வீழ்த்துவோம் நாம்!

அக்டோபர் 16-31,2021

பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்

பழியுணர்ச்சி மேலோங்க, தமிழர் மேன்மை,

               பண்பாட்டை மதியாதார் கொணர்ந்த ‘நீட்’ டை

ஒழிப்பதற்கு மக்களையே திரட்டி வெல்வோம்!

               ஒருசிலரின் நன்மைக்கு நாட்டு மக்கள்

அழிவுக்குத் துணைபோகும் அறத்தின் கேடர்

               அறியாமை மடமையெனும் சேற்றில் நம்மை

அழுத்துகிற இழிமனத்தார் ஆடு கின்ற

               ஆட்டத்தை ஒருங்கிணைந்தே அடக்கி ஆள்வோம்!

 

முற்றாக மக்களையே மறந்து போனார்;

               மூண்டெழுந்த உழவர்தம் குமுறல் தன்னைக்

குற்றமென எண்ணுகிறார்; ஏவல் நாயாய்

               கோடிகளில் புரள்வோரின் அடிமை யானார்!

வெற்றுவிளம் பரத்தினிலே ஏய்த்து வாழும்

               வெறுங்குடத்தில் நீர்நிரம்பப் போவ தில்லை;

பற்றில்லார் சாதிமத வெறியில் மிக்கார்

               படுகுழியில் தள்ளுகிறார் இந்த நாட்டை!

 

வடபுலத்தில் வாழ்வோர்க்குத் தமிழ கத்தில்

               வழங்குகிறார் பணிவாய்ப்பை! எதிலும் என்றும்

இடக்கினையே எண்ணுகிறார்; புதிய கல்வி

               எனும்பேரால் சமற்கிருதம் இந்தி யாலே

முடக்கிவிட எண்ணுகிறார் தமிழர் வாழ்வை!

               முட்புதரைச் சோலையென முழங்கு கின்றார்;

உடல்பொருள்நம் உயிராலே தமிழைக் காப்போம்!

               உலகறிந்த வரலாற்றை இனிதே மீட்போம்!

 

“ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்

               உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்;”

முரசறைந்த பாவேந்தர் அடியை இந்நாள்

               மூச்சாக, பேச்சாகக் கொள்வோம்! நெஞ்சில்

கரவார்ந்த கொடுங்கோலர் கயவர் தம்மின்

               காலடியில் கிடக்கின்றார்! நாட்டு மக்கள்

பெருந்துயரில் துடிக்கின்றார்; இழிந்தோர் தம்மைப்

               பேராண்மைத் திறத்தோடு வீழ்த்து வோம்நாம்!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *