிப் புளுகன் கொயபெல்ஸ்கூட இந்தப் பார்ப்பன பீடங்களின் பசப்புப் பொய்-மொழிகளில் தோற்றோடிப் போவான் போலிருக்கிறதே.
சகிப்புத் தன்மை காரணமாகத்தான் ஹிந்துத்துவாவில் தேர்ச்சி பெற்ற கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனர் தேசப்பிதா காந்தியை சுட்டுக் கொன்றாரா?
காஞ்சி சங்கரராமன் கொலை எப்படி கோயில் வளாகத்திற்குள்ளே நடந்தது? அக்கொலைக் குற்றவாளிகள் 87 பிறழ் சாட்சியங்களின் மூலம் தப்பித்துக் கொண்டது-தான் பொதுநலத்தின் வெளிச்சமா?
பதில் கூறட்டும், சனாதனப் பாதுகாவலர்-கள்? ஏமாந்த காலம் எல்லாம், மலையேறி-விட்டது என்பதை, மாஜி கிரிமினல் பேர்வழிகள் இதோபதேசம் செய்யும்முன் உணரட்டும்!
– கி.வீரமணி,
ஆசிரியர்