மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியே வேலைவாய்ப்பில் முதலிலும், (மத்திய) கல்வி நிறுவனங்களில் பிறகும் ஆக 27 சதவிகித இடதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அமுலில் உள்ளது.
ஆனால், S.C., S.T.,, மக்களுக்கென அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு பல ஆண்டுகளாக இருக்கிறது.
அக்குழுவில் – இரு அவைகளின் S.C., S.T., உறுப்பினர்களும் இடம் பெற்று, நாடு தழுவிய அளவில் நிறுவனங்களுக்குச் சென்று ஆராய்ந்தும், சம்பந்தப்பட்ட அமைச்சகம் அதற்குரிய ஒதுக்கீடு மற்றவைகளைச் சரியாக நிர்வகிக்கிறதா என்பதையும் நேரடியாக ஆய்வுக் கூட்டங்களில் ஆராய்ந்து பரிந்துரைத்து சமூக நீதியை நிலைநாட்ட உதவிடுவர்.
இதேபோல் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டிற்கு மேல் உள்ள (சுமார் 60 கோடி மக்களுக்கு மேல் உள்ள) பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, மண்டல் கமிஷன் பரிந்துரையில் 52 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க கூறப்பட்டிருந்தாலும் கூட, பாலாஜி வழக்கு என்ற ஒரு தீர்ப்பினை மய்யப்படுத்தி, 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு செய்யக்கூடாது என்று வலிந்து ஆதிக்க ஜாதியினர் கூறி, 27 (தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கான; 15+7.5 = 22.5 விழுக்காடு போக – 50 இல் எஞ்சிய 27 விழுக்காடு என்பதால் இந்த 27 சதவிகிதத்தை ஏற்றனர். இதனையும் பல துறைகளில் (நீதித்துறையில் அறவே கிடையாது) செயல்படுத்துவதே இல்லை.
இந்த அநீதி களையப்பட வேண்டுமென்பதற்காக, திராவிடர் கழகமும், நம்மைப் போன்ற உரிமைக்குப் போராடும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., ஆர்.ஜே.டி., சமாஜ்வாடி, மதச்சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க.வில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் முயற்சியினால் இந்த நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் துறை அமைச்சர் பன்சால் அவர்கள் தாக்கல் செய்திருந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது. நீண்டகாலமாக கவனம் செலுத்தப்படாத இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கென தனி நாடாளுமன்ற நிலைக்குழுவை நியமித்த, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், அதற்கு ஒப்புதல் அளிக்க மூல காரணமான அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்களுக்கும், மற்றும் அமைச்சர் திரு. நாராயணசாமி, திரு.ஹனுமந்த ராவ் எம்.பி. அவர்களுக்கும், சுதர்சன நாச்சியப்பன் போன்ற சமூகநீதியாளர்களுக்கும், முன்மொழிந்த அமைச்சர் பன்சால் அவர்களுக்கும், இது வருவதற்குக் காரணமான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும், கோடானு கோடி ஒடுக்கப்பட்டோர் சார்பில் நமது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதோடு பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்கும் வகையில், தற்போதுள்ள 27 சதவிகிதத்திலேயே உள்ளடக்கமாக சிறுபான்மையினருக்கு 4.5 ஒதுக்கீடு என்பதால் வெறும் 22 சதவிகிதமாகத்தான் அது குறையும் அபாயம் உள்ளது.
சிறுபான்மையினருக்குத் தருவதை எதிர்ப்பவர்கள் அல்ல நாம். ஆதரிப்பவர்களே! ஆனால், தமிழ்நாட்டில் உள்ளதைப் போல மத்தியில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர் களைக் கெண்டு வராத நிலை உள்ளதால் ஒன்று, அவர்களில் பெரும்பாலோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து வைத்து இப்படி இடஒதுக்கீடு செய்யலாம்; செய்ய வேண்டும்.
இன்றேல், 50 சதவிகிதத்துக்குள்தான் என்பதற்கு (உச்ச வரம்பிற்கு) இந்திய அரசியல் சட்டத்தின் விதி ஏதும் தடையாக இல்லை.
பாலாஜி வழக்கு என்பதில் கூட 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு மிகக் கூடாது என்பது தீர்ப்புக்கு அப்பால் ஒரு கருத்தாக (Obiter Dicta) என்று தான் குறிப்பிடப்பட்டது.
சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவி விட்டார்கள் உயர்ஜாதி வர்க்கத்தினர்.
தமிழ்நாட்டில் 1980 முதல் 30 ஆண்டுகளுக்கு மேல் அமுலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டினால் ஏற்பட்ட கெடுதி என்ன? புயலோ, பூகம்பமோ, சுனாமியோ வந்துவிட்டதா? எனவே 27 சதவிகித இடஒதுக்கீட்டைத் துணிந்து அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இரண்டாவது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்குரிய சட்ட அதிகாரங்களையும் மத்திய அரசு வழங்கி, அது வெறும் பொம்மை அமைப்பு போல் தற்போதுள்ள நிலையை மாற்றிட வேண்டும் என்பதையும் மத்திய அரசுக்குக் குறிப்பாக திருமதி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு வேண்டுகோளாக வைத்து, நன்றி கூறுகிறோம்.
கி.வீரமணி,
ஆசிரியர்