சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்
சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் வி.பி.சிங். மண்டல் குழுவின் பரிந்துரைகளை சட்டமாக்கி, பிற்படுத்தப் பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டைப் பிரகடனப்படுத்தியவர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் 40 ஆண்டுகளாக வழங்கப்படாத சமூகநீதியை வழங்கி, அதற்காக தமது பிரதமர் பதவியை இழந்தவர். பதவிக்காய் மக்களின் உரிமைகளை ஆதிக்க ஜாதியினரிடம் அடகு வைக்காமல், சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை தூக்கி எறியலாம் என்று அறிவித்த தியாகச் செம்மல்! அதிசய மனிதர்!
சட்டமன்றம், நாடாளுமன்றம் பக்கம் தம் பாதத்தைப் பதிக்காத தந்தை பெரியாரின் பெயரை நாடாளுமன்றத்தில் உரக்க ஒலித்த பெருமைக்குச் சொந்தக்காரர்! தந்தை பெரியார் பற்றிய வி.பி.சிங் அவர்களின் கம்பீரமான கருத்துகள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை!
“மனித மூளையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றவர் தந்தை பெரியார். சமூக நீதிக்கும் சமூக மாற்றங்களுக்கும் பெரியார் ஆற்றிய தொண்டு பிரதமர்களும், நாடாளுமன்ற வாதிகளும் சாதிக்கக் கூடியதைவிட அதிகம்” (‘தி இந்து’ 29.12.1992)
தாம் எழுதிய கவிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை அப்படியே நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார்.
வி.பி.சிங் மறைந்தாலும் அவர் உருவாக்கிய சமூகநீதிக் காற்றை அனைவரும் சுவாசித்தே தீரவேண்டும்!
நினைவு நாள்: 27.11.2008
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் கவிதைகள்
பிள்ளையார் சாணம்
சாணத்தின் மீது
அமர்ந்த ஈ பறக்கிறது
பின்னர் வந்து
பிள்ளையார் மீதும் அமர்கிறது…
புரோகிதப் பண்டிதர்
இதனைப்
பார்த்துக் கொண்டே
இருந்தார்…
பிள்ளையார் மேல்
பட்டது சாணம்;
புரோகிதருக்குப்
பிறந்தது ஞானம்.
சமத்துவம்தானே
மகத்துவம்…
நல்ல விளையாட்டு இது…
ஜோதிடர்
ஜோதிடர்
எனது வருங்காலம் பற்றி
வகை வகையாய்
சொல்லி வைத்தார்
நான் கேட்டேன்
அவ்வளவு தூரம் வேண்டாம்,
இன்று இரவு _ ஆம்
இன்று இரவு எனக்கு
என்ன கனவு வரும்?
ஜோதிடர்
மவுனமாகிப் போனார்.
விண்மீன்கள் ஆதிக்கத்தால்
கண்ணுறக்கம் இல்லாமல்…
நான் மட்டும் இருக்கிறேன்…
என் கனவுகள் இல்லை…
எனவேதான் ஜோதிடர்
மவுனமாகிப் போனார்.
(“ஒரு துளி பூமி, ஒரு துளி வானம்’’ தொகுப்பிலிருந்து…)
தமிழாக்கம்: த.சி..க.கண்ணன் (கழக வெளியீடு)