டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து-கொண்ட மாற்றுத் திறனாளிப் பெண்கள் அதிகப் பதக்கங்களை வென்று, தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை 24ஆம் இடத்-திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
டேபிள் டென்னிஸ்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் பெற்றுத் தந்தார் பவினா படேல்.
ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்ட இவர், நான்காம் வகுப்புப் படிக்கும்போதே டோக்கியோவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
சக்கர நாற்காலியில் இருந்தவாறு பாய்ந்து பாய்ந்து மேசைப் பந்தாட்டம் விளையாடும் பவினா, இதுவரை இந்தியாவுக்காகப் பல தங்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
2011இல் தாய்லாந்தில் நடந்த உலகளாவிய டேபிள் டென்னிஸ் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், உலகத் தரவரிசையில் இரண்டாமிடம் வந்தார்.
‘நான், சில நேரங்களில், என் குடும்பத்துக்கு ஒரு சுமையெனவே நினைத்திருந்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்களது துணை வேண்டி-யிருந்தது. நான் என்னையே ஒரு சுமையாகப் பார்த்தேன். ஆனால், நான் அப்படி இருக்க விரும்பவில்லை’ எனச் சொல்லும் பவினாவுக்கு, இனி பதக்கங்கள் மட்டுமே சுகமான சுமையாக இருக்கும்!
பதினொரு வயது வரை ஓடியாடித் திரிந்த ஆவணி லேகராவுக்கோ ஒரு கார் விபத்து சக்கர நாற்காலியிலேயே சுற்ற வைத்துவிட்டது.
முதுகுத் தண்டுவடத்தில் பலமாக அடிபட்ட ஆவணிக்கு, இடுப்புக்குக் கீழ் எந்த உணர்வும் இருக்கவில்லை.
2015இல் துப்பாக்கி சுடும் பயிற்சியை ஆரம்பித்த ஆவணிக்கு, ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் சுயசரிதையைப் படித்ததும் இன்னும் ஈர்ப்பு அதிகமானது.
19 வயதாகும் ஆவணி, முதல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருக்கிறார். 10 மீட்டர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றதோடு மட்டுமல்லாமல்; 50 மீட்டர் ரைஃபிள் போட்டியில் வெண்கலமும் வென்று, தான் கலந்து கொண்ட முதல் பாராலிம்பிக்கிலேயே இரண்டு பதக்கங்களை வென்றெடுத்து இருக்கிறார் இந்தத் தங்கப்பெண்.
தீபா மாலிக் பாராலிம்பிக்கில் முதல் பதக்கம் பெற்ற பெண். இப்போது இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருக்கிறார்.
இவரது 26 வயதில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை செய்யப்பட்டது. 163 தையல்கள் போடப்-பட்டன. அறுவைச் சிகிச்சைக்குப் பின் அவரது மார்புப் பகுதிக்குக் கீழே உள்ள உறுப்புகள் செயலிழந்தன. சக்கர நாற்காலியில் இருந்த-படியே குண்டு எறிதல், ஈட்டி எறிதல் முதலிய போட்டிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி-களில் கலந்துகொண்டு பரிசு-களையும் பதக்கங்களையும் பெற்றார். யமுனை நதியில் நீரோட்டத்திற்கு எதிராக 1 கி.மீட்டர் தூரம் நீந்தி, லிம்கா சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார். பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த தீபா மாலிக், அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனை இவர்தான். 2017 மார்ச் மாதம் இந்தியக் குடியரசுத் தலைவர் கைகளால் பத்மசிறீ விருதையும் பெற்றவர்.
“நான் எனது நாட்டுக்கு 23 சர்வதேச பதக்கங்களைக் கொடுத்துள்ளேன். சோதனைகளை முறியடித்து இந்தியாவை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றேன். இப்போது நான் அதை ஒரு நிருவாகியாகச் செய்ய விரும்புகிறேன்’’ என்கிறார் தீபா மாலிக்.ஸீ