நிலம் இருந்தும் வளம் இருந்தும்
வாட்டுதடா வறுமை – எங்கும்
காட்டுதடா கருமை – நாட்டில்
நிதமும் நடக்கும் கொள்ளை யினால்
சுருண்டதடா உலகம் – கண்டு
மூண்டிடாதோ கலகம்!
காட்டைத் திருத்தி மலையைக் குடைந்து
கழனி யாக்கினாய் அன்று – நல்ல
கடமை யாற்றினாய் நன்று – ஆனால்
காட்டையும் மேட்டையும் திருத்திய உனக்கு
கஞ்சிக்கு வழியில்லை இன்று – இதைக்
கண்டு உணர்வது என்று?
பணம் பதவி படை இருந்தால்
பணியுதடா உலகம் – அங்கே
விளையுதடா கலகம் – இவர்கள்
பகல் கொள்ளை அடிப்ப தற்கு
குறுக்குவழி தேர்தல் – அதில்
குருட்டு மக்கள் ஓர்தல்!
உழைக்கும் மக்கள் உயர வில்லை
உண்மைநிலை தேடு – இதை
உடைக்கும் நிலை நாடு – இங்கே
உழைத் திடாமல் கூட்டம் ஒன்று
ஊரைஏய்த்து வாழுது – நாளும்
உழைக்கும் வர்க்கம் வாடுது!
இதைத்தான் அய்யா அன்றே சொன்னார்
கேட்காததால் வந்த விளைவு – அதனால்
தமிழர்க்கு வந்தது தாழ்வு.
இதனை மீட்டிட எழுந்துவா தமிழா
நாளைய பொழுது நமக்கே – நல்ல
விடியல் தெரியுது கிழக்கே.
மதத்தின் பெயரால் கடவுள் பெயரால்
அடிமையானாய் அன்று – மீண்டும்
விடிவுகாண்பாய் இன்று
மதமும் இல்லை கடவுள் பொய்யே
உணர்ந்திடுவாய் இது உண்மை – அதனால்
விளைந்திடுமே பல நன்மை!
– எஸ்.துரைக்கண்ணு