பெண் விடுதலை : நான் கண்ட முதல் பெண்ணியவாதி!

செப்டம்பர் 16-30,2021

நான் கண்ட முதல் பெண்ணியவாதி!

கார்த்திகா, மருத்துவர், கோவை

(தந்தை பெரியார் சிந்தனைகளைப் படித்த அளவில்,

இன்றைய தலைமுறையின் சிந்தனையில் எந்த அளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு இக்கட்டுரையாளர் சான்று)

நான்,

இவர் குடும்பத்தில் பிறக்கவில்லை,

இவருக்கு உறவினரும் இல்லை,

இவருடைய ஊரும் இல்லை,

இவர் வாழ்ந்த காலகட்டத்தில் நான் வாழவுமில்லை.

நான் வளர்ந்த சூழலில் ஒரு காந்தி, தாகூர் என்று சில தேசியத் தலைவர்களின் புகழ்ச்சி வரலாறுதான் பள்ளியிலோ வீட்டிலோ அதிகம் ஒலித்துக் கொண்டிருக்குமே தவிர, தமிழ்நாட்டுத் தலைவர்களைப் பற்றி அல்ல.

பள்ளியிலோ ஆங்கிலம்; வீட்டிலோ கன்னடம் என்றிருந்ததால் தமிழையோ தமிழ்நாட்டின் முக்கியமானவர்களைப் பற்றியோ பெரிதாக நான் அறிய வாய்ப்பு இருந்ததில்லை.

நாற்பது ஆண்டுகளில் நான் அறிந்தது எல்லாம், பள்ளிப் பாடத்தில் ஒரு முனையில் இவர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி என்று ஒரு சில வரிகளில் எழுதியிருந்ததைத் தவிர, வேறு எதுவும் நினைவில் இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஓர் அரசியல் பார்வை என்பது, 2017 ஜல்லிக்கட்டு போராட்டம் வழியாகத்தான் எனக்குப் பிறந்தது. லட்சக்கணக்கான இளைஞர்கள் மெரினாவில் திரளக் காரணம் என்னவென்று தேடும்போதுதான் சில விடையங்கள் கிட்டியது… சற்று அலசிப் பார்த்த பின் அது காளைச் சண்டைக்காக மட்டும் அல்ல… அதனுள் புதைந்திருந்தது தமிழ் வரலாற்றின் ஒரு முக்கிய அடையாளம் என்றும், அது தமிழ் நாகரிகத்தின் பல்லாயிரமாண்டு பண்பாடு என்றும், அக்காளை மாடுகள் உயிரிலிருந்து உணவு வரை தமிழர்களின் வாழ்வியலோடும் வாழ்வாதாரத்தோடும் பிணைந்த ஓர் அங்கம் என்பதையும் உணர முடிந்தது. (அண்மைக்-காலமாக தொல்லியல் பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் திமில் காளையின் எச்சங்கள் இதை ஆதாரத்தோடு மெய்ப்பித்தும் உள்ளது.)

பின்பு ஏன் போராட வேண்டியிருந்தது என்பது எனது தொடர் கேள்வி..

அதன் பின்னிருந்த அரசியலைத் தோண்ட ஆரம்பித்தேன். கீழடி அகழ்வாராய்ச்சியை மறைக்க முயற்சிப்பது ஏன்? அமர்நாத் அவர்களை ஏன் கீழடியிலிருந்து இடம் மாற்றுகிறார்கள்?

யாருக்கு இதில் ஆதாயம்?

தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்கூறும் சான்றுகளை வெளியிட ஏன் அஞ்சுகிறார்கள்?

அதன் வரிசையில் சமுதாயத்தின் பிரிவினைகளை ஏற்றத்தாழ்வுகளை உற்றுநோக்கி நகர்ந்தேன்.

பல கட்டங்கள்,

பல வன்முறைச் சம்பவங்கள்,

பல போராட்டங்கள் என தமிழ்நாடு என்றும் காணாத நிலையில் தவிப்பதை உணரமுடிந்தது.

அந்த வேளையில் தான் ஒரு குறிப்பிட்ட கிழவரின் சிலையை ஒரு கூட்டம் ஆமோதிப்- பதையும், ஒரு கூட்டம் அடித்து நொறுக்குவதையும் காண்கிறேன்.

ஒரு பக்கம் கொண்டாட்டம்; மறுபக்கம் வெறுப்பு. இன்னும் சிலர் அந்தச் சிலைமேல் காவியைப் பூசி கிலுகிலுப்படைகின்றனர்.

அதன் விளைவாகத் தோன்றிய ஆர்வத்தில் ஆழமாக நகர்ந்தேன்.

யார் இந்த ஈ.வெ.ராமசாமி?

இவருக்கும் இங்கு நடந்து கொண்டிருக்கும் அரசியலுக்கும் இறந்தும் இத்தனை ஆண்டுகளாகியும் என்ன தொடர்பு?

ஆர்வம் தூண்டியது.

வாசிக்க ஆரம்பித்தேன்.

பல உரைகள் கேட்டேன்.

பல சமூகநீதிக்கான போராட்டங்களை தமிழ்மக்கள் தொடர்ச்சியாக அதே காலத்தில் சந்தித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

ஏன் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியிருந்தது….

‘நீட்’ தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோகார்பன் திட்டம், தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தித் திணிப்பு இவற்றை எதிர்த்து நீளமான போராட்டப் பட்டியல் என 2017இல் சில மாதங்களில் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. பெரும்பாலும் இவை கல்வி மற்றும் வாழ்வியல் உரிமைக்கான குரல்கள். அந்தப் போராட்டங்களின்போது பொதுவான காட்சி என்னவென்றால் சமூகநீதியை நாடும் அனைத்துக் கூட்டங்களிலும் மக்களோடு ஈ.வெ.ராமசாமியின் சித்தாந்தங்களும் கூடவே கலந்து ஒலிக்கின்றன.

மேலும், அரசியல் கண்ணோட்டத்தோடு ஆழமாகத் தெரிந்து கொள்ள தள்ளப் பட்டேன்.

எதனால் வியப்படைந்தேன்?

எதையெல்லாம் நான் எனக்கும் சமுதாயத்துக்கும் வாழ்க்கை முறைகளாக  இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேனோ, ஒரு பெண்ணாக நான் என் வாழ்க்கையில் எந்த சில அடிமைத்தனத்தை ஒடுக்குக் குறியீடுகளாக கருதினேனோ…. தாலி, புடவை போன்ற உடை, சமையலறைச் சிறை வாழ்க்கை, கல்வியின்மை, கற்பு, கர்ப்பப்பை, பார்ப்பனிய சித்தாந்தங்கள், மறறும் எந்தெந்தக் கொள்கைகளைக் கொண்டு நாம் வாழ்ந்தால் எந்தவொரு தனி மனிதனுக்கும் எல்லா மனித உரிமைகளையும் அடையமுடியும் என்று நம்பினேனோ… அவை அனைத்துக்கு-மான சிந்தனைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே விதையிட்டிருந்தார் இந்தக் கிழவர்.

“என்னைப் போல் ஒருவர்’’ “என் சிந்தனைகளைப் போல் ஒருவர்’’ என அன்றுவரை நான் கண்டிராத ஓர் ஆண் அன்றே வாழ்ந்தார் என்று அப்போதுதான் உணர்கிறேன். ஏதோ தன் வாய்ப் பேச்சுக்காகச் சொல்லாமல், சில கவிதைகள் மட்டும் எழுதி புனிதப்படுத்தாமல் தன் நோக்கங்கள் செயல்பாட்டில் கொண்டுவர தன் வாழ்கையையே அர்ப்பணித்த இம்மனிதரைக் கண்டு இப்படியும் ஓர் ஆண்மகன் வாழ்ந்திருக்க முடியுமா என நெகிழ்கிறேன்.

என் பெற்றோர், என் குடும்பம், நான் வாழும் சமுதாயம், இந்நாடு, நான் கற்ற கல்வி எனக்கு அளிக்காத சுதந்திரப் பார்வையை  அப்போது நன்றாகவே உணரத் துவங்கினேன். சம்பந்தமே இல்லாது எப்போதோ எங்கேயோ வாழ்ந்த ஒரு தனிநபர் எப்படி இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்? என் நெருங்கிய உறவுகள், சுற்றாரைக் கண்டு விழித்துக்கொள்ள இயலாததை ஒரு தனிமனித வரலாறு எப்படி இவ்வளவு ஊக்கத்தை அளிக்கிறது? இன்னொருவனை சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும், மதம், ஜாதி, குலம் என்று விதித்த அடையாளங்களைச் சுமந்துதான் ஆகவேண்டும் எனக் கற்பிக்கப்பட்ட கோட்பாடுகளைத் தளர்த்தி அச்ச வலையிலிருந்து வெளியேற ஏதுவாகத் தோன்றுகிறது. மனதுக்குத் தெளிவும் நம்பிக்கையும் சுதிந்திர உணர்வும் பல மடங்கு வளர்கிறது.

வாழ்க்கை எல்லோருக்குமானது என்று கூறிய புராணங்களை எழுத்து வடிவத்தில்தான் பார்த்துள்ளேன். ஒரு தனி மனிதராய் இந்தப் புராணங்களில் ஊறிச் சலவை செய்த மூளைகளை, படிப்படியாகக் கேள்விகள் கேட்கத் தூண்டி, அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர் கடந்த ஒவ்வொரு அனுபவங்களிலிருந்தும் அதன் வாயிலாக வெளிப்படும் மாற்றங்களைக் கொண்டு, மக்களோடு எவ்வாறெல்லாம் பயணம் செய்தார் என்பதை சுலபமாகப் புரிந்து கொள்கிறேன்.

அவருக்குக் கிளர்ச்சி மனப்பான்மை  எதற்காகத் தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்தால் அதற்கான பதிலும் ஒன்றே. சமுதாயத்தில் மனித குலத்தில் அளவில்லா ஏற்றத் தாழ்வுகளைச் சகித்துக்கொள்ள முடியாத அந்த “மனிதநேய” எழுச்சிதான் காரணம். எந்தக் கற்பித்தலும் இல்லாமல், தானே தன் சுயசிந்தனைகளை வைத்துச் செதுக்கிய ஒரு மனித நேயத்தைப் பார்க்க யாருக்குத்தான் வியப்பாக இருக்காது!

ஒருபுறம் கயவர்களோடும் மறுபுறம் அறியாமையில் தவித்துக் கொண்டிருந்த மூடநம்பிக்கைக் கைதிகளோடும் இவர் தொடர்ந்த போராட்டங்கள், கடல்கடந்த சவால்.

அதையும் தனது எளிமையான பேச்சு மொழியில் மக்களிடம் தன் கருத்துகளை இயல்பாகப் பகிர்ந்து மாற்றங்களை உருவாக்க முயற்ச்சி எடுத்திருக்கிறார்.

என் தனிப்பட்ட வாழ்கையை ஒப்பிட்டுப் பார்த்தால்…

எனது மூன்றாம் தலைமுறை மூதாதையோர் “அன்று ஏன் களைவெட்டி, ஆடுமாடு மேய்த்து, ஏர் ஓட்டி, பயிர் வளர்க்க சேற்றில் கால் வைத்தால்தானே கஞ்சிக்கே வழி என்ற கேள்விக்கும், இன்று என் குழந்தைகள் உலகில் எந்த மூலைக்கும் சென்று பட்டப் படிப்பு பயில முடியும் என்ற நிலைமைக்கும் இந்த நூறு ஆண்டுப் பயணத்தைப் பின்னோக்கி கவனித்தால் “இந்தக் கிழவரின் பங்கு என்ன?’’ என்று உறுதியோடு முடிச்சுப் போட முடிகிறது.

இந்தப் பயணம், நிலை மாற்றம்  என்னைப் போல் பல குடும்பங்களை இதில் உள்ளடக்கும். இன்னும் உள்ளடங்காதவர் பலப்பலர் என்பது என் வருத்தமும்கூட. இந்த நிலை மாற வேண்டுமானால் வரும் தலைமுறைகளுக்கும் இவர் கருத்துகள் மிக மிக அவசியம் என்பேன் _ குறிப்பாக சிறுமிகளுக்கு.

எவ்வளவுதான் மக்கள் எழுச்சி பெற்றாலும்…

சமுதாயத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த சட்டங்கள் அவசியம் என்ற விவேகமும் இவருக்குத் தெளிவாகத் தென்பட்டுள்ளது.

சமூகநல சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக அன்றைய காலத்தில் காற்று முழுக்கப் பரவியிருந்த நஞ்சு “ஒடுக்குமுறை”. பாகுபாடுகளை அகற்றும் சட்டத்தை யாரெல்லாம் முன்னெடுத்தனரோ, அம்பேத்கரின் அரசமைப்பு சட்டம் உருவாக்கம் முதல் டாக்டர் முத்துலட்சுமியின் தேவதாசி ஒழிப்பு வரை இவரும் இணைந்து சட்டங்களை வகுக்கத் துணைநின்றுள்ளார்.

மக்கள் பார்வையில் இவர் யார் என்று என்னைக் கேட்பின், ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கைத் தரத்தை _ சுதந்திரத் தன்மையை _ சுயமரியாதையை மேம்படுத்துபவராக வாழ்ந்தார் என்றும், “மனிதத்துக்காகவே வாழ்நத ஓர் அபூர்வ மனிதர்’’ என்றும்தான் முன்னிருத்த முடியுமே தவிர, இவரை ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தோ அரசியல்வாதிகளுடன் கோத்தோ கடவுள் மறுப்பாளராகவோ நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை.

திருக்குறள் மற்றும் ஆத்திசூடி இலக்கியங்-களில் அறம் குறித்த வாழ்க்கை நெறிகள், உளவியல் நுணுக்கங்களை எழுத்தால் எடுத்துரைத்தார்கள் என்றால்… இவரோ  உளவியல் சிக்கல்களை ஆராய்நது, மனிதநேயம் என்னும் தீர்வை நோக்கி, அறத்தின் அனைத்துப் பண்புகளையும் வாழ்ந்தே மெய்ப்பித்தார்.

ஒட்டுமொத்தத்தில் ஒரு தனிமனித வரலாற்றைக் கண்டு ரசித்தேன், வியப்படைந்தேன்  என்றெல்லாம் கூறுவதைத் தாண்டி பொறாமைப்படுகிறேன் என்றுதான் கூறத் தோன்றுகிறது.

அந்த மனிதநேயத்தைக் கண்டு அளவுகடந்த பொறாமை.

எப்படி முடிந்தது?

ஆணாய்ப் பிறந்த ஒவ்வொருவனும், தனக்கு பிறப்பாலேயே ஆண் பாலினால் வரும் சலுகைகளைப் பயன்படுத்தி, ஆதிக்கத்தைக் கையிலெடுத்து, சுயநலத்தோடு வாழும் சமுதாயத்தில், நேர்மாறாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவே போராடி, முழு வாழ்க்கையையும் பெண்களின் வலியை உள்வாங்கி, ஒரு பெண்போலவே சிந்தித்து, எண்ணற்ற முயற்சியால் பெண்ணியவாதி யாகவே அர்ப்பணிக்க எப்படி முடிந்தது?

பொருள் வசதியோடு உயர்ஜாதியில் பிறந்தும் சகமக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்து,  ஒடுக்குமுறைகளை ஒவ்வொரு நாளும் எதிர்த்து சமூகநலத் திட்டங்களுக்காகவே கடைசி நாள் வரை, விடாமுயற்சியோடு கைத்தடியும் மூத்திரப் பையுமாய், நாடெங்கும் அலைந்துதிரிந்து, தெருவிலும், சாக்கடை ஓரங்களிலும் சிறைச்சாலையிலும், கிடைத்த 94 வயதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, காலத்தை சற்றும் வீணாக்காமல்  எப்படிப் போராட முடிந்தது?

சல்லடை போட்டுத் தேடினேன்.

ஏதாவது குறைகள்? எங்காவது கிடைக்குமா? 

என் பார்வைக்கு எட்டியது, சில வெற்றிடங்கள் மட்டுமே!

“பெண் ஏன் அடிமை ஆனாள்?’’ என்று பல திசைகளில் வலியுறுத்தியவர்க்கு ஆண்களை ஒழுங்குபடுத்துவதற்கான தேவையிருந்தும் தன்னிச்சையான செயல்களை இதற்காக முன்னெடுத்ததாக எனக்கு அகப்படவில்லை.

சமத்துவமும் சகோதரத்துவமும் அடைய ஆண்களை ஒழுக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில்தான் அவர் வாழ்ந்த காலமும் இருந்துள்ளது. ஜாதி வேறுபாடின்றி ஆண்களும் பெரும்பாலானோர் பார்ப்பனிய சிந்தனையில்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு சக தோழனாய் “பெண்களை சுதந்திரமாக வாழவிடாமல் ஏன் ஒடுக்குறீர்கள்’’ என்று ஆண்கள் தரப்பிலிருந்து சிந்தனைகளைத் தூண்டும் வகையில் இவர் குரலை நான் காணமுடியவில்லை.

ஆனால், “பெண்ணுரிமை என்பது ஆண்கள் கொடுக்க வேண்டியதோ, பெண்கள் பெற வேண்டியதோ அல்ல. அது பெண்ணே எடுத்துக் கொள்ள வேண்டியது’’ என்ற கொள்கையுடையவர் என்பதால், ஆண்களை நோக்கி அவர் குரல் எழுப்பவில்லையென்பது புரிந்தது.

இவ்வளவு உழைப்பை சமூகநலனுக்காகச் செலுத்தியவர் தன் பொருள்களின் மீதா மோகம் கொள்ளப்போகிறார்? இல்லவே இல்லை. அதையும் மக்கள் தொண்டுக்காகவே செலவிடுகிறார். இவர் அகராதியில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கே என்றும் முதலிடம். அக்காலக் கட்டத்தில் பல லட்சம் மற்றும் பல ஏக்கர் நிலம் கொடையளிப்பது என்பது மிகப் பெரிய அறத்தொண்டு. தன் சொத்துகளை அரசிடம் ஒப்படைத்து வசதியில்லாதோர் பயன்பெற “திருச்சியில் கல்லூரி’’யும் “ஈரோட்டில் அரசு மருத்துவமனை’’யையும் துவங்கி வைக்கிறார்.

ஈ.வெ.ராமசாமியை “பெரியார்’’ மற்றும் “சமூகநீதிப் போராளி’’ எனப் புகழாரம் சூட்டுவது மட்டும் என் எண்ணமென்றால் நான் இவரை நன்றாக ஆராயவில்லை என்பேன்.

ஆக என்ன செய்ய வேண்டும்?

என்னால் இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு எந்த விதத்தில் பங்களிக்க முடியும்?

கடைகோடி குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்பை கொண்டு சேர்க்க முடியுமா?

வேலைவாய்ப்பு வழங்க முடியுமா?

இன்று நான் அடைந்த சலுகைகளை சக மனிதர்களுக்கும் கொண்டு சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

கண் முன் தினமும் காணும் அவலங்களைப் பார்த்தும் பார்க்காததுமாய்க் கடந்து போகாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது?

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் உரிமைகளைப் பறித்தால் என்ன செய்ய வேண்டும்?

பெண்களிடம் தனக்கே அறியாத அடிமைத்தனத்தை எப்படி தட்டிப் பார்ப்பது?

இதுபோன்ற கண்ணோட்டத்தில் அண்மைக்காலமாக தினந்தோறும் இந்தச் சிந்தனைகள் என் மனதில் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன.

சக மனிதர்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களைப் பேணிக்காக்க இதுபோல் மனிதர்களின் வரலாறு எப்படி உந்துதல் அளிக்கிறது என்பதையே உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்.

இதன் பாதையில் நானும் பயணம் செய்ய விரும்புகிறேன்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *