அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (277)

செப்டம்பர் 16-30,2021

என் பொதுவாழ்வு ஒரு திறந்த புத்தகம்!

கி.வீரமணி

சென்னையிலிருந்து வெளிவரும் தினசரி செய்தி நிறுவனம் 22.2.1997 அன்று ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு எனக்கும், கழகத்திற்கும் அவப்பெயர் உண்டாக்க முயற்சித்தது.

“ஜெ. பெற்ற 3 லட்சம் டாலர் வீரமணிக்குத் தொடர்பா? சி.பி.அய். விசாரணை’’ என்ற தலைப்பிடப்பட்டு அந்தச் செய்தி இருந்தது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் 25.2.1997 அன்று அறிக்கை வெளியிட்டோம். அதில், “ஒரு விசாரணையை சி.பி.அய்.யோ அல்லது அதுபோன்ற வேறு எந்த அமைப்போ மேற்கொண்டு எவரையும் விசாரிப்பதைப் பற்றி நான் துளிகூடக் கவலைப்படவில்லை.

இது என்னையும், எனது இயக்கமாகிய தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத்தினையும் திட்டமிட்டு அழிக்கவோ அல்லது களங்கப்படுத்தவோ, சில அரசியல்காரர்களோ அல்லது சிலர் வேண்டு-மென்றே விசாரணை அதிகாரிகளுக்கு மொட்டை மனுக்களைஅனுப்பியோ இப்படி ஒரு செய்தி பரப்ப செய்யப்படும் விஷமத்தன முயற்சியாக இருக்கக் கூடும்.

எனக்கோ, உள்நாட்டில், வெளிநாட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது என்பதோடு, அப்படி சட்டப்படி தக்க ஆதாரங்களோடு சி.பி.அய். போன்ற அமைப்புகள் நிரூபித்தால் எந்தத் தண்டனையும் ஏற்று பொதுவாழ்வை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன்.

எனது 55 ஆண்டுகால பொதுவாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். தந்தை பெரியார் தொண்டனான எனது நடவடிக்கைகளைப் பற்றி உலகின் எந்த பாகத்தில் உள்ள எவரிடத்திலும் விசாரணை மேற்கொண்டு உண்மைகளை எவரும் அறியலாம்’’ என கழகத்தின் உண்மை நிலையை வெளியிட்டோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் நிலையில், அந்த இடத்திற்கு சீனியாரிட்டி அடிப்படையிலும், சமூகநீதி அடிப்படையிலும் ஜஸ்டிஸ் திரு.கே.ஏ.தணிகாசலம் அவர்களை நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 4.3.1997 அன்று அறிக்கை வெளியிட்டோம். அதில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் நீண்ட நெடிய 125 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் ஒரு தாழ்த்தப்பட்டவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட வரலாறே இல்லை என்பதால், அய்க்கிய முன்னணி அரசு பொறுப்பு நீதிபதியாக (ளியீயீவீநீவீணீtவீஸீரீ சிலீவீமீயீ யிustவீநீமீ) ஆக ஓர் ஆற்றல்வாய்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர் வருவது பொருத்தமானது. அதற்கான முழு முயற்சிகளை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியும், ஒன்றிய அரசு குறிப்பாக பிரதமரும், சட்ட அமைச்சரும் முயற்சிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்’’ என குறிப்பிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக 14.3.1997 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில், “உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதி நியமனம் உடனடியாக தேவை எனவும், தலைமை நீதிபதியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் திரு. கே.ஏ.தணிகாசலம் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 26ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தோம். இதற்குப் பலன் கிடைக்கும் வகையில், 20.3.1997 அன்று 125 ஆண்டுகால வரலாற்றில் புதிய திருப்பமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் கே.ஏ.தணிகாசலம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டதாக குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார். இது கழகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. கழகக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியைத் தந்தது.

தஞ்சையில் கழகத் தோழர்களின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று 5.3.1997 அன்று நடத்திவைத்தேன். பாபநாசம் கு.இதயநேசன் _ செல்வமணி ஆகியோரின் செல்வனும், பாபநாசம் நகர தி.க. தலைவருமாகிய இதய.காமராசுக்கும், திருவாரூர் என்.சண்முகசுந்தரம் _ சுகுணா ஆகியோரின் செல்வி எஸ்.மாலதிக்கும்; அதேபோல  இதய.காமராசு அவர்களின் சகோதரர் இதய.கனகராசுவுக்கும், தஞ்சாவூர் எம்.துரைசாமி _ தையல்நாயகி ஆகியோர்களுடைய செல்வி டி.ராஜராஜேஸ்வரிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா தஞ்சை தொல்காப்பியர் சங்கம் கிரேசி ஹால் திருமண மண்டபத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தைக் கூறச் செய்து நடத்தி வைத்தேன்.

சிறப்புரையாற்றுகையில், பெண்ணுரிமை, பகுத்தறிவுக் கருத்துகளுக்கு பெண்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பிருந்ததை அவர்கள் சிரித்து, உணர்ந்து கைதட்டி கூர்ந்து கேட்டதன் மூலம் அறிய முடிந்தது. இந்த நிகழ்வை அடுத்து இதே பகுதியில் நடைபெறும் முக்கிய நிகழ்விற்குப் புறப்பட்டேன்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய முழு உருவச் சிலை திறப்பு விழா 5.3.1997 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவாக திருப்பாலத்துறை என்னும் இடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். விழாவிற்கு அப்பகுதியில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் ஏராளமான அளவிற்கு கலந்து  கொண்டனர். மேடையில் இருந்தவாறே திரு.ஜி.கே.மூப்பனார் அவர்கள் மின்சாரப் பொத்தான் மூலம் சிலையைத் திறந்து வைத்தார். அப்போது விண்ணைப் பிளக்கும் அளவுக்கு அதிர்-வேட்டுகள் வெடிக்கப்பட்டன. மக்களுடைய வாழ்த்தொலி முழக்கங்களும், கைத்தட்டல்களும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து நண்பர் திரு.ஜி.கருப்பையா மூப்பனார் உரையாற்றுகையில், “அய்யா அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகின்றேன். அய்யா அவர்கள் காங்கிரஸ்காரராக இருந்து தன்னுடைய பொது வாழ்க்கையைத் தொடங்கினார்கள். அந்த வகையில் அய்யா அவர்களுடய சிலையைத் திறப்பதிலே எனக்குப் பொருத்தமுண்டு என்று நான் கருதுகிறேன். தமிழ்நாட்டிலே சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டவர்களிலே அய்யாவுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ்நாட்டிலே பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நிற்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்று சொன்னால் அதற்கு அய்யா அவர்கள்தான் காரணம். அதை யாரும் மறக்க முடியாது. அய்யா அவர்கள் இந்தச் சமுதாய மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த-வில்லை என்று சொன்னால், இன்றைய தினம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. தமிழ்ச் சமுதாயம் இதை மறக்கவே மறக்காது. தமிழ்நாட்டின் சரித்திரத்தை எழுதுகின்றவர்கள் இன்றைக்கு எழுதினாலும் சரி, அய்யா பெரியார் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைக் கைதூக்கி விட்டவர் என்று எழுதித்தான் தீருவார்கள். நூற்றாண்டுகளுக்குப் பின்பும் பெரியார் நினைவை நன்றியோடு சமுதாயம் போற்றும்!

அவருடைய வாழ்வு என்பது மனித-நேயத்தைக் காட்டுவது, அன்பைக் காட்டுவது, சுயமரியாதையைக் காட்டுவது என்று பல சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்’’ என்பன போன்ற பல கருத்து-களையும், அவர் அய்யாவிடம் கண்ட பண்புநலன்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். விழாவில் சிறப்புரையாற்றுகையில் அன்றைய அரசியல் சூழல் குறித்தும், கழகம் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள் குறித்தும் உரை நிகழ்த்தினேன்.

திருச்சியில் அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாளையொட்டி 16.3.1997 அன்று வெல்லமண்டித் தெருவில் திராவிடர் கழக மகளிரணி சார்பாக பாலியல் நீதி மாநாடு, பெண்ணுரிமை மாநாடு, கழக மகளிரணி மாநாடு என முப்பெரும் மாநாடுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டையொட்டி கருத்தரங்கம், மந்திரமா தந்திரமா? பட்டிமன்றம், வீதிநாடகம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் மகளிரணியால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தீர்மான அரங்கில் இந்து சட்டத்தில் ‘வைப்பாட்டி’ என்ற பதப் பிரயோகம் இருக்கக் கூடாது, விபசாரத் தடைச் சட்டத்தில் பெண் மட்டும்தான் குற்றவாளியா? குழந்தைக்குத் தாயார் இயற்கைக் கார்டியனே, உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதி நியமனம் தேவை! போன்ற முக்கிய தீர்மானங்கள் பெண்களின் கரவொலியுடன் நிறைவேற்றப்-பட்டன.

இம்மாநாட்டில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், எங்களால் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்க்கப்பட்ட ஈ.வெ.ரா.ம.அசோக்மணிக்கும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மாவட்டம் கீழப்பாலையூரைச் சார்ந்த கண்ணையன், முனியம்மாள் ஆகியோரின் செல்வன் க.வீரையனுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன். அப்போது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளில் இருபதாவது பெண்ணுக்கு நடைபெறுகின்ற மண விழா இது எனக் கூறி, உணர்ச்சிவயப்-பட்ட நிலையில் கண்கலங்கினேன்.

பல்வேறு மாவட்ட கழக மகளிரணியினர் ஒருங்கிணைந்து அவர்கள் சார்பாக தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுப் பரிசினை பல்லாயிரக்கணக்கானோர் கைத்தட்டல்களுக்-கிடையே வழங்கிச் சிறப்பித்தனர். மாநாட்டு உரையில் தந்தை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளை எடுத்துக் கூறினேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம் _ அதுவும் மகளிர் கூடியிருந்தது சிறப்பான ஒன்றாக அமைந்தது.

தமிழ்நாட்டில் அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்வதில் இடஒதுக்கீடு அளிப்பது-பற்றி திராவிடர் கழகம் சார்பில் 18.3.1997 அன்று அறிக்கை வெளியிட்டோம். அதில்,

“வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் திரு.பி.வெங்கடேசன், சென்னை உயர்நீதி-மன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

“தமிழ்நாடு முழுவதும் மொத்தம் ஆயிரம் அரசு வழக்குரைஞர்கள் பதவி உள்ளன. தமிழ்நாடு அரசுதான் இவர்களை நியமிக்கிறது. ஆயிரம் பேரில் 4 பேர்தான் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் இருந்து கீழ் நீதிமன்றங்கள் வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் உள்ளனர். அவர்களை அரசு வழக்குரைஞர்-களாக நியமிக்க அரசு ஒதுக்கீடு செய்யவில்லை’’ என்று அந்த ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“இந்தியா முழுவதும் எல்லா அரசுப் பதவிகளிலும் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான ஆணையம் கூறியுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாகச் செயல்படுகிறது. ஆகவே, அரசு வழக்குரைஞர்களை நியமிப்பதில் இருந்து தமிழ்நாடு அரசைத் தடுக்க வேண்டும்’’ என்றும் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் திரு.ஆர்.சந்திரசேகரன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். நீதிபதி இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ள 69 சதவிகித அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டியதுதான் சரியானதும், சட்டப்படியானதுமாகும்.

9ஆவது அட்டவணையின் பாதுகாப்பை 76ஆவது சட்டத் திருத்தத்தின்படி பெற்று இன்றுவரை உச்சநீதிமன்றத்தாலும்கூட தவறு என்று சொல்லப்படாத சட்டமாகும்.

மனுதாரர் குறிப்பிட்டுள்ளபடி தாழ்த்தப்-பட்ட சமுதாயத்தில் ஏராளமான தகுதியும் _ திறமையும் _ அனுபவமும் வாய்ந்த வழக்குரைஞர்கள் இருக்கும்பொழுது அவர்களில் இருந்து விகிதாசாரப்படி அரசு வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களிடம் இருந்தும் உரிய அளவில் நியமனம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

முதலமைச்சரும், சட்ட அமைச்சரும் இதில் கவனம் செலுத்தி சமூகநீதி அடிப்படையில் அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தோம்.

தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஏழாவது சர்வாதிகாரி அய்யா புவனகிரி நமசிவாயம் மறைந்த செய்தி கழகத்தினருக்கு மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. அவரின் மறைவையொட்டி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,

“இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்! நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!’’   என்று 1938இல், தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் குரல் கொடுத்து முழங்கியபோது, ஆச்சாரியார் ஆட்சி திணித்த கட்டாய இந்தியை எதிர்த்து ஒரு மாபெரும் கிளர்ச்சி வெடித்தது. பல முக்கிய தலைவர்கள் சர்வாதிகாரிகளாக அய்யா அவர்களால் நியமிக்கப்பட்டார்கள்.

அந்த வரிசையில் ஏழாவது சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டு அன்றுமுதல் தனது 86 வயது தாண்டிய நிலையிலும் ஓயாது உழைத்த கருஞ்சட்டை பெரியார் பெருந்தொண்டர் புவனகிரி நமசிவாயம் அவர்கள் 30.3.1997 அன்று மறைவுற்றார் என்ற செய்தி நமக்குப் பேரிடி போன்ற செய்தியாகும்.

இந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரிகளுள் கடைசியாக மறைந்த பெருமகன் இவரேயாவார்.

ஒவ்வொரு கிளர்ச்சியிலும் இறுதிவரை ஈடுபட்ட பெரியாரின் போர்வீரர்! இயக்கத்தின் வளர்ச்சியிலும், கொள்கை பரப்புவதிலும் எப்போதும் தீராத ஆர்வலராக அவர் திகழ்ந்தார்.

அந்த முதுபெரும் பெரியார் பெருந்-தொண்டர் இன்று ‘வரலாறு’ ஆகிவிட்டார் என்று நினைக்கையில் நமது நெஞ்சம் கனக்கிறது; வேதனையால், துன்பத்தால், துயரத்தால் துடிக்கிறோம்!

25.1.1994 அன்று சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்கச் செய்து, அவருக்கு இயக்கத்தின் சார்பில் விருது அளித்துச் சிறப்புச் செய்யப்பட்டது.

நிறை வாழ்வு வாழ்ந்த _ களம் பல கண்ட _ கருஞ்சிறுத்தைத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்!

அவர் மறைவால் பெருந்துயரத்துக்கு ஆளாகி இருக்கும். அவர்களின் குடும்பத்-தாருக்கும் இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.

சென்னை புதுவண்ணையில் பிரம்மாண்டமான மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், பெரியார் பெருந்தொண்டர் சிலை திறப்பு, பொதுக்கூட்டமும் 5.4.1997 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு டாக்டர் நாவலர் கலந்துகொண்டு சிறப்பித்தார். முன்னதாக பெரியார் மாளிகையில் உள்ள சென்னை மாவட்ட தி.க. தலைவர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் க.பலராமன் அவர்களது சிலையைத் திறந்து வைத்தேன். அதனைத் தொடர்ந்து டாக்டர் நாவலர் அவர்கள் க.பலராமன் நினைவு மருத்துவ-மனையைத் திறந்து வைத்தார். கழகத்தினரின் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்திற்குப் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பெரு.இளங்கோ தலைமை வகித்து உரையாற்றினார். 69 சதவிகித இடஒதுக்-கீட்டைக் காப்பாற்ற சிறைசென்ற கழகத் தோழர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டிப்  பெருமைப்படுத்தினோம். டாக்டர் நாவலர் அவர்கள் 69 சதவிகித இடஒதுக்-கீட்டைப் பாதுகாக்க வேலூர் சிறை சென்ற எனக்கு கழகத் தோழர்களின் சார்பிலும், விழாக்குழுவினர் சார்பிலும் அனைவருடைய கைத்தட்டல்களுக்கிடையே சால்வை அணிவித்துப் பாராட்டினார். எனது உரைக்குப் பின் நாவலர் அவர்கள் நீண்டதொரு பகுத்தறிவு உரையாற்றினார். இந்த நிகழ்விற்கு சென்னை-யின் பல பகுதியிலிருந்து பெருவாரியான கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர்களின் வறுமை நிலைபற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்களை ஆதரித்துப் பேசினர். அவர்களுக்கு முதலமைச்சரும் விளக்க மளித்திருந்தார். அந்த நிலையில் 7.4.1997 அன்று விடுதலையில் அறிக்கையொன்றை வெளியிட்டோம். அதில், “ஏழை _ எளிய _ ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளின் மீது இல்லாத அக்கறை இந்தத் தீட்சிதர்பால் சென்றதற்கு என்ன காரணமோ? பொதுமக்-களும், பக்தர்களும் இந்தக் கோயில் நிருவாகம் தீட்சிதர்களால் நன்கு பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்ததன் பேரில், துறை அலுவலர்கள் ஆய்வு செய்து குறைகளைச் சுட்டிக்காட்டியும், நிருவாகத்தில் இருந்த தீட்சிதர்கள் அந்தக் குறைகளைக் களையாமல் இருந்தனர். மேலும், நீதிமன்றமும் 250 பொது தீட்சிதர்களின் குடும்பங்களின் தனிப்பட்ட நலனைவிட பொது நலனைக் காப்பது முக்கியமானதொன்று என கூறப்பட்டுள்ளது. தீட்சிதர்களுக்கு வருமானம் இல்லையென்றால் வருமானம் இல்லை என்ற கணக்கைக் காட்டட்டும். இதில் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் தங்கள் பொறுப்பை எக்காரணம் கொண்டும் தட்டிக்கழித்துவிட முடியாது. அச்சட்டத்தின் நோக்கம், “கோயில் பெருச்சாளிகளை’’, “கோயிற் பூனைகளை’’ வெளியேற்றி சரியான வரவு _ செலவு கணக்குப் பார்ப்பதுதானே! சிதம்பரம் கோயில் எப்படி தீட்சிதர்களின் தனிக்கோயில் (Private Temple) ஆகும்? அரசு இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது’’ என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டோம்.

மலேசியத் திருநாட்டில் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவராகப் பல ஆண்டுகாலம் சிறப்பாகத் தொண்டாற்றி உழைத்து பல கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் அமைத்து அரும்பாடுபட்ட பெரியார் பெருந்தொண்டர் ‘திருச்சுடர்’ என்று பாராட்டப்பட்ட அருமைத் தோழர் மானமிகு கே.ஆர்.இராமசாமி அவர்கள் 10.4.1997 அன்று திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு நாம் மிகவும் துடிதுடித்துப் போனோம்!

செய்தியை நம்பவே முடியவில்லை. அவரது அயராத உழைப்பு மலேசியாவில் திராவிடர் கழகம் மிகவும் சிறப்பாக வளர்வதற்குக் காரணமாக அமைந்தது.

பழகுவதற்கு மிகவும் இனிய சுபாவம் கொண்டவர். பல பொதுநலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்தவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற மறைந்த நமது தலைவர்களின் பேரன்புக்குப் பாத்திரமானவர்.

தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள், தமிழ் அன்பர்கள், ஆர்வலர்கள் என யார் மலேசியாவிற்குச் சென்றாலும் அவர்களை அன்பொழுக பண்புடன் வரவேற்று உபசரிக்கத் தவறாத பான்மையர்!

புலவர்களும் பெருமக்களும் அவரை மிகவும் அறிவார்கள். தமிழ்நாட்டுத் திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை திடீரென இழந்துவிட்டோமே என்றே நினைத்துக் கதறுவர்.

சகோதரர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் மறைவினால் மலேசியாவில் இருந்த ஒரு அங்கத்தினையே இழந்துவிட்டதாகவே கருதி எல்லையற்ற வேதனையும் துயரும் கொள்கிறேன்!

அவரது மறைவினால் மலேசியா திராவிடர் கழகம் ஒரு தூணை இழந்தது; மலேசிய தமிழினம் ஒரு நல்ல துணையை இழந்தது. தமிழ்நாடு ஒரு நல்ல பகுத்தறிவுத் தூதரை இழந்தது.

அவருக்கு நமது இயக்கத்தின் சார்பில் நமது வீரவணக்கத்தைத் தெரியப்படுத்திக் கொள்வ-தோடு, அவரது மறைவால் கரைகாணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள அவரது துணை-வியார், செல்வங்கள், குடும்ப உறுப்பினர்கள், மருமக்கள் எல்லோருக்கும் தமிழ்நாடு திராவிடர் கழகச் சார்பாக ஆழ்ந்த இரங்கல்!

மலேசிய திராவிடர் கழகத்தின் அதன் பொறுப்பாளர்கள் தலைவர் ரெ.சு.முத்தையா முதல் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டு ஆற்றுப்படுத்திக் கொண்டோம்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *