கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. ஒருவனுடைய அறிவுக் கண்ணைத் திறக்கும் திறவுகோல் கல்வியாகும். படிக்காமல் இருப்பதனைவிட பிறக்காமல் இருப்பதே மேல் என்கின்றார் பேரறிஞர் பிளாட்டோ. கற்றவர்கள் எப்போதும் சமூகத்தில் உயர்ந்த இடத்திலேயே மதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட கல்வியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி என்பது ஒருதலைப்பட்சமானதாக இருப்பதால் ஏற்படும் வளர்ச்சி என்பதும் ஒரு சாரார் மட்டுமே பயன்படும் வகையில் இருப்பது வேதனைக்குரியது.
இந்தியாவில் 23 IITக்கள் (Indian Institute of Technology) உள்ளன. இவை பொறியியல் கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள்.
நம் நாட்டில் மத்திய பல்கலைக்கழகங்கள் 49 உள்ளன. இவை எல்லா துறைகளையும் கொண்டுள்ள உயர் கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மய்யங்கள். இவை அடிப்படை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தருபவை.
மேலும் 20 IIMகள் (Indian Institute of Management) உள்ளது. இவை நிருவாகத் திறனை வளர்க்க உதவும் கல்வி நிலையங்கள். இது தவிர 31 NITகள் (National Institute of Technology) உள்ளன. இவை ஒரு தனிப்பட்ட துறையில் சிறந்து விளங்க உருவாக்கப்பட்டவை.
இப்படியாக மேற்கண்ட 123 கல்வி நிலையங்களில் வெறும் 3 சதவிகித மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். ஆனால், இந்த மூன்று சதவிகித மாணவர்களுக்கு உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 50 சதவிகிதத்தை நம் நாடு செலவு செய்கிறது.
ஆனால், இந்தியாவில் மொத்தம் 367 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை உயர் கல்வி மற்றும் அடிப்படை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தருபவை. இது தவிர 38,498 கல்லூரிகள் நாடெங்கும் உள்ளன. இவைதான் அநேக மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்கிக் கொண்டுள்ளன. இந்த மாநில பல்கலைக்கழகங்களிலும் மற்றும் கல்லூரிகளிலும் தான் நாட்டின் 97% மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 50 சதவிகிதம் செலவு செய்யப்படுகிறது.
இந்த நிதி ஒதுக்கீட்டுக்குள்ளே பல மாணவர்கள் படித்து முன்னேறி வரவேண்டிய சூழல். ஆனால், வெறும் 3 சதவிகிதம் பேர் படிக்கும் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைக் கண்டால் அருவருக்கத்தக்க நிலையில் உள்ளன.
இந்தியாவில் சிறந்த அய்.அய்.டி.களில் சென்னை அய்.அய்.டி முதலிடம் பெற்றுள்ளது என்பது நம்மைப் பெருமைப்படுத்த வைத்தாலும், அங்கே நடைபெறும் ஒடுக்குமுறையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அண்மையில் சென்னை அய்.அய்.டி.யில் ஜாதிவெறி தலைவிரித்தாடுவதாகக் குற்றஞ்சாட்டி விபின் என்ற உதவிப் பேராசிரியர் பதவி விலகினார். அதற்கு முன்பு தமிழ்நாட்டுக் கணித மேதையான முனைவர் வசந்தா கந்தசாமி, ஜாதிவெறி கொண்டவர்களால் சென்னை அய்.அய்.டி.யில் மோசமாகப் பழிவாங்கப்பட்ட நிகழ்வு சமூகநீதி களப் போராளிகளால் மக்களின் கவனத்திற்கு வந்தது.
கடந்த ஆண்டு ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவி, சில ஆசிரியர்களின் மதவாத வெறுப்பரசியலால் விளைந்த வக்கிர புத்தியால் பாதிக்கப்பட்டு தன்னையே மாய்த்துக் கொண்ட சம்பவம் சென்னை அய்.அய்.டி.யில் நடந்தது.
அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ரோகித் வெமுலா என்ற முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர், விடுதியிலேயே ஜாதியக் கொடுமை தாங்காமல் தன்னையே பலியிட்டுக் கொண்ட சம்பவம் உலகையே உலுக்கியது.
அண்மையில் அய்.அய்.டி.யில் தமது கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்துவோரின் புள்ளிவிவரம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அய்.அய்.டி.யிலிருந்து கல்வியைத் தொடர முடியாமல் வெளியேறுவோரில் 60% முதல் 88% வரை தலித் மாணவர்கள் என்ற அதிரவைக்கும் உண்மை அம்பலமாகியுள்ளது.
5.8.2021 அன்று மாநிலங்களவையில் தொடுக்கப்பட்ட வினா ஒன்றிற்கு விடையளிக்கும்போது, கடந்த அய்ந்தாண்டுகளில் அய்.அய்.டி உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திலிருந்து அதிகமாக ஒடுக்கப்பட்ட தலித் சமுதாய மாணவர்கள் பாதியிலேயே வெளியேறும் புள்ளிவிவரம் ஒன்றிய அரசின் கல்வியமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி அய்.அய்.டி.யிலிருந்து வெளியேறுவோரில் 88% தலித் மாணவர்கள், டெல்லியில் 76%, சென்னையில் 70%, கான்பூரில் 61%, கரக்பூரில் 60% இதைத் தற்செயலானதாகப் பார்க்க முடியாது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் மிக அதிக அளவில் அய்.அய்.டி.யிலிருந்து வெளியேறுவதில் உள்ள ஆதிக்க சூட்சுமம் அதிபெரிய ரகசியமும் அல்ல.
‘நீட்’ தேர்வால் வடிகட்டப்பட்ட அனிதாக்கள் போக, தடைகளைத் தாண்டி அய்.அய்.டி. போன்ற உயர் கல்வி நிலையங்களில் உள்நுழைந்த மீதி மாணவர்களையும் ஜாதியச் சுடுகணைகள் மூலம் சர்வநாசம் செய்வதை எத்தனை காலம்தான் வேடிக்கை பார்ப்பதோ? இந்த அதிஉயர் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பவை.
ஒன்றிய அரசு எத்தகையோரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் ஒழிய, இந்த அலங்கோலங்களுக்கு விடிவு பிறக்காது.
சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்தி வந்த குருகுலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஆரிய சனாதனக் கொடுமை, தந்தை பெரியாரை காங்கிரசிலிருந்து வெளியேற்றி, சுயமரியாதையின் களம் காண வைத்தது. அதுபோல, உயர்கல்வி நிலையங்களில் தொடரும் ஜாதிய வன்கொடுமைகள், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வழிவகுக்க வேண்டும்.
அறிவியல் நெறியில் நடக்கிற ஒரு தலைமுறையைத் தயாரிக்கின்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குள் ஜாதிய சனாதன வெறியாதிக்கம் புகுந்திருப்பது வேதனைக்குரியது.
சனாதனக் கொடுமைகள் குறித்த சமூகத்தின் கவலைகள் சமூகநீதி, சமத்துவம் நோக்கிய செயல்பாடாக மாற்றம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். – மகிழ்